Published : 09 Feb 2018 11:23 AM
Last Updated : 09 Feb 2018 11:23 AM

திரைப் பார்வை: ஒரு படம், ஆறு அனுபவங்கள் - ஆறு அத்தியாயம்

மிழ்த் திரைப்படங்களில் உள்ளடக்கம் சார்ந்து பல பரீட்சார்த்த முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால், வடிவம் சார்ந்து புதுமைகள் பெரிதாக நிகழ்த்தப்பட்டதில்லை. பல புதுமைகளைச் செய்தவரான கே.பாலச்சந்தர், ‘ஒரு வீடு இரு வாசல்’ என்ற ஒரே படத்தில் இரண்டு வெவ்வேறு கதைகளைச் சொன்னார். அவருடைய சீடர் வஸந்த், ‘மூன்று பேர் மூன்று காதல்’ என்று ஒரே படத்தில் மூன்று கதைகளைக் காண்பித்தார். இதுபோல் ஆறு கதைகளை ஒரு படமாகக் கொடுக்கும் முயற்சிதான் ‘ஆறு அத்தியாயம்’.

வீண்போகாத காத்திருப்பு

இதில் உள்ள ஒவ்வொரு படமும் வெவ்வேறு இயக்குநர்கள். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆறு குறும்படங்களை இணைத்து ஒரு திரைப்படமாகக் கொடுத்திருக்கிறார்கள் என்பதாக மட்டும் இந்த முயற்சியைச் சுருக்கிவிட முடியாது. ஆறு படங்களிலும் பேய் அல்லது அமானுஷ்ய சக்தி தொடர்பான திகில் பொதுவானது என்றாலும் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு களங்களைக் கொண்டவை. கடைசியில் ஒரே கதையாக இணைக்கப்படாதவை.

இருந்தாலும், ஒரு திரைப்படத்தைப் போல் இவற்றை இறுதிவரை அமர்ந்து பார்க்கத் தேவையான உத்திகளைப் புத்திசாலித்தனமாகப் புகுத்தியிருக்கிறார்கள். ஆறு கதைகளின் முடிவும் கடைசி இருபது நிமிடங்களில் காண்பிக்கப்படுகிற வகையில் அவை எடிட் செய்யப்பட்டுள்ளன. இதுவரை யாராலும் கையாளப்பட்டிராத சோதனை முயற்சி இது. காத்திருப்பு வீண்போகாத வகையில் ஒவ்வொரு கதையின் முடிவும் ஊகிக்க முடியாத வகையில் அமைந்திருக்கிறது.

பார்வையாளர்கள் அனைவருக்கும் அனைத்துக் கதைகளும் பிடித்துவிடும் என்று சொல்வதற்கில்லை. ஒரு கதை சிறப்பாக இருப்பதாகத் தோன்றும். இன்னொன்று பரவாயில்லை என்று தோன்றும். மற்றொன்று ஏமாற்றம் தரலாம். அதேபோல் ஒரு கதை முதல் பகுதியில் பிடித்து முடிவு ஏமாற்றம் அளிக்கும். இன்னொரு கதை முதல் பகுதி ‘சுமார்’ என்று நினைக்கவைத்து முடிவில் ஆச்சரியப்படுத்தும். இரண்டு வகையான கதைகளும் அதைப் பற்றி நாம் முதலில் கொண்டிருந்த கருத்து இறுதியில் மாறிவிடும். இப்படிப்பட்ட புதுமையான அனுபவங்களைக் கொடுத்திருப்பதற்காகவே இந்த உத்தியை வரவேற்கலாம்.

பேய்க்குப் புது விளக்கம்

ஆறு கதைகளும் வெவ்வேறு அனுபவங்களைக் கொடுக்கின்றன. கேபிள் சங்கர் இயக்கியிருக்கும் முதல் கதை வித்தியாசமான உளவியல் சிக்கலைக் கையாண்டிருப்பதன் மூலம் கருத்தளவில் (ஐடியா) ஒரு புதுமையை நிகழ்த்துகிறது. இரண்டு கதாபாத்திரங்களுக்கிடையிலான உரையாடலே பெரும்பகுதியை எடுத்துக்கொள்ளும் இந்தக் கதை கடைசிவரை கவனத்தைத் தக்கவைக்கிறது. அஜயன் பாலா இயக்கியிருக்கும் கதை விடலைக் காதலையும் திகிலையும் இணைத்திருப்பதில் தனித்துத் தெரிகிறது. மற்றொரு கதை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைக் கவனப்படுத்துகிறது.

‘பேய்’க்கான புதுமையான விளக்கத்தைத் தரும் முடிவுடன் ஆச்சரியப்படுத்துகிறது அடுத்த கதை. பேயால் ஒருவனுக்கு ஏற்படும் பாதிப்புகளை வைத்து சிரிக்கவைப்பதில் வெற்றிபெறும் ஒரு கதையும் உண்டு. கடைசிக் கதை சரித்திரப் புனைவு. ஓவியம் போன்ற வடிவங்களை இணைத்து பல காலகட்டங்களில் நடக்கும் காட்சிகளுடன் விரிகிறது. இதன் உள்ளடக்கமும் படமாக்கமும் ஒரு திகில் படம் கொடுக்க வேண்டிய மிரட்சியை அழுத்தமாகத் தரும் வகையில் அமைந்திருக்கின்றன.

புதியவர்களின் கூட்டு முயற்சி

சங்கர் தியாகராஜன் என்பவர் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கியிருப்பதோடு இந்தப் படத்தைத் தயாரித்தும் இருக்கிறார். கேபிள் சங்கர் தவிர மற்ற அனைவருக்கும் இது இயக்குநராக முதல் படம். சாம்.சி.எஸ், தாஜ் நூர் தவிர மற்ற இசையமைப்பாளர்களும் புதியவர்கள். அனைத்துப் படங்களிலுமே புதுமுகங்கள் அல்லது அதிக பிரபலமடையாத நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் பணியாற்றியிருக்கிறார்கள். கம்யூட்டர் கிராஃபிக்ஸ் போன்ற வசதிகள் இல்லாமல் ஒளியையும் ஒலியையும் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களையும் வைத்து திகில் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால், புதியவர்கள் பலரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இதுபோன்ற புதிய முயற்சிகள் தமிழ் சினிமாவுக்குத் தேவை. இவை வரவேற்கப்படுவது இதுபோன்ற முயற்சிகள் இன்னும் சிறப்பாகவும் காத்திரமாகவும் வெளிப்பட உதவும் என்ற கண்ணோட்டத்தில் குறைகளை மறந்துவிட்டு பிப்ரவரி 16 அன்று வெளியாக இருக்கும் இந்தப் படத்தைத் திரையரங்குகளில் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x