Last Updated : 02 Feb, 2018 11:02 AM

Published : 02 Feb 2018 11:02 AM
Last Updated : 02 Feb 2018 11:02 AM

தரணி ஆளும் கணினி இசை 17: தாளத்திலிருந்து பிறக்கும் மெட்டு!

ஒரு பாடலின் இசைக் கோவையை ‘அரேஞ்மெண்ட்’ செய்வதில் இசையமைப்பாளரின் கற்பனைக்கு மிகப் பெரிய பங்கிருக்கிறது. இதில் கைதேர்ந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இதைக் கண்கூடாக அருகிலிருந்து பார்த்து, கேட்டு உணர்ந்திருக்கிறேன். கம்போஸ் செய்யும்போது இசைக் கோவையின் ஒரு பகுதியாக இடம்பெறும் கார்ட்ஸ் அண்ட் பேட்ஸ் சவுண்ட்களை மிடி கீ போர்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் சவுண்ட் மாடியூல்களிலிருந்து (sound modules) ரஹ்மான் தேர்வு செய்திருப்பார். ஒரு கீ போர்டுடன் முப்பதுக்கும் அதிகமான மாடியூல்கள் ஒயர்கள் வழியே இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மாடியூலிலும் ஆயிரக்கணக்கான சேம்பிள் ஒலிகள் இருக்கும்.

ரஹ்மான் அவற்றிலிருந்து தோண்டித் துருவி ஒலிகளைத் தேர்வு செய்து தனது கீ போர்டில் அவற்றை ‘புரோகிராம்’ செய்திருப்பார். அவர் அப்படித் தேர்வு செய்த ஒலிகளில் எந்த ஒலிக்குப் பிறகு எது வர வேண்டும், அது எந்த மாடியூலில் எந்த லேயரில் இருக்கிறது, அதன் பெயர் என்ன, அதன் எண் என்ன என்று ஒரு நோட்டுப் புத்தகத்தில் நான் குறித்து வைத்துக்கொள்வேன். மறுநாள் திரும்பவும் அதை வாசிக்க அவர் வருவதற்குமுன், வரிசை மாறாமல் ரீகால் செய்து வைத்திருந்து தர வேண்டும்.

ரஹ்மானிடம் வேலைக்குச் சேர்ந்த புதிதில் நான் செய்த முதல் பணி இதுதான். இந்த இடத்திலிருந்தே ரஹ்மானிடம் நான் கற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டேன். கணினித் தொழில்நுட்பம் நன்கு அறிந்த ஒரு கம்போஸர் செய்யக்கூடிய எல்லா வேலைகளையும் ரஹ்மானிடம் கற்றுக்கொண்டேன்.

சவாலான சேம்பிள் உருவாக்கம்

இன்று சேம்பிள் தயாரிப்பு என்பது மிக மிக எளிதாகிவிட்டது ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன், இப்பணி மிகச் சவாலான ஒன்று. அதற்குக் காரணம் தொடக்க நிலையில் இருந்த தொழில்நுட்ப வளர்ச்சி. அப்போது வித்தியாசமான வாத்தியங்களை சேம்பிள் செய்து, அவற்றைக் கொண்டு வித்தியாசமாக கம்போஸ் செய்வதற்கு இவை பயன்படும். ஆனால், பாடலை ரஹ்மான் இறுதி செய்யும்போது சேம்பிள் செய்ததை லைவ் கருவிகள் கொண்டு வாசிக்கச் செய்து அதைப் பதிவு செய்துகொள்வார்.

இந்த முறைதான் அவரது பாடல்கள் வித்தியாசமும் அவற்றில் இடம்பெறும் ஒலிகள் தரமும் கொண்டவையாக இருக்கக் காரணம். சேம்பிள் உருவாக்குவதில் இருந்த நேர்த்தியைக் கண்ட ரஹ்மான், ‘லண்டலின் உள்ள முக்கியமான சேம்பிள் நிறுவனத்தில் என்னைச் சேர்த்துவிடட்டுமா’ என்று கிண்டலாகக் கேட்டார்.

வெள்ளிதோறும் நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது ஒருமுறை நான் கம்போஸ் செய்து நானே ட்ராக் பாடியிருந்த ஒரு சிறு பாடலை அவரது அனுமதி இல்லாமல் காரில் ஒலிக்கவிட்டேன். ஓய்வாக வண்டியில் சாய்ந்திருந்தவர் அதைக் கேட்டுச் சட்டென்று எழுந்து உட்கார்ந்துவிட்டார். கேட்டு முடித்ததும் “இதை நீ பாடினாயா?” என்றார். நான் சங்கோஜத்தில் நெளிந்தேன். உடனே அவர் “ இசையமைப்பதற்கான தகுதி உன்னிடம் இருக்கிறது” என்று மனதாரப் பாராட்டினார். நான் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விஷயங்களைச் சுட்டிக்காட்டினார். நான் மெய்சிலிர்த்துப்போனேன்.

முன்மாதிரி

ரஹ்மானிடம் நான் பெரிதும் வியந்தது இன்றும் வியப்பது அவரது தொழில்நுட்ப அறிவு. அன்றாடம் வந்துகொண்டே இருக்கும் தொழில்நுட்பங்களை உடனுக்குடன் தெரிந்துகொண்டு தன்னை அப்டேட் செய்துகொள்வதில் இன்றுவரை அவரது ஆர்வம் தணியவில்லை. சவுண்டை பிரசென்ட் செய்வதில் ரஹ்மான் முன்மாதிரிகளை உருவாக்கியவர். இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

‘காதல் தேசம்’ படத்தில் இடம்பெற்ற ‘முஸ்தபா முஸ்தபா’ பாடலில் ட்ரம்ஸ் ஒலியை ஆஃப் வேயில் கட் செய்து அதை வித்தியாசமாக ஒலிக்கச் செய்திருப்பார். முதன்மையான வாத்தியங்கள் என்று வருகிறபோது எல்லோரும் பயன்படுத்தும் வாத்தியங்களைத்தான் ரஹ்மானும் பயன்படுத்துகிறார். ஆனால், அவற்றின் ஒலிகளைக் கையாளும் விதமும் அதைப் பிரசெண்ட் செய்யும் விதமும் அவரிடம் எதிர்பார்க்க முடியாத கற்பனையுடன் வெளிப்பட்டிருப்பதைக் காண முடியும். அதேபோல ஒரு ஒலிக்கும் மற்றொரு ஒலிக்கும் இடையில் இருக்க வேண்டிய ‘கிளாரிட்டி’க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.

இசைக் கோவையில் எந்தவொரு சிறிய ஒலியும் புதைந்துபோய்விடக் கூடாது என்பதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வார். இதற்காக வேறுவேறு ஒலிப்பதிவு முறைகளை முயன்று பார்ப்பார். சில ஒலிகள் கேட்கவில்லை என்றால் எந்த ஒலிப்பதிவு முறையில் அவை தெளிவாகக் கேட்கின்றன என்று முயன்றுபார்த்து, அதில் பதிவு செய்ய அதிக நேரம் எடுத்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல், “ இதில்தான் துல்லியமாக இருக்கிறது, இதையே பின்பற்றுவோம்” என்று கூறி அதை வலியுறுத்துவார்.

ஒலிகளின் தேர்வு

ஒலிகளைத் தேர்வு செய்வதில் ரஹ்மானின் ரசனையையும் பொறுமையையும் நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். ஒரு சேம்ளரில் ஆயிரத்துக்கும் அதிகமான ஒலிகள் பதிவுசெய்யப்பட்டிருந்தால் ஒவ்வொன்றாகப் பொறுமையாகக் கேட்டு, அதிலிருந்து தனக்குத் தேவையான ஒன்றே ஒன்றை எடுப்பார். அதை கீ போர்டில் வாசிக்கும்போது அதன் தன்மை, அசலைவிடச் சிறந்த ஒன்றாக அவரது கைவண்ணத்தில் மாறிவிட்டிருக்கும். இப்படி இருந்த சேம்பிள் ஒலி முற்றிலும் வேறு வடிவத்துக்கு மாறிவிட்டதே என்று நாம் வியக்க வேண்டியிருக்கும்.

அதே போல் சேம்பிளர் சந்தையில் ஒரு தயாரிப்பு புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது என்றால் அவற்றைக் கிளறிப்பார்த்து, ரத்தினங்களை மட்டும் அதிலிருந்து விரைவாக எடுத்துக்கொள்ளும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது. ஒரு புதிய சேம்பிளர் சிடியில் ஆயிரக்கணக்கில் ஒலிகள் இருக்கின்றன என்றால் அவற்றில் பத்து ஒலிகள்தான் தேறும் என்றால் அந்தப் பத்தையும் எவை எவை என்று கண்டுபிடித்து அவற்றை முதலில் பயன்படுத்திவிடும் வேகம் ரஹ்மானுக்கே உரியது.

மெட்டுக்கு முன்பே தாளம்

ஒரு கம்போஸராக ரஹ்மானிடம் நான் மிகவும் ரசித்த ஒன்று அவரது ரிதம் கம்போஸிங். ஒரு பாடலுக்கான மெட்டை கம்போஸ் செய்யும்முன் அதற்கான தாளக்கட்டைத்தான் முதலில் கம்போஸ் செய்வார். கதையைக் கேட்டபின் பாடலுக்கான சூழ்நிலைகளைத் தனித்தனியே மனதில் உள்வாங்கிக்கொண்டு ஒரு புள்ளியிலிருந்து அவர் முதலில் தாளத்தை உருவாக்கி, அந்தத் தாளத்துக்குள் ஒளிந்திருக்கும் மெட்டை வெளியே எடுத்துவருவார்.

ஒரு சிறந்த மெட்டு எந்த அளவுக்கு ஈர்க்கிறதோ அதே அளவுக்கு மெட்டுக்கு இடையில் வரும் பேக்கிங் என்று நாங்கள் சொல்கிற இசைக் கோவையும் ஈர்க்க வேண்டும். இதைத்தான் அரேஞ்மெண்ட் என்றும் சொல்கிறோம். இவற்றிலும் மெட்டுக்களின் தன்மை இழைந்தோடும். மெட்டுக்கு இணையான ஈர்ப்புகொண்ட இசைக் கோவையை வழங்கியதில் தனித்து நின்றவர் இளையராஜா என்றால் அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றார் ரஹ்மான். அவரது இசைக் கோவையிலிருந்து பலர் பல மெட்டுகளை உருவாக்கியிருக்கிறார்கள். ரஹ்மானின் இசைக் கோவை பணிகளில் நான் வேலை செய்த அனுபவங்கள் ஏராளம்.

‘பாபா’ பட அனுபவம்

லண்டனில் இருந்தபடி ரஹ்மான் ‘பாபா’ படத்துக்காகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது நான் ஸ்டுடியோவில் பொறுப்பில் இருக்கிறேன். ஒரு டுயூனை கம்போஸ் செய்து பாடி அனுப்பியிருந்தார். அதற்குக் கவிஞரிடம் வரிகளை எழுதி வாங்கி, பாடலுக்குக் கூடுதல் பார்ட்ஸ் (parts) எல்லாவற்றையும் சேர்த்து பாடகர் கார்த்திக்கை ட்ராக் பாட வைத்து அதைப் பதிவுசெய்து ரஹ்மான் சாருக்குத் திரும்ப அனுப்பி வைத்தேன்.

ரஜினி அற்புதமாக நடனமாடியிருந்த ‘மாயா மாயா எல்லாம் மாயா’ என்ற பாடல் அது. பாடலை அனுப்பி இரண்டு நாட்கள் வரையிலும் ரஹ்மான் சாரிமிருந்து எந்தப் பதிலும் இல்லை. படக் குழுவிலிருந்து ‘பாட்டு என்ன சார் ஆச்சு’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். நாம் செய்த வேலை ரஹ்மான் சாருக்குப் பிடிக்காமல்போய்விட்டதோ என்று குழம்பிக்கொண்டிருந்தேன். மூன்றாம் நாள் ரஹ்மானிடமிருந்து போன் வந்தது. “ பாடல் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. வெரிகுட்...” என்றார். அதன் பிறகு உதித் நாராயணனையை அழைத்து இந்தப் பாடலைப் பதிவு செய்தார்.

பிறகு ரஹ்மான், இயக்குநர், ரஜினி ஆகியோர் ட்ராக் பாடிய கார்த்திக்கின் குரலே இந்தப் பாடலுக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று முடிவு செய்து அவரையே பாட வைத்தனர். இந்த ‘மாயா’ பாடல்தான் கார்த்திக்கு அடையாளம் கொடுத்தது. மேலும், அதே படத்தில் மற்றொரு பாடலைப் பாடவும் அவருக்கு வாய்ப்பாக அமைந்தது.

கார்த்தி போன்ற ‘தகுதியான திறமைகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் ரஹ்மானை மிஞ்ச யாருமில்லை. அப்படிப்பட்ட ரஹ்மான் உள்ளிட்ட சில கம்போஸர்களின் இசைக்கு மட்டும்தான் இன்று ஆடியோ சந்தையில் விலை கிடைக்கிறது. கணினி தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு ஆடியோ சந்தையை அது புரட்டிப் போட்டுவிட்டது. அதைப் பற்றி அடுத்த வாரம் பேசுவோம்

தொடர்புக்கு tajnoormd@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x