

இன்று வீட்டுக்குள் திரையரங்கம் வந்துவிட்டது. 40, 50 அங்குல பிளாட் டிவிக்கள், 3டி டிவிக்கள் எல்லாம் இன்றைய டிஜிட்டல் ட்ரெண்ட்டின் ஒரு பகுதியாக இருந்தாலும் அவையும் மாறிக்கொண்டிருக்கின்றன. 20 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும் அதிநவீன ஃபுல்ஹெச்டி (Full HD) புரஜெக்டர்களை வீட்டின் ஹால் அல்லது படுக்கை அறை சுவரில் ஒளிரச் செய்து 20x10 என்ற திரையின் அளவில் வீட்டையே ஒரு திரையரங்காக மாற்றிக்கொண்டிருக்கிறது தொழில்நுட்பப் புரட்சி. என்னதான் பெரிய திரையை சுவரில் ஒளிரச் செய்தாலும், ஹோம் தியேட்டர் ஒலியமைப்பை வீட்டுக்குள் கொண்டுவந்தாலும் ஒரு திரையரங்கில் கிடைக்கும் ஒலி அனுபவம் நிச்சயம் வீட்டில் கிடைக்காது.
அதற்கான முக்கிய காரணம் திரையரங்கின் விசாலத் தன்மை. அதுதான் அடிப்படையான இடைவெளிகளில் ஸ்பீக்கர்களை சுற்றிலும் பொருத்தவும் ஒலியின் துல்லியத்தை சரவுண்ட் சவுண்டாக பார்வையாளர்கள் துல்லியமாக உணரவும் களம் அமைத்துத் தருகிறது. முதலில் மோனோவாக பின்னர் ஸ்டீரியோவாக திரையரங்குகளில் நாம் கேட்டுவந்த ஒலி, பல ஒலித்தடங்களில் பயணிக்கும் சரவுண்ட் சவுண்ட் ஒலியமைப்பாக (Surround Sound) மாறியபின் ஏற்பட்ட இந்த மாற்றம், திரையரங்கில் நமக்குக் கிடைத்த புதிய ஒலி அனுபவமாக அமைந்தபோது திரைப்படத்தை இன்னும் நெருக்கமாக உணரவைத்தது.
முதலில் டால்பி அடுத்து டி.டி.எஸ் அடுத்தகட்டமாக டால்பி அட்மாஸ் என தொழில்நுட்பம் வந்துகொண்டே இருப்பதும் இதற்கான ஸ்பீக்கர்கள் அமைப்புமுறை 5.1 என்று இருந்து பின்னர் 7.1 என மாறி ஒலியமைப்பின் அடுத்தடுத்த விரிவுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இப்படி முன்னேறிக்கொண்டே இருக்கும் நவீன ஒலியமைப்பு முறையை திரையரங்கியல் ‘அப்டேட்’ செய்து கொண்டே இருப்பதன்மூலம்தான் பார்வையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளமுடியும் என்ற நிலையில் திரையரங்குகள் இருக்கின்றன. இன்று 2கே தரத்தில் திரையிடும் திரையரங்குகளே அதிகம். இவை அனைத்தும் அடுத்து 8கே தரத்துக்கு மாறி எதிர்காலத்தில் 8கே என்பதையும் தாண்டிச் சென்றுவிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இப்படிப்பட்ட டிஜிட்டல் திரையிடலும் சரவுண்ட் சவுண்ட் ஒலியமைப்பும் இல்லாத திரையரங்குகள் மிகக்குறைவு. இன்றைய டிஜிட்டல் புரட்சிக்கு ஈடுகொடுத்து இயக்குநரும், தயாரிப்பாளரும் ஒத்துழைப்பு தர, படத்தின் அதிநவீன முறையில் ஒரு படத்துக்கான திரையரங்க அனுபவத்தை உருவாக்குவதற்காகவே சரவுண்ட் மிக்ஸிங் மற்றும் சரவுண்ட் மாஸ்டரிங் பணிகள் நடந்தேறுகின்றன.
குறிப்பாக பாடல்கள் 40 முதல் 100 ஒலித்தடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை 16 அல்லது 8 ஒலித்தடங்களுக்கு ‘ப்ரி மிக்ஸ்’(Pre Mix) செய்து சுருக்கிய ட்ராக்கைத்தான் மிக்ஸிங், மாஸ்டரிங் செய்யப் பயன்படுத்துவார்கள். அதுவும் திரையில் காட்சிகளைப் பார்த்துக்கொண்டுதான் மிக்ஸிங் செய்வார்கள். உதாரணத்துக்குப் பாடல் காட்சியில் கதாநாயகி திரையில் வலப்புறத்திலிருந்து இடப்புறம் பாடியபடியே நடந்துசெல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவரது குரலையும் அவர் நகர்ந்து செல்லும் வேகத்துக்கு ஏற்ப வலப்புறத்திலிருந்து இடம்புறம்(Voice Panning) மெல்ல நகர்த்திச் செல்லலாம். அடுத்தமுறை திரையரங்கில் படம் பார்க்கும்போது இதை நீங்கள் கவனித்தால் உணர்வீர்கள்.
அதேபோல காட்சிக்கோணங்களுக்கு ஏற்ப, கதாபாத்திரங்களின் சூழலும் மனநிலையும் சிதைந்துவிடாத வகையில் ஒலிகளை நகர்த்தமுடியும். ‘காக்க காக்க’ படத்தில் ஜீப்பில் சூர்யா- ஜோதியாக இருவரும் செல்லும் ‘என்னைக் கொஞ்சம் மாற்றி’ பாடலில் ஜீப் செல்லும் வேகத்துக்கு ஏற்ப ரிதமும் பயணம் செய்வதை படம் பார்க்கும்போது உணர்ந்திருப்பீர்கள். இப்படிச் செய்வதால் அந்தக் கதாபாத்திரங்களுக்கு பக்கத்தில் அல்லது அவர்களை நாம் பின் தொடந்து செல்வதுபோன்ற ‘லைவ்’ உணர்ச்சியைக் கொடுக்கும். அதேபாடல் காட்சியில் நாயகன் நாயகியை கண்காணிக்க ஒரு ஹெலிகாப்டர் தலைக்குமேல் பறந்து செல்கிறது அல்லது ஒரு பறவை மேலிருந்து கீழே பறந்துவந்து இடமோ வலமோ செல்கிறது என்றால் அதற்கான எஃபெக்ட்களையும் பாடலில் மிக்ஸிங் செய்யும் பணி நடக்கும். திரையரங்குகளில் காட்சியுடன் பாடலைக் கண்டு கேட்கும்போது கிடைக்கும் இந்த எல்லா ஒலிகளும் ஆல்பமாக ஆடியோ சந்தையில் கிடைக்கும் பாடலில் இருக்காது.
இத்தனைநாளும் திரையரங்கில் நம் காதுகளைச் சுற்றிக் கேட்ட ஒலிகள் தற்போது ‘ டால்பி அட்மாஸ்’(Dolby Atmos) என்ற தொழில்நுட்பத்தின் மூலம் நம் தலைக்குமேலும் கேட்கத் தொடங்கிவிட்டன. அது ஒரு மழைக்காட்சி. நாயகனும் நாயகியும் ஒரு குடைக்குள் நடந்து வருகிறார்கள். இப்போது மழைத்துளிகள் வானிலிருந்து குடையின் மீது விழுந்து தெறிக்கின்றன. அந்த ஒலிகளை அட்மாஸில் மிக்ஸ் செய்வதன் மூலம் பார்வையாளர் குடைக்குள் இருப்பதுபோல் உணரவைத்துவிட முடிகிறது. மழைத்துளியோ, இடிச்சத்தமோ, விமானமோ, பறவையோ பறந்து செல்லும் காட்சிகளில் அட்மாஸ் ஒலிகள் வரும்போதெல்லாம் திரையரங்கக் கூரையை நிமிர்ந்து பார்க்கும் பார்வையாளர்கள் ஒருகணம் ஆச்சரிப்பட்டுத் திகைத்துவிடுகிறார்கள். அதேபோல் சரவுண்ட் பேக் ஸ்பீக்கரிலிருந்து வரும் குரலையோ ஒலியையோ கேட்டு முதுக்குப்பின்னால் திரும்பிப் பார்க்கத் தோன்றும். குறிப்பாக திகில் படங்களில் ஒலிகள் எங்கிருந்து எங்கு பயணிக்கின்றன என்பதைப் பொருத்து சரவுண்ட் ஒலியமைப்பின் மாயாஜாலத்தை திரையரங்கில் கூடுதலாக உணர்ந்திருப்பீர்கள்.
பாடல் காட்சி, வசனக்காட்சி, ஆக்ஷன் காட்சி என எதுவாக இருந்தாலும் டால்பி அட்மாஸ் என்ற நவீன முறைகளில் மிக்ஸிங் செய்ய இன்று சென்னையில் பல ஸ்டுடியோக்கள் இருக்கின்றன. அவற்றில் ஏ.ஆர். ரஹ்மானின் ஏ.எம் மற்றும் ஏ.எச், ஏவிஎம் ஸ்டுடியோகள் முதன்மையானவை.
இந்தத் துறையில் இந்திய சினிமாவே பாராட்டக்கூடிய ஒரு மாபெரும் ஒலியமைப்புக் கலைஞராக விளங்கியவர் மறைந்த சவுண்ட் இன்ஜினீயரிங் மேதை எச்.ஸ்ரீதர். எண்ணற்ற விருதுகளை வாங்கிக் குவித்த இவர், ஒரு சிறந்த இசைக் கலைஞரும் கூட. இவரது மிக்ஸிங் முறையைக் கண்டு ஹாலிவுட்டே வியந்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானும் இவரும் நெருங்கிய நண்பர்கள். ரஹ்மானின் பெரும்பாலான படங்களுக்கு மிக்ஸ் செய்தவர் இவர்தான். ஏ.ஆர்.ரஹ்மானிடம் அவரும் நானும் இணைந்து பணியாற்றியபோது கிடைத்த அனுபவங்களை அடுத்தவாரம் பகிர்கிறேன்.
தொடர்புக்கு: tajnoormd@gmail.com