Last Updated : 16 Feb, 2018 11:10 AM

Published : 16 Feb 2018 11:10 AM
Last Updated : 16 Feb 2018 11:10 AM

தரணி ஆளும் கணினி இசை 19: எம்பி3 வரமா, சாபமா?

இசை என்றில்லை, சந்தைக்கு வரும் எல்லாப் பொருட்களுக்கும் தயாரிப்புகளுக்கும் ‘டூப்ளிகேட்’ என்ற ஒன்றைத் தயாரித்து கள்ளச்சந்தையில் விற்பவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். திரையிசைச் சந்தையைப் பொறுத்தவரை பைரசி அதற்குப் பெரிய சவால்தான்.

ஆனால், அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ஒரிஜினல் தயாரிப்பை மட்டுமே வாங்க வேண்டும், ஒரிஜினலை மட்டுமே கேட்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் 10 சதவீதம் மக்கள் நேர்மையான இசைவிரும்பிகளாகவே இருக்கிறார்கள். பைரசியை நாடாத இவர்கள், இந்த டிஜிட்டல் யுகத்தில் இசையை எங்கிருந்து வாங்குகிறார்கள். சிடி விற்பனை மையங்களைத் தேடிச் சென்று தங்கள் நேரத்தை இவர்கள் வீணாக்குவதில்லை.

இந்த இடத்தில்தான் கூகுள் பிளே, ஐடியூன்ஸ் போன்ற மிகப் பெரிய சர்வதேச நிறுவனங்களின் இணையதளங்கள் அவர்கள் வெளியிட்டுள்ள செயலிகள், ராகா.சொம், கானா.காம் போன்ற பல தனியார் இணையதளங்களில் படத்தின் ஒரிஜினல் ட்ராக்குகளைப் பணம் கட்டி தரவிறக்கிக்கொள்ளலாம்.

இதே தளங்கள் மற்றும் செயலிகள் வழியே நீங்கள் ஒரிஜினல் பாடல்களை இலவசமாக இரண்டு மாதங்களுக்கு ‘பிளே’ செய்து கேட்க முடியும். இப்படிக் கேட்கக் கேட்க, ஈர்க்கும் பாடலாக அது அமைந்துவிட்டால், ஒரு கட்டத்தில் அதைப் பணம் கொடுத்து வாங்கிவிட வேண்டும் என்ற மனப்பான்மையை ரசிகரிடம் அது உருவாகிவிடும்.

இதுபோன்ற தளங்களில் இசையைக் கேட்கச் செல்லும் ரசிகன், தொடக்கத்திலேயே தனது டெபிட் அல்லது கிரெடிட் கார்டின் விவரங்களைப் பதிவுசெய்த பின்பே தளத்தில் உள்நுழைந்திருப்பான். வாங்க வேண்டும் என்ற மனநிலை வரும்போது ஒரு கட்டத்தில் தயக்கத்தை விட்டுவிடும் போதையான மனநிலைக்கு ஆட்பட்டுவிடுவார்கள்.

இசையை ஜனநாயகப்படுத்திய எம்பி 3

ஒரிஜினல் இசை என்று வரும்போது சில விஷயங்களைக் கவனியுங்கள். இணையம் வழியாக அல்லது சிடி மூலம் பணம் கொடுத்து வாங்கும் இசையின் தரம் உறுதிசெய்யப்பட்ட ஒன்று. ஒரு இசையமைப்பாளர் தனது பாடலை எப்படித் தர வேண்டும் என்று நினைத்தாரோ, அந்த வடிவத்தின் 100 சதவீத ‘பைனல் அவுட்’(Final out) அதில் கிடைக்கும்.

அது எத்தனை பெரிய பைலாக இருந்தாலும் அதில் இடம்பெற்றிருக்கும் அத்தனை ஒலிகளும் ‘லாஸ்’ ஆகிவிடாத வண்ணம் ஒரிஜினல் இசையை அப்படியே அப்லோட் செய்து வைத்திருப்பார்கள். எம்பி3 என்ற தொழில்நுட்பம் இதுபோன்ற பெரிய பைல்களைக் கையாளவும் பெரிய பைல்களை சிறிய அளவுக்கு கம்பிரஸ் செய்து பயன்படுத்தவும் வரமாக அமைந்து கைகொடுக்கிறது.

இந்த இடத்தில் தயாரிப்பாளருக்கோ இசையை வாங்கி விற்கும் நிறுவனங்களுக்கோ சிடி என்ற மீடியத்தால் ஏற்படும் செலவை எம்பி3யும் இணையமும் இல்லாமல் செய்துவிட்டன. ரசிகரின் அலமாரியில் வினையல் இசைத் தட்டுகளாகவும் கேசட்களாகவும் சிடிக்களாகவும் இருந்த இசை, இன்று ரசிகரின் வெர்ச்சுவல் அலமாரியாக இருக்கும் அவரது கணினியிலோ, கையடக்கக் கருவிகளிலோ இருக்கிறது.

ரசிகர் இசையை எங்கும் எளிதாக எடுத்துச் செல்லமுடிகிறது. இதற்கு ஒருபடி மேலே சென்று தனது க்ளவுட் சேமிப்பகத்தில் (cloud server account) சேமித்து வைத்துக்கொண்டு எந்த ஊர், எந்தத் தேசத்திலிருந்தும் தனது அபிமான இசையை அவர் கேட்டு ரசிக்கத் தொழில்நுட்பம் வழிவகை செய்துவிட்டது.

வெளிநாட்டில் அல்லது வெளியூரில் நடக்கும் படப்பிடிப்புகளுக்குப் பாடலை அனுப்பிவைக்க வேண்டும் என்றால், நாகரா டேப்பில் பதிவுசெய்து எடுத்துச் செல்ல வேண்டும், அதை இயக்க நாகரா கலைஞரைத் தேடிக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மின்னஞ்சலில் எம்பி3 ஃபார்மேட்டில் கம்ப்ரெஸ் செய்து அனுப்பினால் போதும். படப்பிடிப்புக் குழு அதைத் தரவிறக்கி படப்பிடிப்பைத் தடங்கலின்றி நடத்தலாம்.

எம்பி3 என்ற தொழில்நுட்பம் வந்தபிறகுதான் இசை கடைக்கோடி ரசிகரின் கையிலும் எளிதாகச் சென்று சேர்ந்திருக்கிறது. ஒரு இசையமைப்பாளர் தனக்குப் பணம் வந்தால் போதும் என்று நினைப்பதில்லை. தனது கற்பனையையும் அதைத் தொடர்ந்துவரும் பாடலை முழுமைப்படுத்துவதற்கான இரவு பகல் பாராத உழைப்பும் மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். எம்பி3 வருவதற்கு முன்பாக இசை உரிமையை வாங்கிய நிறுவனம் அல்லது தயாரிப்பாளர் சந்தைக்குத் தேவைப்படும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் அதைப் புழங்கவிடுவார்கள். அப்போது இசை எல்லோர் வீட்டு முற்றத்திலும் ஒலிக்கவில்லை.

மக்களில் பெரும்பான்மையாக இருப்பவர்களும் இசையை ஆராதித்துக்கொண்டே உழைக்கவும் செய்யும் சாமானிய மக்கள், அன்று திரையிசையைத் திரையரங்கிலும் கோயில் திருவிழாக்களிலும் தேநீர்க் கடை வானொலிப்பெட்டிகளில் மட்டும்தான் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எம்பி3 இன்று அவர்கள் பயன்படுத்தும் 500 ரூபாய் கைபேசிக்குள் அதைக் கொண்டுவந்துவிட்டது.

இசையை அது ஜனநாயகப்படுத்திவிட்டது. ஒவ்வோர் இசையமைப்பாளரின் ஏக்கத்தையும் பூர்த்திசெய்துவிட்டது. திரையிசை இன்று தேங்கிக்கிடப்பதில்லை. எம்பி3 வழங்கிய வசதியால் கடல் கடந்து கண்டம் கடந்து உலகின் எந்த மூலைக்கும் மின்னஞ்சல் மூலம், சென்றுவிடுகிறது. எம்பி3 என்ற தொழில்நுட்பம்தான் இன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று எந்தச் சமூக வலைத்தளத்திலும் இசையை எளிதில் பகிர ஏற்றதாகப் புகழடைந்திருக்கிறது.

பைரசியில் கிடைக்காத முழுமை

அடுத்து பைரசியாகக் கிடைக்கும் இசை முழுமையானது அல்ல. இணையத்தில் தரவேற்றப்படும் பைரசி இசை அனைத்தும் கம்ப்ரெஸ் செய்யப்பட்ட சிறிய ஃபைல்களே. இப்படிச் சுருக்கி சிறிய பைல்களாகத் தரவேற்றினால்தான் அதை எளிதில் தரவிறக்கிக்கொள்ள முடியும். இப்படிப் பெரிய பைல்களைச் சுருக்கும்போது ஒரிஜினல் இசையில் உள்ள எல்லா ஒலிகளும் கிடைக்காது.

இன்று ஒரு படத்தின் பாடல்களை யூடியூபில் கேட்கும் வசதி இருக்கும்போது நான் எதற்கு அதைக் கேட்க வேண்டும் என்று சிலர் கேட்கலாம். ஒரு படத்தின் இசை வெளியாகும்போது அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தையும் ‘ஜூக் பாக்ஸ்’ என்ற பெயரில் யூடியூபில் ஏற்றிவிடுகிறார் படத்தின் தயாரிப்பாளர். படத்தில் இடம்பெறும் முக்கியக் காட்சிகளின் ஒளிப்படத் தொகுப்புகளை வீடியோ ஸ்லைட் ஷோவாகக் காட்டி அதன் பின்னணியில் பாடல்கள் வரிசையாக ஒலிக்கவிடுவதுதான் ‘ஜூக் பாக்ஸ்’.

ஒவ்வோர் ஆயிரம் பார்வையாளர்களைத் தாண்டும்போதும் ஒரு டாலர் என்ற அடிப்படையில் தயாரிப்பாளருக்கு வருவாய் கிடைக்கிறது. அதே நேரம் படத்துக்கு உலக அளவில் விளம்பரமும் கிடைத்துவிடுகிறது. படம் வெளியாகும்போதோ வெளியான பின்போ வெளியிடப்படும் வீடியோ பாடல்களுக்கு ‘ஜூக் பாக்’ஸைவிட அநேகப் பார்வையாளர்கள் கிடைப்பதால் அதில் இன்னும் சற்று அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

யூடியூபில் கிடைக்கும் வருமானத்தைவிட அதன் மூலம் படம் பற்றிய தகவலை ரசிகர்களிடம் எடுத்துச்சென்றுவிட வேண்டும் என்ற தயாரிப்பாளரின் துடிப்பே இதுபோன்ற சமூக வலைத்தளங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள காரணம். திரையிசயைப் பொறுத்தவரை தயாரிப்பாளருக்கு லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை என்ற நிலை இன்று நிலவுகிறது.

ஆனால், பாடலை உருவாக்கிய இசையமைப்பாளருக்கும் பாடலாசிரியருக்கும் கிடைக்க வேண்டிய ராயல்டி சரியாகக் கிடைக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்… ஒரு தயாரிப்பாளர் ஒரு படத்துக்கு இசையமைப்பதற்காகவும் பாடல் எழுதுவதற்காகவும் தனது இசையமைப்பாளர், பாடலாசிரியர் ஆகிய இருவருக்குமே ஊதியம் கொடுத்துவிடுகிறார். அதன் பிறகு அவர்களுக்கு ராயல்டி எதற்கு என்று கேட்கலாம்… அதை அடுத்த வாரம் பகிர்கிறேன்.

தொடர்புக்கு tajnoormd@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x