கோலிவுட் ஜங்ஷன்: அயலான் ‘மேக்கிங் வீடியோ’

கோலிவுட் ஜங்ஷன்: அயலான் ‘மேக்கிங் வீடியோ’
Updated on
2 min read

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி வெற்றிபெறும் வெகு சில ஹாலிவுட் படங்களுக்குப் படக்குழுவினர் ‘மேக்கிங் வீடியோ’ வெளியிடுவது வழக்கம். அவற்றில், படம் எப்படி உருவானது, அதில் தங்களது பங்கு என்ன என்பதை, படத்தின் இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் தொடங்கி அனைவரும் பேட்டி கொடுத்திருப்பார்கள். தமிழில் கடந்த 5 அண்டுகளாக உருவாகி தற்போது வெளியாகியிருக்கும் தமிழின் முதல் ஏலியன் படமான ‘அயலான்’ படம் எப்படி உருவானது என்பதை விவரிக்கும் ‘மேக்கிங் வீடியோ’ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் படத்தின் இயக்குநர் ரவிகுமார், தயாரிப்பாளர் கே.ஜே.ஆர், ஹீரோ சிவகார்த்திகேயன், கிராஃபிக்ஸ் நிறுவத்தின் தலைவர் பிஜாய், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா எனப் பலரும் பேட்டி அளித்துள்ளதுடன், படப்பிடிப்பு செய்யப்பட்ட ‘மேக்கிங்’ காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ‘படத்தில் மொத்தம் 4850 ஷாட்களில் கம்யூட்டர் கிராஃபிக்ஸ் இடம்பெற்றுள்ளது’ எனத் தயாரிப்பாளரும் ‘ஹாலிவுட் படங்களுக்கு அமைப்பதுபோல ‘லார்ஜ் ஸ்கே’லில் இசைப்பதிவு செய்யப்பட்டது’ என ஏ.ஆர். ரஹ்மானும் குறிப்பிட்டுள்ளனர்.

கதாநாயகனாக கருணாகரன்!

நகைச்சுவை, குணச்சித்திரம், கதையின் நாயகன் எனத் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்யக்கூடியவர் கருணாகரன். பொங்கல் ரிலீஸாக வெளியான 'அயலான்' படத்தில், கிராமத்திலிருந்து வரும் சிவகார்த்திகேயனின் ‘பாஸ்’ ஆகவும் ஏலியனை கிண்டல் செய்தும் நடித்துள்ள கருணாகரனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சிவகார்த்திகேயன் - கருணாகரன் முதல் முறையாக அமைத்திருக்கும் இந்த நகைச்சுவைக் கூட்டணி தொடரவேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது, கார்த்தி - அரவிந்த்சாமி நடிப்பில், ‘96' புகழ் பிரேம் குமார் இயக்கும் படம், நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் உட்படப் பத்துக்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இவற்றுக்கிடையில் கருணாகரன் ஹீரோவாக நடித்துள்ள ‘குற்றச்சாட்டு' என்கிற படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

சர்வாதிகாரமும் ஒரு சாமானியனும்

விஜய் ஜேசுதாஸ் நடிப்பில், சாதியத்தை எதிர்த்த ‘படைவீரன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தனா. மணி ரத்னத்தின் இணை இயக்குநரான இவர், விக்ரம் பிரபு - சரத்குமார் - ராதிகா நடிப்பில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவான ‘வானம் கொட்டட்டும்’ படத்தை இரண்டாவதாக இயக்கினார். மணி ரத்னம் கதை, எழுதித் தயாரித்த படம் அது. தற்போது விஜய்ஆண்டனி நடிப்பில் ‘ஹிட்லர்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படம் குறித்து இயக்குநர் நம்மிடம் பேசும்போது: “எனது முதலிரண்டு படங்களும் நான் எந்த ஜானருக்குள்ளும் என்னைப் பொருத்திக்கொண்டதில்லை என்பதைச் சொல்லும். அதேபோல்தான் ‘ஹிட்லர்’ வேறொரு கதை, வேறொரு களம். உண்மையில் இக்கதை விஜய் ஆண்டனி சாருக்காக எழுதப்பட்ட கதை அல்ல! என்னுடைய கதையில் அவரை உள்ளே கொண்டு வந்திருக்கிறேன். ஹீரோவுக்கு கதை எழுதுவது கடினம். அந்த கிராஃப்டை இன்னும் நான் கற்றுக்கொள்ளவில்லை. இந்தப் படத்தில் ‘ஹிட்லர்’ என்றால் ஹீரோவைக் குறிப்பதல்ல; சர்வாதிகாரத்தைக் குறிப்பது. சர்வாதிகாரத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடும் ஒரு சாமானியனின் கதை இது. எப்படிப் போராடினான் என்பதுதான் ரசிகர்களுக்கான ‘ட்ரீட்’ ஆக இருக்கும். அரசியல், காதல், துரோகம், துரத்தல் ஆகியவற்றின் பின்னணியில் ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் த்ரில்லராக இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்” என்கிறார். விஜய் ஆண்டனி ஜோடியாக ரியா சுமன் நடித்திருக்கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in