

கடந்த இரண்டு வாரங்களில் வெளியான ‘கேப்டன் மில்லர்’, ‘புளூ ஸ்டார்’ ஆகிய இரண்டு படங்களின் ஒளிப்பதிவை ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டியிருக்கிறார்கள். இவற்றில், கிராமத்து இளைஞர்களின் கிரிக்கெட், அரக்கோணம் பகுதியின் வட்டார வாழ்க்கை என ‘புளூ ஸ்டார்’ படத்தின் கதைக் களத்துக்குள் பார்வையாளர்களை உள்ளிழுத்துக்கொள்ளும் மாயத்தை ஒளிப்பதிவு மூலம் சாத்தியமாக்கியிருந்தார் தமிழ் ஏ. அழகன். ஏற்கெனவே ‘O2’ படத்தின் ஒளிப்பதிவுக்காக கவனம் பெற்றிருந்த அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
‘பீரியட்’ படம் எனும்போது ஒளிப்பதிவாளருக்குக் கலை இயக்கம் எவ்வளவு ஒத்திசைவாக இருக்க வேண்டும்? - ஆடை, வாகனங்கள், நடிகர்களின் ஹேர் ஸ்டைல், தோற்றம் ஆகியவற்றுடன் கலை இயக்கம் நின்றுவிடக் கூடாது. கதையில் நடைபெறும் நிகழ்வுகள் அந்தக் காலத்தில் எப்படி நடந்திருக்கும் என்கிற சித்தரிப்பில், ஒளிப்பதிவாளரும் கலை இயக்குநரும் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்தப் படத்தின் கதை 90களில் நடக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் அரக்கோணத்தில் கிரிக்கெட் விளையாடியவர்கள் மட்டு மல்ல, மாநிலம் முழுவதும் உள்ள ஊர்களில் அப்போது கிரிக்கெட் விளையாடியவர்களும் அதைப் பார்த்தவர்களும் ‘அப்போ நாம ஆடின கிரிக்கெட் இப்படித்தானே இருந்தது!’ என்று உணரவேண்டும். அதற்குப் படத்துடன் தங்களைத் தொடர்புப்படுத்திக்கொள்ளும் விதமாக ஒளிப்பதிவு அமைய வேண்டும்.
இந்தப் படத்தின் இயக்குநர் ஜெயக்குமார், பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது ‘ஆர்ட் டிபார்ட்மெண்ட்’டைக் கவனித்து வந்தவர். அது எனக்குப் பெரிய துணையாக இருந்தது.
அரக்கோணம், வேலூர் பகுதி என்றாலே ‘வெயில்’ வருத்தும். இதில் வெயிலை அழகாகச் சித்தரிக்க என்ன காரணம்? - கிரிக்கெட் விளையாட்டு என்று வரும்போது வெயில் தவிர்க்க முடியாதது. வெயிலை அனைத்துக் காட்சிகளிலும் கொண்டு வரவேண்டும் என்று இயக்குநர் கேட்டபோது அது எனக்குச் சவாலாகவே இருந்தது. புறக்கணிப்பு, நிராகரிப்பு, அவமதிப்பு, காதல், அரவணைப்பு, புதிய தலைமுறை இளைஞர்களுக்கு இடையிலான புரிதல் என்று கதை உருவாக்கும் உணர்வுகள், பார்வையாளர்கள் மனதைக் கனியச் செய்யக்கூடியவை.
அதனால், இயல்பில் அப்பகுதியின் வெயில் வீரியமாக இருந்தபோதும் அதை, இதமாக, அழகாகக் காட்டுவதென்று முடிவுசெய்தோம். துடிப்பான கிராமத்து இளைஞர்களின் வாழ்க்கையைச் சொல்லும் கதை என்பதால் முழுப் படமும் ‘மூவ்மெண்ட்’டில் தான் இருக்கும். கேமராவைக் கையில் வைத்துக்கொண்டு காட்சிகளைப் படமாக்கினேன்.
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘எனக்கு கிரிக்கெட் தெரியாது’ என்று பேசினீர்கள். ஆனால், கிராமத்தில் ஆடும் விளையாட்டுக்கும், தொழில்முறை ரீதியாக கிரிக்கெட் கிளப் நடத்தும் கோப்பைக்கான போட்டியில் விளையாடுவதற்கும் உள்ள துல்லியமான வேறுபாடுகளை எப்படிக் கொண்டுவந்தீர்கள்? - படத்தில் இடம்பெறும் கிரிக்கெட் போட்டிகள், இதுவரை கிரிக்கெட் விளையாட்டுப் பிடிக்காத ஒருவர் படம் பார்க்க வந்தாலும் அவருக்குப் பிடிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று முடிவுசெய்தோம். அதற்கு அந்த விளையாட்டின் நுட்பங்கள், உத்திகள் ஈர்க்கும்விதமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
இதற்காக இயக்குநர் ஜெயக்குமார், ‘83’, ‘800’ போன்ற கிரிக்கெட் படங்களில் விளையாட்டு இயக்குநராகப் பணிபுரிந்த துருவ் என்கிற நிபுணரை அழைத்துக்கொண்டு வந்தார். அவர் சொன்ன நுணுக்கங்கள் எனக்கு கிரிக்கெட் மீது தனி மரியாதையை ஏற்படுத்தின.
அவரது பங்களிப்பைத் தேவைக்கு அதிகமாகவே பயன்படுத்திகொண்டேன். துருவின் ஆலோசனைகளைக் கொண்டே, போட்டிகளை வேறுபடுத்திக்காட்டும் காட்சியாக்கத்துக்கான எனது தொழில்நுட்பத்தைத் தேர்வு செய்துகொண்டேன். கிரிக்கெட் போட்டி காட்சிகளை மட்டும் 45 நாள் படமாக்கினோம். இப்போது திரையரங்குகள் கிரிக்கெட் மைதானம்போல் பெரும் கொண்டாட்டமாக இருப்பதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி யாக இருக்கிறது.
அடுத்து? - ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு நடிக்கும் படத்துக்கு தற்போது ஒளிப் பதிவு செய்துக்கொண்டிருக்கிறேன்