

ம
ழையும் வெயிலும் மாறி மாறி ஆசீர்வதிக்கும் மலேசியாவின் 4-வது பெரிய மாநிலம் ‘பேராக்’. குளிர் மலை, வயல்வெளி, விவசாய பூமி, அழகுக் கட்டிடங்கள், வனப்புமிகு நதிக்கரை, வசீகரத் தீவு, மிளிரும் அரண்மனைகள் என இயற்கை வரம்பெற்ற நிலப்பிரதேசம். இயற்கை தனது எல்லா வண்ணங்களையும் குழைத்துகொண்டிருக்கும் அந்த மண்ணின் பெருமையை நம் தமிழ் திரைப்படங்களிலும் காட்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக சமீபத்தில் ஒரு சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தது அம்மாநில அரசு.
படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏராளமான சலுகை, தொடர்ந்து பல நாட்கள் அங்கேயே தங்கி படமாக்குவதற்கு சிறப்புச் சலுகை என ‘பேராக்’ அரசின் தாராள மயம், தமிழ் பட உலகைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அத்தனை பேருக்கும் இனிய வரமாக அமையும்.
‘பேராக்’ மாநிலத்தின் பெருமைமிகு அடையாளமாகக் கொண்டாடப்படும் சில இடங்களைத் தெரிந்து கொள் வோம்:
பத்துகாஜா என்ற இடத்தில் உயர்ந்து நிற்கிறது கெல்லீஸ் கேஸ்ட்டில் அரண்மனை. தமிழக கட்டிடக் கலையை பின்னணியாகக் கொண்டு உருவாகத் தொடங்கிய அரண்மனை இது. ஸ்காட்லாந்து கட்டிடக் கலை பொறியாளர் வில்லியம் கெல்லி ஸ்மித்.
தமிழகக் கட்டிடக் கலையின் மீதான காதலால் தமிழக கட்டிடக் கலைஞர்களை மலேசியாவுக்கு அழைத்துச் சென்று, நம்ம ஊர் செங்கல்லையும், மண்ணையும் கொண்டு 1890-களில் இந்த அரண்மனையை அமைக்கத் தொடங்கினார்.
இதனைத் தனது மனைவிக்கு அன்புப் பரிசாக அளிக்க திட்டமிட்டிருந்த நிலையில் மனைவி காலமானதால்... நிறைவுறாமல் நிற்கிறது அரண்மனை.
சுமார் 21 கி. மீ பரப்பளவில் மலேசியாவின் பூர்வீகக் குடிகள், தமிழர்கள், சீனர்கள் உட்பட 25 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த பங்கூர் தீவில் பிரதான தொழில் மீனைப் பதப்படுத்தி உலகம் முழுக்க ஏற்றுமதி செய்வதுதான்.
படப்பிடிப்புக்கு பஞ்சமில்லாத லொக்கேஷனாக விரியும் இந்தத் தீவில் 100 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய விமானத் தளம் சிறப்பு அடையாளமாக இன்றும் விரிந்திருக்கிறது.
ஆசிய அளவில் கொண்டாடப்படும் மூவி அனிமேஷன் பார்க் ஸ்டுடியோ இது. ஈப்போ பகுதியில் உள்ள இந்த அனிமேஷன் பார்க்கில் சர்வதேச அளவில் வேறு எங்கும் இல்லாத ஸ்பேஸ் ஷிப் ஹோட்டல் இருக்கிறது. 15 த்ரில்லிங் ரைடுகளுடன், 23 விதமான விளையாட்டுகளையும் உள்ளடக்கியது, மேப்ஸ். இதுவரை சினிமா படப்பிடிப்புகள் நடக்காத இந்த இடம் பவர்ஃபுல் பாடல் காட்சிக்கு ஏற்ற கலர்ஃபுல் இடம்.
1898-ல் ‘பேராக்’கை ஆண்ட சுல்தான் அஷ்லான் ஷா நினைவு இல்லம் இது. தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன சுல்தான் பயன்படுத்திய பொருட்கள் விழிகளை விரிய வைக்கின்றன. முழுக்கவும் இயற்கை உபரகரணங்களைக் கொண்டே அழகு சொட்டும் அரண்மனையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெனாங்க் விமானத்தளத்தில் இருந்து 90 நிமிட பயண நேரத்தில் அமைந்திருக்கிறது ‘தைப்பிங்’ கார்டன். வாரத்தில் 2 நாட்கள் மழை கொட்டும் இந்தப் பகுதியெங்கும் ஏரிகளும் புல்வெளிகளும் ஹைக்கூ கவிதை பொழிகின்றன. இதன் அருகிலேயே 100 ஆண்டுகள் பழமை சிந்தும் ‘தைபிங்’ வனவிலங்குகள் சரணாலயம் நம்மை ‘வாவ்’ சொல்ல வைக்கிறது. அந்த உயிரியல் பூங்காவில் நைட் ஷஃபாரி மிகவும் சிறப்பு.
பல நூறாண்டுகளுக்கு முன்பே இயற்கையாக உருவான மலைக் குகைதான் ‘டெம்பரங் கேவ்’. போர்க்காலங்களில் மக்களைப் பாதுகாக்க மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட வரலாற்றுப் பின்னணியை கொண்டது இந்த மலைக்குகை. இயற்கையாகவே உருவான இந்த மலைக் குகையில் உலகிலேயே விலை உயர்ந்த சலவைக் கற்கள் பளபளக்கின்றன.
இந்த மலைக்குகையில் உள்ள துவாரங்களில் வழியாக சூரிய ஒளி நுழையும்போது... குகையின் பாறைகள் நிறம் மாறுகின்றன. அருவி கொட்டுவது போலவும், பனி உறைந்திருப்பது போலவும் மலைக் கற்கள் வடிவம் பெற்றிருப்பது மனதை இன்பமெய்த வைக்கிறது. பாடல் காட்சி களுக்கு உகந்த லொக்கேஷன் இது.
இப்படி இயற்கைசூழ் வனப்புகள் ‘பேராக்’ பூமிக்கு சிறப்பு சேர்ப்பது ஒருபுறமிருந்தாலும், அந்தத் தேசத்து மக்கள் இயற்கையின் இந்த நன்கொடையை கொஞ்சமும் சீர்குலைக்காமல் ஈடுபாட்டோடு பாதுகாக்கிறார்கள் என்பது வெளிநாட்டு பார்வையாளர்களின் கண்களை கூடுதலாக விரியச் செய்தது.