

ஷி
யமபிரசாத், மலையாள சினிமாவின் தனித்துவமான இயக்குநர். முன்னணி நாயகர்களான மம்மூட்டி, திலீப், நிவின் பாலி, ஃபகத் பாசில், ஜெயசூர்யா உள்ளிட்டவர்களை இயக்கியவர். என்றபோதும் மலையாள வணிகப் படங்களின் போக்கிலிருந்து விலகியே படம் எடுத்தவர். அமெரிக்க இந்தியச் சிறுபான்மையினர் நிலை (இவிட), குடும்பப் பாரம்பரியம் என்னும் கற்பனை (எலட்ரா), அருகிலிருந்து அகன்றிருக்கும் காதல் (அரிகே) உள்ளிட்ட வித்தியாசமான கதைக் கருக்களில் படம் எடுத்துள்ளார். தற்போது நிவின் பாலி - த்ரிஷா நடிப்பில் அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம்தான் ‘ஹே ஜூட்’.
நிவின் பாலிக்கு ஷியமபிரசாத்துடன் இது மூன்றாவது படம். ‘இங்கிலீஷ்’ ‘இவிட’ ஆகிய இரு படங்களிலும் சந்தர்ப்பவாதியான ஐ.டி ஆளாகவே நிவின் நடித்திருப்பார். இந்தப் படத்தில் வெகுளியான ஜீனியஸ் வேடம் அவருக்கு. த்ரிஷாவுக்கு இது அறிமுக மலையாளப் படம். கொண்டாட்டத்துக்கும் கோபத்துக்கும் இடையே அலைக்கழிக்கப்படும் குணாதிசயம்கொண்ட இளம் பெண்ணாக நடித்திருக்கிறார்.
எடுத்துக்கொண்ட கருப்பொருளை நோக்கி முன்னேறிச் செல்லும் திரைக்கதைகளைக் கையாண்ட ஷியமபிரசாத்தின் மற்ற படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது இந்தப் படம். கொச்சியிலிருக்கும் ஆங்கிலோ இந்தியர்களின் குடும்பத்தையும் அதன் உறுப்பினர்களின் குணங்களையும் முதல் பாதி சித்திரிக்கிறது. இதன் வழியாக நிவின் பாலி கதாபாத்திரம் (ஜூட்) ஒரு ஜீனியஸ், ஆனால் குழந்தைகளின் சுபாவம் உள்ளவராக உருவம் கொள்கிறது. இதன் முதல் பாதி முழுவதையும் நகைச்சுவையால் நிரப்ப முயன்றிருக்கிறார் இயக்குநர். நிவின் பாலி கதாபாத்திரத்தின் இயல்பையும் அவருடைய தந்தை கதாபாத்திரத்தின் (சித்திக்) பணத்தாசையையும் திரைக்கதை பயன்படுத்திக்கொண்டுள்ளது.
இரண்டாம் பாதிக் கதை கோவாவில் நடக்கிறது. உறவினர் மூலம் தனக்குக் கிடைத்த வீட்டின் பின்புறம் குடியிருப்பவரைக் காலிசெய்ய சித்திக் முயல்கிறார். அங்கு மனநல மருத்துவரான தன் தந்தையுடன் த்ரிஷா குடியிருக்கிறார். அவர் பாடகர் குழு ஒன்றை வைத்திருக்கிறார். இவர்களுக்கு இடையிலான சண்டையை நகைச்சுவையாக்கப் படம் முயன்றுள்ளது. புற்றுநோய்ப் பாதிப்பை மெல்லிய நகைச்சுவை வழியாகச் சித்திரித்த ‘ஞண்டுகளுட நாட்டில் ஒரிடவேள’ படத்தைப் போன்று இந்தப் படத்தையும் உருவாக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், இந்தப் படத்தின் நகைச்சுவை, படத்துக்கு மேலே படலமாக மிதக்கிறது.
த்ரிஷாவின் துள்ளலான நடிப்பும் கோவாக் காட்சிகளும் அவர் வரும் பகுதியை வண்ணமயமாக்குகின்றன. எதிரில் இருப்பவரின் கண்ணைப் பார்த்துப் பேசாத இயல்புடைய குண்டுப் பையனாக நிவின் பாலி சிறப்பாக நடித்திருக்கிறார். மனநல மருத்துவரான விஜய் மேனனின் பங்களிப்பும் படத்துக்கு அதே அளவுக்கு வலுச்சேர்த்துள்ளது.
ஆனால், இந்தப் படத்தின் கதைக் கரு, ஆஸ்பர்ஜெர் மன நலப் பாதிப்பைக் (Asperger) குறித்தது. ஆட்டிசம் பாதிப்பின் சில கூறுகளைக் கொண்ட இந்தப் பாதிப்பால் குழந்தைகள், இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அறிவாற்றலும் மொழியறிவும் இருக்கும். ஆனால், சமூக உறவு என்பது பாதிக்கப்பட்டிருக்கும். இப்படியான பாதிப்பைக் குறித்து நிவின் பாலிக்கும் தெரியாது. அவருடைய பெற்றோருக்கும் தெரியாமல் இருக்கிறது.
அதே போல த்ரிஷா பைபோலார் டிஸ்ஆர்டரால் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார். ஆனால், அளவுக்கு அதிகமான அன்பு, அதே அளவு வெறுப்பையும் வெளிப்படுத்துபவராக இருக்கிறார். இவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மன நல மருத்துவர் கதாபாத்திரம் வழியாக விளக்குகிறது இந்தப் படம். இந்த விதத்தில் இது முக்கியமான படம். ஆனால், அதைச் சொல்வதற்கு படம் கொச்சியிலிருந்து கோவா போய்த் திரும்பியிருக்கிறது.