வேட்டையாடு விளையாடு 15: பெற்றோர்கள் பேசுவதை நிறுத்தினர்!

வேட்டையாடு விளையாடு 15: பெற்றோர்கள் பேசுவதை நிறுத்தினர்!
Updated on
3 min read

1.பெற்றோர்கள் பேசுவதை நிறுத்தினர்!

நியூ வேவ் என்னும் புதிய அலை சினிமாவை வரையறை செய்த திரைப்படம் '400 ப்ளோஸ்'. திரைப்பட விமர்சகராக பிரான்சில் புகழ்பெற்ற ப்ரான்ஸூவா த்ரூபோ 1959-ல் எடுத்த முதல் முழுநீளத் திரைப்படம் இது. கான் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்ற இளையவர் என்ற பெருமையும் த்ரூபோவுக்குக் கிடைத்தது. பெற்றோரிடமும் பள்ளியிலும் பொருந்தவே முடியாமல் போகும் பாரீஸைச் சேர்ந்த இளம் சிறுவன் அண்டோனி டோய்னலின் பால்யம்தான் இப்படத்தின் கதை. தமிழ் சினிமா இயக்குநர் பாலுமகேந்திராவைப் பெரிதும் பாதித்தது இத்திரைப்படம்.

இதைப் பார்த்த பிறகு ப்ரான்ஸூவா த்ரூபோவின் பெற்றோர்கள் அவரிடம் மூன்று ஆண்டுகள் பேசவேயில்லை. பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரை ஒருவர் சொந்தமாகப் படமெடுப்பதற்கு இரண்டாம்நிலை உதவி இயக்குநராகவும் முதல்நிலை உதவி இயக்குநராகவும் ஐந்து படங்களில் பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால் அனுபவமேதுமில்லாத த்ரூபோவுக்கு அவருடைய வாழ்க்கையையே படமாக எடுப்பதற்கு சென்டர் நேஷனல் டியு சினிமா அமைப்பு அனுமதி அளித்தது. இந்தப் படம் யாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது?

2. ஒரு பெண்ணின் போராட்டம்

உயர்கல்விப் பின்னணி இல்லாத, இரண்டுமுறை விவாகரத்தான, வேலைதேடும் மூன்று குழந்தைகளின் தாய், தான் வசிக்கும் பகுதியில் தண்ணீரை மாசுபடுத்தும் பசிபிக் கேஸ் அண்ட் எலக்ட்ரிக் பெருநிறுவனத்துக்கு எதிராகப் போராடி வெல்லும் கதைதான் ஜூலியா ராபர்ட்ஸ் நடித்து ஆஸ்கர் விருது வென்ற ‘எரின் ப்ராக்கோவிச்’. அமெரிக்காவில் நடந்த உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், கதையின் நாயகியை முன்னிறுத்தி வசூலைக் குவிக்க முடியும் என்பதை நிரூபித்தது.

ஜூலியா ராபர்ட்ஸ் ஹாலிவுட் சரித்திரத்திலேயே ஒரு நாயகி நடிகை வாங்கியிராத 20 மில்லியன் டாலரைச் சம்பளமாகப் பெற்றார். ஸ்டீபன் சோடர்பெர்க் இயக்கி 2000-ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் சிறந்த நீதிமன்ற வாதாடல் காட்சிகளைக் கொண்டது. ஒரு தாயாக பொருளாதார நெருக்கடி ஒரு புறமிருக்க, தன் பகுதி மக்களுக்கு நஷ்ட ஈடு கோரும் போராட்டத்தைத் தொடரும் போராளியாகச் சிரிக்கவும் நெகிழவும் வைக்கும் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் எத்தனை முறை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்?

3. நவீன காலத்தின் தேவதாஸ்

இழந்த காதலுக்கு அடையாளமான தேவதாஸை நாயகனாக்கி நாவலாக எழுதியவர் வங்க எழுத்தாளரான சரத் சந்திர சட்டபாத்யாய. 1917-ல் எழுதப்பட்டு பின்னர் இந்தியா முழுவதும் திரை இயக்குநர்களையும் பார்வையாளர்களையும் ஈர்த்தது தேவதாஸ் நாவல். 1928-ல் இயக்குநர் பி.சி. பருவாவால் மவுனப்படமாக எடுக்கப்பட்டது. அவரே 1935-ல் வங்காள மொழியிலும் இந்தியிலும் அதைப் பேசும் படமாக்கினார்.

பின்னர் 1955-ல் துயர நாயகனாக திலீப் குமாரை நாயகனாக்கி பிமல் ராய் எடுத்த ‘தேவதாஸ்’ இன்றும் பாலிவுட் திரைக்காவியங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. நாகேஸ்வர ராவ், கமல் ஹாசன், ஷாரூக் கான் என காலங்காலமாக நாயகர்கள் துயர நாயகர்களாக பல்வேறு மொழிகளில் வடிவெடுத்த தேவதாஸின் கதையை நவீன வாழ்க்கைக்கு ஏற்றவாறு மாற்றி அனுராக் காஸ்யப் எடுத்து வெற்றிபெற்ற திரைப்படம் எது?

4. ராஜாஜிக்கு சினிமா பிடிக்கும்!

அப்போது இளம் இயக்குநராக இருந்த சிங்கீதம் சீனிவாச ராவ், 90 வயதுகளில் இருந்த மூதறிஞர் ராஜாஜியிடம் சென்று அவரது நாவலைப் படமாக்குவதற்கு அனுமதி கேட்டுப் போனார். ராஜாஜிக்கு சினிமா பிடிக்காது என்று கேள்விப்பட்டிருந்த சீனிவாச ராவ், அவரிடம் தயங்கித் தயங்கி தனது அனுமதியைக் கேட்டார். “யார் சொன்னது? எனக்கு மோசமான படங்களைத்தான் பிடிக்காது” என்று சூடாகப் பதில் சொல்லி, அனுமதி அளித்தார். மதுவின் தீமைகள் குறித்தும் அது குறிப்பாக குடும்பங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் 1974-ல் எடுக்கப்பட்ட அந்தப் படம்தான் ‘திக்கற்ற பார்வதி’.

ஸ்ரீகாந்த் - லக்ஷ்மி இருவரும் நாயகன், நாயகியாக நடிக்க கருப்பு வெள்ளையில் வெளியான திரைப்படம் இது. வீணை சிட்டிபாபு இசையமைத்து, ஒளிப்பதிவாளர் ரவி வர்மா பணியாற்றிய இத்திரைப்படத்தின் ஒரு பாடலை ராஜாஜியே எழுதியிருந்தார். சிறந்த பிராந்திய மொழித் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்ற இத்திரைப்படம் 28 நாளில் ஒரே கட்டமாக ராஜாஜியின் பிறந்த ஊரில் படம்பிடிக்கப்பட்டது. அந்த ஊர் எது?

5. ஷூவைத் தின்ற இயக்குநர்!

போர்ச் சூழ்நிலைகளில் பாதிக்கப்படும் சமூகங்களைக் குறித்த அரசியல் ரீதியான ஆவணப்படங்களை எடுப்பதற்குப் புகழ்பெற்றவர் எர்ரல் மோரிஸ். ‘தி ஃபாக் ஆப் வார்’, ஸ்டாண்டர்ட் ஆபரேட்டிங் ப்ரொசிஜர்’ போன்ற படங்கள் புகழ்பெற்றவை. இவர் 1978-ல் எடுத்த ‘கேட்ஸ் ஆப் ஹெவன்’ உள்ளடக்க அளவிலேயே சுவாரசியம் மிக்கது. செல்ல வளர்ப்புப் பிராணிகளுக்காக ஆடம்பரமான சமாதிகளைக் கட்டி மரியாதை செய்யும் வித்தியாசமான மனிதர்கள் பற்றியது இந்த ஆவணப்படம். இந்த ஆவணப்படத்தில் தாங்கள் வளர்த்த பூனை, நாய்களைப் பற்றி ஆத்மார்த்தமாகவும் நேசத்துடன் அவர்கள் பேசும் நேர்காணல்களும் இந்தப் படத்தில் உள்ளன.

மனித இயல்பிலுள்ள சோகம், நகைச்சுவை, முரண்பாடுகளைப் பேசும் இந்த ஆவணப்படம் செவ்வியல் ஆக்கங்களில் ஒன்றாகப் பேசப்படுகிறது. இப்படம் குறித்த யோசனையை எர்ரல் மோரிஸ் சொன்னபோது அவரது நண்பரும் புகழ்பெற்ற இயக்குநருமான ஒருவர், “இத்திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டால் நான் எனது ஷூவைச் சாப்பிடுவேன்” என்று சவால் விட்டார். அந்த சவாலில் தோற்று ஷூ சாப்பிட்ட அந்த இயக்குநர் யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in