

இரட்டையராகப் பிறந்த இருவர், வெவ் வேறு சூழல்களில் வளர்கின்றனர். பின்னாளில் இருவரும் சேர்ந்து தங்களுடைய தந்தையைக் கொன்ற வில்லன்களைப் பழிவாங்குகின்றனர். இந்த ஒற்றை அச்சில், நூற்றுக்கணக்கான தமிழ்ப் படங்கள் வெளிவந்திருக்கின்றன.
அபாரமான திரைக்கதை என்னும் மாய ரசவாதத்தால், ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தை, சில பத்தாண்டுகள் கழித்து இப்போது பார்த்தாலும் நம்மால் ரசிக்க முடிகிறது. இந்த ரசனை, மென்காதல் நகைச்சுவை படங்களுக்கும் பொருந்தும். இளம் ரசிகர்களின் ஆர வாரத்தோடு தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ‘ப்ரேமலு’ மலையாளத் திரைப்படம் அப்படியொரு அச்சில் பிசகாத படம்தான்.
ஒரு புறம், தன் வாழ்நாள் முழுதும் புறக்கணிக்கப்பட்டு, நாளை என்பது நிச்சய மில்லாமல், தோல்விகளைப் பழகிக்கொண்ட ஓர் ஆண் சச்சின். இன்னொரு புறம், வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் அதீத வெற்றியில் திளைத்து, உணர்வுகளுக்கு இடமளிக்காத ஒரு பெண் ரீனு.
இவர்களை, ஹைதராபாத் நகரம் ஒரே புள்ளியில் இணைக்கிறது. அதன் பிறகு அவர்களின் பயணம் என்னவானது என்பதுதான் கதை. எல்லா மொழிகளிலும் பார்த்துச் சலித்த கதை தான். ஆனால், 156 நிமிடங்களும் நம்மைக் கட்டிப்போட்டுச் சிரிக்க வைத்திருப்பது எழுத்தாளர், இயக்குநர் கிரிஷ் ஏ.டி. - கிரண் ஜோஷியின் சுவாரஸ்யமான திரைக்கதை.
கதை தமிழ்நாட்டில் தொடங்கி கேரளத்தை அடைகிறது. அங்கிருக்கும் சலிப்பான வாழ்விலிருந்து தப்பி, சச்சின் தன்னுடைய நண்பனோடு சேர்ந்து ஹைதராபாத் நகரத்தை அடைந்த பின் வேகமெடுக்கிறது. அங்கிருந்து தொடங்கி, இறுதிவரை வாய் விட்டுச் சிரிக்க வைப்பதில் வெற்றியும் அடைகிறது.
சச்சினாக நெல்சன், ரீனுவாக மமிதா பைஜூ, நண்பன் அமலாக சங்கீத் பிரதாப் ஆகிய மூவர் அதகளப்படுத்தியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சச்சினின் கேரள வாழ்விடமான ஆலுவா வட்டார வழக்கில் வெள்ளந்தியாக வரும் நகைச்சுவை வசனங்கள் சிறப்பு. சூழல் நகைச்சுவையின் எல்லாக் கூறுகளையும் இத்திரைப்படம் தொட்டு விரிகிறது. கூடவே ஒரு மென் இழை காதலையும் இக்கதை சுமந்திருக்கிறது.
ஏற்கெனவே, ‘தண்ணீர்மத்தன் தினங்கள்’, ‘சூப்பர் சரண்யா’ என இரண்டு மென்காதல் நகைச்சுவைப் படங்களில் வெற்றியை எட்டிய கிரிஷ் ஏ.டியின் மூன்றாவது படம் இது. முதல் படத்தில் பள்ளிக் காதலையும் இரண்டாவது படத்தில் கல்லூரிக் காதலையும் சிறப்பாகக் கையாண்டிருந்தார். முதல் வேலையில் கிடைக்கும் காதலைப் பற்றிய படமாக ‘ப்ரேமலு’ வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கதை மாந்தர்களின் இயல்பு, கதை நகரும் களங்கள், அவற்றின் பின்புல மனிதர்கள் எனச் சின்ன சின்ன நுணுக்கங்களையும் பதிவு செய்திருக்கிறது திரைக்கதை. ஒரு நிகழ்வில், சச்சினும் அவனுடைய நண்பன் அமலும் குடித்துவிட்டு, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றெண்ணிச் செய்யும் சலம்பல் குறிப்பிட வேண்டிய காட்சி.
அதேபோல், தன் வாழ்நாள் முழுவதும் உணர்ச்சியற்று இறுக்கமாகவே இருக்கும் நாயகி ரீனு, முதல் முறையாகத் தாம் எதையோ இழந்திருக்கிறோம் என்பதை இருட்டில் உணர்ந்து உடையும் காட்சியையும் குறிப்பிட வேண்டும். தனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் செல்வராகவனுக்கும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக் கும் மரியாதை சேர்க்கும் விதமாக இரண்டு காட்சிகளை இணைத்துள்ளார் கிரிஷ்.ஏ.டி.
நட்சத்திர நடிகர் ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன், திரைக்கதை விற்பன்னர் ஷ்யாம் புஷ்கரன் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளனர். மூன்று வெவ்வேறு நகரங்களின் வண்ணங்களை ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபு காட்சிகளில் விரிக்க, அதனுடன் புத்தாயிரத்தின் இசையை இசையமைப்பாளர் விஷால் விஜய் சேர்ந்து குழைத்து ரசிக்கும்படி கொடுத்திருக்கின்றனர். தொய்வில்லாத காட்சித் தொகுப்புக்காக ஆகாஷ் ஜோசப் வர்கீஸைப் பாராட்டியே ஆகவேண்டும்.
மாறி வரும் சினிமா ரசனையில் தென்னிந்தியத் திரையுலகம் இழந்த முக்கியமான அம்சங்களில் ஒன்று, எண்பதுகளில் வெளிவந்த பாசாங்குகளற்ற பாக்யராஜ் படங்கள். தமிழில் அவ்வகை படங்கள் தற்போது வெளிவராவிட்டாலும் மலையாளத் திரையுலகம் இன்னமும் பாக்யராஜ்தனமான படங்களைப் படைப்பது கொண்டாடப்பட வேண்டியது.
- tottokv@gmail.com