

அமெரிக்காவில் ஒரு சிறிய கிராமம். அக்கிராமத்தில் மிகச்சிலர் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். மாலை வேளை நெருங்கியதும், அந்த கிராமத்தின் போலீஸ் அதிகாரி யான ஷெரீஃப், கையில் ஒரு மணியை எடுத்துக்கொள்வார். அதை அடித்துக்கொண்டே கிராமத் துக்குள் வலம் வருவார். அந்த மணிச் சத்தத்தைக் கேட்டதும் அதுவரை வெளியே வேலைகளில் ஈடுபட்டிருக்கும் கிராமவாசிகள் அனைவரும் உடனடியாக வீடுகளுக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொள்வார்கள்.
இது தினமும் அங்கே நடக்கும் கட்டாய நிகழ்வு. ஷெரீஃப்பின் எச்சரிக் கையை ஏற்று மாலையில் அனை வரும் வீடுகளுக்குள் விரைந்து தாழிட்டுக்கொள்ள என்ன காரணம்? அதேபோல் அந்தக் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளங்கை அளவு கொண்ட ஒரு கல் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கிறது.
ஷெரீஃப்பின் மணிச்சத்தம் கேட்டதும் வீடுகளுக்குள் விரையும் எல்லாரும் அந்தக் கல்லைத் தொட்டுப் பார்த்தும் அமைதி அடைகின்றனர். அது ஏன்? அக்கற்கள் ஏன் வீடுகளுக்குள் தொங்கவிடப்படுகின்றன? அன்று இரவு, ஷெரீஃப்பின் அலுவலகத்துக்கு வெளியே தொங்கும் அறிவிப்புப் பலகையைப் பார்க்கிறோம். அதில், ‘சம்பவம் நடக்காத இரவுகள் - 96’ என்று எழுதப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்து ஷெரீஃப் பெருமூச்சு விட்ட படியே உள்ளே செல்கிறார். அது ஏன்?
ஜன்னல் திறந்தால் ஆபத்து: அன்று இரவு வீடு வந்து சேரவேண்டிய ஃப்ராங்க், கிராமத்தின் மதுபான விடுதியில் மயங்கி விழுந்து கிடக்கிறான். வீட்டில் மனைவியும் 8 வயது மகளும் அவனது வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். இருட்டிய பின்னும் ஃப்ராங்க் வந்துசேராததால் வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே செல்கிறார்கள். அன்றிரவு தூங்கச் செல்லும்முன் மாடியில் ஏதோ சத்தம் கேட்டு ஃப்ராங்க்கின் மனைவி மேலே செல்கிறாள்.
அங்கே, மாடியில் ஒரு கண்ணாடி ஜன்னல் பூட்டப்பட்டிருக்க, அதன் வெளியே பரிதாபமான முகத்தோடு ஒரு பாட்டி நிற்கிறார். குழந்தையிடம், “வெளியே இருக்க முடியவில்லை; நான் உள்ளே வரட்டுமா” என்று கெஞ்சுகிறார். அந்தச் சிறுமி பாட்டியைப் பரிதாபமாக பார்த்து அவளுக்கு உதவலாம் என்று சட்டென முடிவெடுக்கிறாள். அவளுடைய அம்மா, ‘வேண்டாம்..’ என்று அலறிக்கொண்டே ஓடிவர, அதற்குள் குழந்தை ஜன்னலைத் திறந்துவிடுகிறாள்.
காலையில் மயக்கம் தெளிந்து எழும் ஃப்ராங்க், வீட்டுக்கு வருகிறான். வீட்டு வாசலில் கிராமவாசிகள் சிலர் நின்றுகொண்டிருப்பது தெரிகிறது. ஃப்ராங்க்கைப் பார்த்ததும் வீட்டுக் குள்ளிருந்து ஆவேசமாக ஓடிவரும் ஷெரீஃப், அவனை உள்ளே இழுத்துச் செல்கிறார். மாடியில் அவனைக் கொண்டுபோய் நிறுத்துகிறார். அங்கே, கொடூரமாகக் கொல்லப்பட்ட நிலையில் அவனது மனைவியும் மகளும் தரையில் கிடக்கிறார்கள்.
இதைப் பார்த்து ஃப்ராங்க் அலற, “சிறு குழந்தையை வீட்டில் வைத்துக் கொண்டு இருக்கிறாய் - எனவே ஜன்னலை நிரந்தரமாக ஆணியடித்து மூடு என்று எத்தனை முறை சொன்னேன்? முட்டாளே.. அதைக் கேட்காமல் போனாய்.. இப்போது என்ன நடந்திருக்கிறது பார்த்தாயா? இதற்கான தண்டனை உனக்கு உண்டு” என்று அவனைப் பார்த்துக் கத்துகிறார் ஷெரீஃப். ஃப்ராங்க்கின் மனைவிக்கும் குழந்தைக்கும் என்ன ஆனது?
வழிதவறிய குடும்பம்: அந்த கிராமத்தை நோக்கி இரண்டு வாகனங்கள் வந்துகொண்டிருக் கின்றன. ஒன்று காராவேன். அதில், ஜிம், அவனுடைய மனைவி தபிதா, பிள்ளைகள் ஜூலி, ஈதன் ஆகியோர் இருக்கிறார்கள். மற்றொன்று கார். அதில் டோபி, ஜேட் என்கிற இரண்டு இளைஞர்கள். முதலில் நாம் பார்ப்பது ஜிம்மின் காராவேன் வண்டி. அவர்கள் பெரிய பயணம் திட்டமிட்டிருக்கிறார்கள். அப்போது சாலையில் ஒரு மரம் விழுந்திருப்பது தெரிகிறது.
இதனால் வேறு வழியில் அவர்கள் பயணிக்கும்போது இந்தக் கிராமம் வருகிறது. கிராமத்துக்குள் வருகிறார்கள். அப்போது அங்கே ஃப்ராங்க்கின் மனைவி, மகளின் சடலங்களை அடக்கம் செய்து கொண் டிருக்கிறார்கள். ஷெரீஃப்ஃபிடம் தாங்கள் ‘வழிமாறி’ வந்துவிட்டதாகக் கூறி ஜிம் வழி கேட்க, மரம் விழுந்த இடத்திலிருந்து இன்னொரு பக்கம் சென்றால் பெரிய சாலையை அடையலாம் என்று ஷெரீஃப் சொல்கிறார். வண்டி கிளம்புகிறது.
ஆனாலும் திரும்பத் திரும்ப இதே கிராமத்தின் வழியே மட்டும்தான் அவர்கள் பயணிக்க நேர்கிறது. இதை ஷெரீஃப் கவனிக்கிறார். கிராம மக்களும் பார்க்கின்றனர். ஜிம்முக்கும் தபிதாவுக்கும் இது ஏன் என்று தெரியவில்லை. அப்போது எதிரே வரும் இரண்டாவது வண்டி இவர்கள் வண்டியில் உரசுவதுபோல வருவதால் இரண்டு வண்டிகளும் விபத்துக்குள்ளாகின்றன. இரண்டா வது வண்டியிலிருந்து காயப்பட்ட டோபி இறங்கி ஊருக்குள் செல்கிறான்.
அங்கே இருக்கும் ஷெரீஃபை சந்தித்து, விபத்தைப் பற்றிச் சொல்கிறான். உடனே அவனுக்குச் சிகிச்சை அளிக்கும்படி சொல்லிவிட்டு, ஷெரீஃப் விபத்தான பகுதிக்கு ஓடுகிறார். இருட்ட இன்னும் இரண்டு மணி நேரமே இருப்பதால் அவருக்கு இந்தப் பதற்றம்.
ஜாக் பெண்டரின் இயக்கம்: இவைதான் ‘From’ வெப் சீரீஸின் தொடக்க நிமிடங்கள். அறிவியல் புனைவு கலந்த ஒரு மர்மக் கதை என்பதுதான் ‘From’ சீரீஸ் தனித்துத் தெரியக் காரணம். கதைப்படி அந்த கிராமத்துக்குள் வருபவர்கள் திரும்பிச் செல்லவே முடியாது. எந்தப் பக்கம் சென்றாலும் திரும்பவும் ஊருக்கு உள்ளேதான் வரவேண்டும். வேறு வழியே கிடையாது.
இப்படி எங்கெங்கோ பயணித்துக் கொண்டி ருந்த விதவிதமான மக்கள், மரம் விழுந்திருக்கும் சாலையில் இருந்து இக்கிராமத்துக்குள் வந்து சேர்ந்திருப் பார்கள். ஷெரீஃப் உட்பட அங்கே இருக்கும் அனைவருமே அப்படி அங்கே வந்து சேர்ந்தவர்கள்தான்.
இதில் கதை தொடங்கும்போது உள்ளே வரும் இரண்டு கார்களில் இருக்கும் ஜிம்மின் குடும்பம், டோபி, ஜேட் ஆகிய இளைஞர்கள் புதிதாக சேர்ந்துகொள்கிறார்கள். இந்த கிராமத்தில் இருப்பவர்கள் வெளியே வர என்னென்ன முயற்சிகள் செய்கின் றனர்? தினமும் இரவில் கிராமத்தில் நடமாடும் கொடிய சக்திகள் யார்? வீடுகளில் தொங்கும் கற்களின் மர்மம் என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடைதான் இந்த சீரீஸ். இந்த ‘From’ சீரீஸின் முதல் சீசனில் 4, இரண்டாவது சீசனில் 6 என்று மொத்தம் 10 எபிசோடுகள் இந்த சீரீசில் இயக்கியிருப்பவர் ஜாக் பெண்டர் (Jack Bender). எழுபதுகளில் இருந்தே தொலைக்காட்சியில் பிரபலமாக இயங்கிவரும் இயக்குநர்.
‘Game of Thrones', ‘Lost, The Sopranos’, ‘Judging Amy’, ‘Alias’ உட்பட எத்தனையோ சீரீஸ்களில் பல எபிசோடுகளை இயக்கியவர். இதுவரை இரண்டு சீசன்கள் வந்திருக்கும் ‘From’ சீரீஸில் எதிர்பாராத மர்மங்கள், புதிர்கள், விஞ்ஞான அம்சங்கள் என்று எத்தனையோ உண்டு. ஒவ்வொரு எபிசோடிலும் பல புதிய விஷயங்கள் பார்ப்பவர்களை எழுந்து செல்லாதவண்ணம் இருத்தி வைப்பதுதான் இந்த சீரீஸின் சிறப்பு.
- rajesh.scorpi@gmail.com