

சைன்ஸ் ஃபிக்ஷனில் Dystopian என்று ஒரு வகை இருப்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம். கிட்டத்தட்ட உலகம் அழியும் தருணம், அல்லது அழிந்துவிட்ட தருணம் அல்லது உலகில் எல்லாமே தலைகீழாக இருக்கும் தருணம் என்று, இயல்பு வாழ்க்கைக்கு நேரதிராக நாம் பார்க்கும் வாழ்க்கை இருப்பதுதான் டிஸ்டோஃபியன்.
அதில் சட்டங்கள், வாழ்க்கை, அனுபவங்கள் எல்லாமே உயிர் வாழ்தல் என்ற ஒன்றை மட்டுமே மையமாக வைத்து அமைந்திருக்கும். ஏதாவது ஒரு பெரிய அரசாங்கம் அனைவரையும் சர்வாதிகாரி போலவே ஆளும். அவர்கள் கட்டளையை மீறினால் மரணதண்டனை வழங்கப்படும்.
இதற்கிடையில் ஏதோ ஒன்றை அடைவதற்காக - அது மக்கள் விடுதலையாகவும் இருக்கலாம் - அந்தக் கதையின் பிரதான கதாபாத்திரங்கள் போரிடும். இந்த வகையான சைன்ஸ் ஃபிக்ஷன் படங்கள் மற்றும் கதைகள் உலகெங்கும் மிகப் பிரபலம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே பல படங்கள் மனதில் தோன்றும்.
அப்படிப்பட்ட டிஸ்டோஃபியன் சைன்ஸ் ஃபிக்ஷன் என்ற வகையை எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட சீரீஸ்தான் Silo. இது ஹ்யூ ஹோவே (Hugh Howey) என்ற பிரபலமான எழுத்தாளர் எழுதிய ஒன்பது Silo வரிசைக் கதைகளில் இருந்து வெப் சீரீசாக எடுக்கப்பட்டது. 2023இல் தான் இதன் முதல் பாகம் ஆப்பிள் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அனைவராலும் ரசிக்கப்பட்டு நல்ல விமர்சனங்களும் வாங்கியது.
இந்த வெப் சீரீசில் பிரதான வேடத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் ரெபெக்கா ஃபெர்குஸன் (மிஷன் இம்பாசிபிள் சீரீஸ் படங்களில் சமீபத்திய சில படங்களில் நடித்தவர் என்றால் தெரிந்துவிடும்). வருங்காலத்தில் நடக்கக்கூடிய கதையான சைலோவில், உலகம் அழிந்துவிட்டதால் பூமிக்குள் ஆழமாகக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான ஒரு கட்டிடத்தில் கிட்டத்தட்ட பத்தாயிரம் மனிதர்கள் வாழ்கிறார்கள்.
அவ்வளவுதான் அழிவில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களின் வாரிசுகளின் வாரிசுகளின் வாரிசுகளின் வாரிசுகள். ஏன் இப்படிச் சொல்லவேண்டி இருக்கிறது என்றால், எப்போது பூமி அழிந்தது என்ற விபரங்கள் எல்லாமே 140 வருடங்கள் முன்னர் எழுந்த ஒரு மக்கள் புரட்சியில் அழிந்துவிட்டன.
எனவே யாருக்குமே பூமி எப்போது அழிந்தது, இந்தக் கட்டிடத்தைக் கட்டியவர்கள் யார், தங்களது மூதாதையர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பது எதுவுமே தெரியாது. அந்தக் கட்டிடத்தின் பெயர்தான் Silo. மொத்தம் 144 தளங்கள் உள்ளடக்கியது. இதில் கீழே இருக்கும் சில தளங்கள், கட்டிடம் முழுதாக இயங்கக்கூடிய வண்ணம் அனைத்து விஞ்ஞானக் கருவிகளையும் வைத்திருப்பவை.
இவைகளை எப்போதும் பார்த்துக்கொள்ள அங்கே எஞ்சினியர்கள் உண்டு. அவர்களின் வேலையே அந்தக் கருவிகள் பழுதாகாமல் பார்த்துக்கொள்வதுதான். அதேபோல் அந்தக் கீழ்த்தளங்களுக்கு மேலே இருக்கும் பல தளங்களில் தகுதிக்கு ஏற்றவாறு மக்கள் வாழ்கின்றனர்.
மேலே இருக்கும் தளங்களில் அரசியல் தலைவர்கள் வாழ்கின்றனர் (கிட்டத்தட்ட இவைகள் எல்லாமே பிரபல இயக்குநர் பூங் ஜோன் ஹோ இயக்கிய கல்ட் திரைப்படமான Snowpiercer இல் வருவது போலவே இருப்பதாக அந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்குப் புரியலாம். அதில் உலகமே அழிந்தபின்னர் பாக்கி உயிரோடு இருப்பவர்கள் எல்லாமே ஒரு ரயில்வண்டியில் இருப்பார்கள்.
அது உலகைச் சுற்றிவந்துகொண்டே இருக்கும். அந்த ரயிலுக்குள் நடக்கும் அட்டகாசமான சாகசம்தான் ஸ்னோபியர்சர். பின்னர் ஒரு சீரீசாகவும் எடுக்கப்பட்டது). அந்த சைலோ என்ற பிரம்மாண்ட பூமிக்குள் இருக்கும் கட்டிடத்தின் பல மீற முடியாத விதிகளில் ஒன்று, அனைவருக்கும் உடலில் கருத்தடை சாதனம் ஒன்று இயல்பாகவே பொருத்தப்பட்டிருக்கும்.
குழந்தை பெறவேண்டும் என்றால் அரசிடம் விண்ணப்பித்து, அரசு ஒத்துக்கொண்டதும் அந்த கருத்தடை சாதனம் அகற்றப்பட்டு, அதன்பின்னர்தான் குழந்தை பெற்றுக்கொள்ளமுடியும். காரணம் அந்தக் கட்டிடத்தில் மொத்தம் இத்தனை பேர்தான் ஒரு சமயத்தில் இருக்கமுடியும் என்ற விதியினால்.
அவர்களுக்கு ஏற்ற உணவுதான் அங்கே விளைவிக்கப்படுகிறது என்பதால். இப்படிப்பட்ட சூழலில் அங்கே போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஹோல்ஸ்டன் என்பவரின் மனைவி ஆல்லிசன் இப்படிக் குழந்தை பெறவேண்டிய காலகட்டத்தில் இருக்கும்போது அங்கே மருத்துவராக இருக்கும் க்ளோரியா என்பவரிடம் இருந்து ஒரு அதிர்ச்சியான தகவலைத் தெரிந்துகொள்கிறார்.
என்னவென்றால், வெளியே உலகம் அழியவே இல்லை; ஆனால் என்ன காரணத்தாலோ சைலோ என்ற அந்தக் கட்டிடத்தில் இருக்கும் தலைவர்கள் இவர்களையெல்லாம் வெளியேற விடாமல் பூமிக்குள் அந்தக் கட்டிடத்தில் அடைத்துவைத்திருக்கிறார்கள் என்று.
அந்தக் கட்டிடத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், அதன் பல தளங்களில் வெளியே பார்க்கும்படியான கண்ணாடிகளும் டிவி திரைகளும் இருக்கும். அவற்றில் எப்போதுமே வெளியே இருக்கும் பூமியின் வீடியோ லைவாக ஓடிக்கொண்டிருக்கும். காய்ந்து, அழிந்து, பாலைவனம் போலக் காட்சியளிக்கும் வறண்ட பிரதேசமாக பூமி அங்கே காட்டப்பட்டிருக்கும்.
ஆனால் ஆல்லிசனுக்குக் கிடைக்கும் ஒரு ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் சில தகவல்களால் அந்தத் திரைகளில் காட்டப்படுவதெல்லாம் போலியான வீடியோக்கள் - மாறாக, வெளியே பூமி மிகவும் அழகாகவும் பசுமையாகவும் தண்ணீர், பழங்கள், விலங்குகள் உட்பட எல்லாமே கிடைக்கும்படியும் இருக்கிறது என்று தெரிந்துகொள்வார்.
உடனேயே ‘வெளியே செல்ல வேண்டும்’ என்ற கோஷத்தை முன்னெடுப்பார். சைலோவில் இன்னொரு மீறமுடியாத சட்டம் என்னவென்றால், யாராவது வெளியே செல்லவேண்டும் என்றால் உடனேயே வெளியே அனுப்பிவைக்கப்படுவார்கள். அப்படி வெளியே சென்று வறண்ட பூமியில் சில அடிகள் கூட அவர்கள் வைக்கமுடியாமல் தள்ளாடி இறந்து விழுவதை லைவாக அனைவருக்கும் காட்டுவார்கள்.
அப்படி, போலீஸ் அதிகாரி ஹோல்ஸ்டன் கதறக்கதற அவரது மனைவியான ஆல்லிசன் வெளியே பிடிவாதமாக அனுப்பப்படுகிறார். வெளியே சில அடிகள் சென்றதும் தள்ளாடி விழுந்து சாகிறார். அவரது பிணம் விழுந்துகிடப்பது பின்னர் பல மாதங்கள் தெரிந்துகொண்டே இருக்கிறது.
இதுதான் சைலோவின் துவக்கம். இதன்பின்னர் மனம் உடைந்த போலீஸ் அதிகாரி ஹோல்ஸ்டனும் சில வருடங்களில் வெளியே செல்லவேண்டும் என்று பேசி, வெளியே அனுப்பப்பட்டு இறக்கிறார். ஆனால் இறக்குமுன்னர் ஜூலியட் என்ற, கீழ்த்தளத்தைச் சேர்ந்த எஞ்சினியர் ஒருவரை சந்திக்கிறார் (இந்த ஜூலியட் தான் நாயகி). ஜூலியட் ஹோல்ஸ்டனிடம் சொல்லும் ஒரு விஷயம் பயங்கரமானதாக இருக்கிறது.
என்னவெனில், ஹோல்ஸ்டனின் மனைவி ஆலிசனுக்குக் கிடைக்கும் ஹார்ட் டிஸ்க்கைப் பழுது பார்த்தவர் ஜார்ஜ் என்ற கணினி விஞ்ஞானி. அவரை ஜூலியட்டுக்குத் தெரியும் என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் ஜூலியட் சொல்கிறாள். இது ஹோல்ஸ்டனுக்கு ஏதோ சந்தேகம் வரவழைக்கிறது. மேலும் ஜூலியட்டின் காதலர்தான் ஜார்ஜ் என்றும் தெரிந்துகொள்கிறார்.
இப்படியாக இதைத் துப்பறியும் ஹோல்ஸ்டன் தான் ஒரு தருணத்தில் மனைவி நினைவு மறக்கமுடியாமல் வெளியே சென்று இறக்கிறார். ஆனால் இறக்குமுன்னர் அவரது வாக்குமூலத்தில், தனக்கு அடுத்த போலீஸ் அதிகாரியாக ஜூலியட் தான் வரவேண்டும் என்று சொல்லிவிட்டே வெளியே சென்று இறந்திருக்கிறார். இதனால் முரட்டுத்தனமான எஞ்சினியராக இருந்த ஜூலியட் வேறு வழியில்லாமல் போலீஸ் அதிகாரியாக மாறுகிறாள். சிறுகச்சிறுக அந்த சைலோவில் இருக்கும் மர்மங்களைத் துப்பறியத் துவங்குகிறாள்.
இதில் இருந்து இறுதிவரை சைலோவில் எத்தனையோ விஷயங்கள் பேசப்படுகின்றன. இதன் க்ளைமேக்ஸ் உங்களை அவசியம் திடுக்கிடவே வைக்கும். இந்த சீரீசை உருவாக்கியவர் ஸ்பீட், ப்ரோக்கன் ஏரோ போன்ற படங்களை எழுதிய க்ரஹாம் யோஸ்ட். அண்மையில் வந்திருக்கும் சீரீஸ்களில் மிக வித்தியாசமான இந்த சைலோ பெரிதும் பாராட்டப்பட்ட ஒரு சீரீசும் ஆகும். The Platform படத்தை லேசாக நினைவுபடுத்தினாலும் அதற்கும் முன்பாகவே இது கதையாக எழுதப்பட்டுவிட்டது என்பதை நாம் மறக்கக்கூடாது.
- rajesh.scorpi@gmail.com