நடிப்பை வாரி வழங்கிய கர்ணன்!

நடிப்பை வாரி வழங்கிய கர்ணன்!
Updated on
3 min read

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க பி.ஆர். பந்துலு தயாரிப்பில் வெளிவந்த ‘கர்ணன்’ (14.01.1964) படத்துக்கு இது வைரவிழா ஆண்டு. இந்தக் கூட்டணியில் வந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ ஒரு ரகம். ‘கர்ணன்’ வேறு ரகம்.

கட்டபொம்மனுக்கு ஒரே பகைவன், ஒரு சில ஆள்காட்டிகள் என்பதோடு பன்முகத்தன்மை இல்லாத கதாபாத்திரம். ஆனால் கர்ணன் கதாபாத்திரமோ மிகப் பெரிய பராக்கிரம சாலி. உலகத்தின் துர்பாக்கிய சாலியும் அவன்தான். மிகவும் போற்றப்பட்ட மனிதனும் அவன்தான். அவனுடைய தாய் தொடங்கி பலராலும் உதாசீனம் செய்யப்பட்ட, ஒதுக்கி வைக்கப்பட்ட மாவீரன். செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தவன். இப்படிப் பலவித வண்ணங்கள் கொண்ட இந்தப் புராணக் காவிய நாயகன் கதாபாத்திரத்தை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏற்று நடித்ததைத் திரையில் கண்டபோது, பார்வையாளர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம் பல மடங்காகப் பெருகியது.

எந்த ஒரு படத்திலும் உயிர் நாடியான காட்சிகள் இருக்கும். கர்ணன் படத்திலும் அப்படிப்பட்ட காட்சிகள் நிறைய உண்டு. முதியவர் வேடத்துக்குள் ஒளிந்து, தனது கவசக் குண்டலங்களைக் கவர்வதற்காக வந்திருக்கும் இந்திரனின் (எஸ்.வி.ராமதாஸ்) உள்நோக்கத்தைத் தெரிந்துகொள்கிறான் கர்ணன். ‘தேவர் தலைவனே இப்படி வந்திருக்கிறாரே’ என்ற கேலிச் சிரிப்புடன் அவரை அணுகி ‘தள்ளாடிய தேகம்.... தள்ளாடாத நோக்கம்’ என்று தலையை அசைத்து நடிகர் திலகம் நக்கலாகச் சொல்லும் அந்தக் காட்சியில் திரையரங்கில் உற்சாகம் கரைபுரளும்.

அர்ஜுனனுக்கு உயிர்ப் பிச்சை கேட்டு கர்ணனிடம் குந்தி தேவி தூது வரும் காட்சி உயிரோட்டத்துடன் இருக்கும். குந்தி தேவி தன் வீடு தேடி வந்ததை ஒரு பாக்கியமாகக் கருதும் கர்ணன், அவர்தான் தன்னை ஈன்ற அன்னை என்று அறியும்போது, அதுவரை தன் பிறப்பறியா களங்க நிலை மாறி, தன் உயர்வைத் தானே உணரும்போது அடையும் உவகையும் பெருமிதமும் நம்மையும் தொற்றிக் கொள்ளும்.

ஹரியாணாவில் படப்பிடிப்பு!

படம் தயாரிப்பில் இருந்தபோது நடந்த சுவாரசியங்கள் பல. சிவாஜி கணேசனைப் பொறுத்தவரை ‘படத்தில் தான் நன்றாக நடித்தால் மட்டும் போதாது, பெரிய கதாபாத்திரமோ, சிறிய கதாபாத்திரமோ எல்லாரும் நன்றாக நடிக்க வேண்டும்’ என்று நினைப்பவர். உணர்ச்சிவசப்படக் கூடியவர். ஒரு காட்சியில் சிறுவனாக வரும் மாஸ்டர் தர், கர்ணனின் சபைக்கு ஓடிவந்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சொல்லி அழுதுகொண்டே நியாயம் கேட்பார். அந்தக் காட்சியில் தர் உணர்ச்சிகரமாகப் பேச, சிவாஜியும் உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட்டார். பின்னர், அந்தக் காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது. காட்சி சிறப்பாக முடிந்ததும் சிறுவன் தரை சிவாஜி கட்டியணைத்துப் பாராட்டினார்.

மகாபாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருதப்படும் குருக்ஷேத்திரம், ஹரியாணா மாநிலத்தில் இருக்கிறது. படத்தின் போர்க்களக் காட்சிகள் அங்கேயே சென்று படமாக்கப்பட்டன. போரில் ஈடுபடும் வீரர்களாக நடிக்க ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர். மற்ற பெரும்பாலான காட்சிகள் ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டன.

அந்தக் காலத்திலேயே 40 லட்சம் ரூபாய் செலவில் ‘கர்ணன்’ தயாரிக்கப்பட்டது. படத்தில் வரும் போர்க் காட்சிகளுக்காக ஏராளமான ரதங்கள் தயாரிக்கப்பட்டன. அவை சென்னையிலிருந்து குருக்ஷேத்திரத் துக்குக் கொண்டு செல்லப்பட்டன. படப்பிடிப்பு முடிந்ததும் அந்த ரதங்களை தஞ்சை பெரிய கோயிலுக்கு நன்கொடையாகக் கொடுத்துவிட்டார் பி.ஆர். பந்துலு!

விளம்பர உத்தி

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த ‘வேட்டைக்காரன்’ படமும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘கர்ணன்’ படமும் 1964ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியாகின. சென்னை, அண்ணா சாலையில் இருந்த சாந்தி தியேட்டரில் ‘கர்ணன்’ படம் வெளியிடப்பட்டது. அப்போது, திரையரங்க வளாகத்தில் மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கீதோபதேசம் செய்யும் காட்சி உருவ பொம்மைகளுடன் வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.


‘வேட்டைக்காரன்’ படத்தில் சிறுத்தை ஒன்று வரும். படம் வெளியாகியிருந்த சென்னை சித்ரா டாக்கீஸ் திரையரங்கின் வாயிலில் காடு போன்ற ‘செட்’ போடப்பட்டு, ஒரு கூண்டில் நிஜமாகவே உயிர் உள்ள சிறுத்தை ஒன்று அடைத்து வைத்து ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த அலங்காரங்களைப் பார்ப்பதற்கு அப்போது இந்த இரு திரையரங்குகளிலும் பெரும் கூட்டம் கூடியது.

நீக்கப்பட்ட காட்சி

துரியோதனன் அரசவையில் திரௌபதி துகிலுரியப்படும் காட்சி ‘கர்ணன்’ படத்துக்காக படமாக்கப்பட்டது. திரௌபதியின் கதா பாத்திரத்தில் ஜெயந்தி நடித்திருந்தார். ஆனால், நமது புராண, இதிகாசங்கள் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் அக்காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டது.

ஏற்கெனவே பந்துலு - சிவாஜி கூட்டணியில் வெளிவந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் வெள்ளையத் தேவனாக ஜெமினி கணேசன் நடித்திருப்பார். இந்தப் படத்தில் ஜெமினி கணேசன் கிருஷ்ணர் வேடத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவரைவிட என்.டி. ராமராவ் பொருத்தமாக இருப்பார் என்று சிவாஜி பரிந்துரைக்க, கிருஷ்ணராக என்.டி. ராமராவ் நடித்தார். ராமர், கிருஷ்ணர் என்றாலே என்.டி. ராமராவ்தான் என்று சொல்லும்படி அவரது தோற்றம் தெய்வக் கதாபாத்திரங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

எஸ்.கோபால்
எஸ்.கோபால்

போாில் கர்ணன் வீழ்த்தப்பட்டு அம்புகள் துளைத்து உயிர் பிரியும் நேரம். விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையில் சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் இடம்பெற்ற மனதை உருக்கும் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்..’ பாடல் காட்சி படத்தின் ‘ஹைலைட்’களில் ஒன்று. ‘தாய்க்கு நீ மகனில்லை... தம்பிக்கு அண்ணனில்லை... ஊர்ப் பழி ஏற்றாயடா..’’ என்று கர்ணனை நோக்கி தானம் பெறக் கிருஷ்ணர் வரும்போது, அந்த மரண வேதனையிலும் தன் நிலையை நினைத்து சிவாஜி நடிப்பாக வெளிப்படுத்தும் விரக்தியான சிரிப்புக்கு வியந்துபோகாத ரசிகர்களே கிடையாது.

ஏவி.எம் ஒருமுறை கூறினார். ‘‘உலகிலேயே சிறந்த நடிகர் சிவாஜி என்பது எனது தாழ்மையான கருத்து. இதில் மாற்றுக் கருத்துக்களும் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை சிவாஜி தமிழ்நாட்டில் பிறந்தது நமது அதிர்ஷ்டம். வெளிநாட்டில் பிறக்காதது அவரது துரதிர்ஷ்டம்’’ என்றார்.

நடிகர் திலகம் என்கிற மகா கலைஞர், ‘கர்ணன்’ எப்படி வாழ்ந்திருப்பான் என் பதை நாம் கற்பனை செய்து கொள்ளத் தன் வற்றாத நடிப்பை வாரி வழங்கிய நடிப்பின் கர்ணனாக இப்படத்தில் விளங்கியது நம் அதிர்ஷ்டம்.

- எஸ்.கோபால்

படங்கள் உதவி: ஞானம்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in