வேட்டையாடு விளையாடு 20: ஒரு கதை பல படங்கள்

வேட்டையாடு விளையாடு 20: ஒரு கதை பல படங்கள்
Updated on
3 min read

1. ஒரு கதை பல படங்கள்

ஹாலிவுட் இயக்குநர் ப்ராங்க் காப்ரா எடுத்து ஏழு ஆஸ்கர்களை வென்ற வெற்றிப்படம் ‘இட் ஹேப்பன்ட் ஒன் நைட்’. உலகம் முழுவதும் வெவ்வேறு பெயர்களில் மறுஆக்கம் செய்யப்பட்ட சில படங்களில் இதுவும் ஒன்று. ஹாலிவுட்டிலேயே மீண்டும் ‘ரோமன் ஹாலிடே’ ஆனது. இதுதான் ஏவிஎம்மின் தயாரிப்பில் ராஜ் கபூர், நர்கிஸ் நடித்து இந்தியில் ‘சோரி சோரி’ ஆனது. எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்து தமிழில் ‘சந்திரோதயம்’ ஆகியது. கோடிஸ்வரக் குடும்பத்தின் ஒரே வாரிசான நாயகி, திருமண நிச்சயதார்த்தத்துக்கு முந்தைய தினம் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

உண்மையான அன்பைத் தேடி வெளியே போகும் அவர் ஒரு லட்சிய மனிதனைச் சந்திக்கிறார். 1966-ல் இயக்குநர் கே. சங்கர் இயக்கத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து வெளியான இந்த வெற்றிப்படம் தம்பு அவர்களின் சிறந்த ஒளிப்பதிவுக்காகப் பேசப்பட்டது. குறிப்பாக, எம். என். நம்பியாருக்கும் எம்ஜிஆருக்கும் நடக்கும் க்ளைமாக்ஸ் சண்டை குறைந்த ஒளியில் படம்பிடிக்கப்பட்டது. இதே கதையுடன் நதியா, மோகன் நடித்து 1986-ல் வெளியாகிப் பெரும் வெற்றிபெற்ற சினிமா எது?

2. இந்திப் படத்தில் ஆஸ்திரேலிய நடிகை

பாலிவுட்டில் குழந்தையாக நடைபயின்று கொண்டிருந்தபோது இந்தியப் பெண்கள் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடிக்கத் தயங்கிக்கொண்டிருந்த காலம் அது. கையில் சவுக்குடன் கவர்ச்சிகரமான உடையுடன் இந்திய ஆண்களை அடித்துத் துவைத்து துவம்சம் செய்யும் சாகச நாயகியாக பாலிவுட்டில் அறிமுகமானவர் ஆஸ்திரேலியா நடிகை மேரி ஆன் இவான்ஸ். பணக்காரர்களைக் கொள்ளையடித்து ஏழைகளை வாழவைக்கும் முதல் பெண் ராபின்ஹூட்டாக அவர் அறிமுகமான படம் ‘ஹன்டர்வாலி’.

மேரி ஆன் இவான்ஸின் நடிப்புத் திறன், சண்டைத்திறனைப் பார்த்த தயாரிப்பாளர் ஜே.பி.எச்.வாடியா, படத்துக்கான பட்ஜெட்டை அதிகப்படுத்திக் காதல் காட்சிகளையும் பாடல்களையும் சேர்த்தார். நாயகியின் மீது இத்தனை நம்பிக்கை வைத்தும் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணின் சண்டைகளும் அவரது கவர்ச்சிகரமான உடைகளும் இந்தியப் பார்வையாளர்களைக் கவருமா என்ற சந்தேகம் விநியோகஸ்தர்களிடம் இருந்தது.

அதனால் பலமாதங்கள் பெட்டியில் இருந்து தயாரிப்பாளராலேயே 1935-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. மேரி ஆன் இவான்ஸ்க்குத் தயாரிப்பாளர் கொடுத்த அடைமொழி எது?

3. காதலும் காமமும்

வெளிவந்தபோது தோல்விப்படமென்றாலும் மலையாளத் திரையுலகின் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக மதிக்கப்படும் இடத்தைப் பெற்றது 1987-ல் வெளியான ‘தூவானத்தும்பிகள்’. சிறந்த திரைக்கதை ஆசிரியரும் இயக்குநருமான பத்மராஜன், தான் எழுதிய ‘உடகப்போல’ என்ற நாவலை மையமாக வைத்து இயக்கிய சினிமா இது. இரண்டு வெவ்வேறு பின்னணிகளிலிருந்து வரும் பெண்களுடனான ஒரு ஆணின் காதல் அவனில் ஏற்படுத்தும் மாற்றங்கள்தாம் கதை. மோகன்லால் மலையாள சினிமா ரசிகர்களின் நினைவில் உறைந்த படங்களில் இதுவும் ஒன்று.

ராதாவாகவும் க்ளாராவாகவும் பார்வதி, சுமலதா நடித்த இத்திரைப்படத்தில் மழையும் பிரதான கதாபாத்திரம். காதலும் காமமும் ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை அழகாகச் சொல்லிய இப்படைப்பில் மலையாள பிரம்மச்சாரிகளின் மது கலாச்சாரம் யதார்த்தமாகப் பதிவானது. இப்படத்தின் பின்னணி இசை, மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் பயன்படுத்தப்பட்டது. அந்தப் படத்தின் பெயர்?

4. புகழ்பெற்ற குழந்தைகள் சினிமா

பார்வையற்ற தாயாலும் வறுமையான தந்தையாலும் வெளியில் விடப்படாமலேயே வளர்க்கப்படும் 11 வயது இரட்டைக் குழந்தைகளைப் பற்றிய உண்மைக்கதை தான் ‘தி ஆப்பிள்’. உலகப் புகழ்பெற்ற ஈரானியத் திரைப்பட இயக்குநர் மக்மல்பஃப்-ன் மகள் சமீரா மக்மல்பஃப் இயக்கிய முதல் படைப்பு இது. அதிகபட்சத் தணிக்கைக்குட்பட்ட ஈரானிய சினிமா குழந்தைகள் வழியாக எப்படிக் கதை சொல்கிறது என்பதை அறிவதற்கான படம் இது.

பெற்றோரின் சிறையிலிருந்து விடுதலையாகும் அந்தப் பெண் குழந்தைகளுக்கு வெளி உலகம் தரும் அனுபவங்களையும் நுட்பமாகப் பதிவுசெய்யும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை உண்மைச் செய்தி வெளியான நான்கு நாட்களில் தொடங்கினார் சமீரா. ஈரானில் மட்டுமல்ல; மத்தியக் கிழக்கு நாடுகளில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை இரண்டு குழந்தைகள் வாயிலாகக் காண்பித்த சமீரா மக்மல்பஃப்புக்கு இத்திரைப்படத்தை இயக்கியபோது என்ன வயது?
 

23chrcjRaviShankarright

5. இசைத் திருவிழாப் படம்

1967-ம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற மான்டிரி பாப்(montery pop) இசைத் திருவிழா, பாப் இசையின் புதிய அத்தியாயம் என்று சொல்லலாம். அந்தத் திருவிழாவை 16எம்எம் கேமராவில் ஆவணப்படமாக்கியவர் பென்னேபேக்கர். அமெரிக்கா, வியட்நாமின் மீது தொடுத்த ஏகாதிபத்தியப் போருக்கு எதிராகக் கிளர்ந்த ஹிப்பிகளின் திருவிழாவாகவும் இந்த ஆவணப்படத்தில் அக்காலகட்டம் பதிவாகியுள்ளது. வழக்கமான மசாலாத் தன்மையிலிருந்து ஹாலிவுட் சினிமா மாறி, யதார்த்தமாகக் கதை சொல்ல ஆரம்பித்திருந்ததன் தாக்கமும் இந்த ஆவணப்படத்தில் உண்டு.

இந்தியாவைச் சேர்ந்த இளம் சாஸ்திரியக் கலைஞர்களும் மேற்கத்திய பாப் இசைத் திருவிழாவில் பங்கேற்று கிழக்கும் மேற்கும் சந்தித்த அரிய நிகழ்ச்சி இது. இந்தியாவின் இசைக்கலைஞர் ஒருவருக்கு உலகளாவிய அறிமுகத்தைத் தந்தது இத்திருவிழா. அவர் யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in