

இ
யற்கைப் பேரிடர்களை மையமாக வைத்து வெற்றிகரமான ஹாலிவுட் திரைப்படங்கள் பல வெளியாகி இருக்கின்றன. அதைப் போலவே வகை தொகையான வங்கிக் கொள்ளைகளை வைத்தும் ரசிகர்களுக்கு விறுவிறுப்புப் படையல் தந்த படங்கள் ஏராளம். இந்த இரண்டையும் ஒரே திரைக்கதையில் கலந்த, சுவாரசியமூட்டும் ஆக்ஷன் த்ரில்லராக வருகிறது ‘த ஹரிகேன் ஹெய்ஸ்ட்’.
ஹைடெக் கொள்ளையர் கூட்டம் ஒன்று, அமெரிக்காவின் கடலோர நகரத்தில் அமைந்திருக்கும் அரசின் கரன்சி கருவூலத்தில் கன்னம் வைக்கத் திட்டமிடுகிறது. அப்பகுதியில் ஆகப்பெரும் இயற்கைப் பேரிடராக உச்சநிலை சூறாவளி அபாயம் அறிவிக்கப்பட, ஊரே காலியாகிறது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு கொள்ளை முயற்சியில் குதிக்கிறார்கள். மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் சுழன்றடிக்கும் சூறாவளி, ஆழிப் பேரலையாய்க் கொந்தளிக்கும் கடற்கரை, போட்டுத் தாக்கும் பேய் மழை இவற்றுக்கு மத்தியில் பல நூறு மில்லியன் டாலர்களைக் குறிவைத்துக் கருவூலத்தில் ஊடுருவுகிறது அந்தக் கொள்ளைக் கும்பல்.
சூறாவளிக்குப் பயந்து ஓடியவர்கள் போக, அங்கு மிஞ்சியிருந்த பெண் அதிகாரி கொள்ளையர்களுக்கு எதிராகத் திரும்புகிறார். இவருடன் சூறாவளியை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் ஒருவரும் சேர்ந்துகொள்கிறார். கருவூலத்தைச் சுருட்டிய கொள்ளையர்களுக்கு எதிராக, ஊரைப் புரட்டும் சூறாவளியைக் கருவியாக்கி இவர்கள் தொடுக்கும் வியூகங்கள் மற்றும் அதிரடிகளே மீதித் திரைப்படம்.
‘ஸ்டார்ம் க்ராஷர்ஸ்’ என்ற விருது பெற்ற நாவலைத் தழுவி இப்படம் உருவானபோதும், விஷுவல் ஈர்ப்புக்காகத் திரைக்கதையில் சில சுவாரசியங்களையும் சேர்த்திருக்கிறார்கள். ‘த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ வரிசையின் முதல் படம், ‘த மம்மி’ வரிசையின் மூன்றாவது படம் எனப் பல திரைப்படங்களை இயக்கிய ரோப் கோன் (Rob Cohen) இப்படத்தை இயக்கியிருப்பது எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. டோபி கெபல், மேகி கிரேஸ், லியோனார்டோ டிக்கன்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் மார்ச் 9 அன்று வெளியாகிறது.