

ஒரே இடத்தில் ஒரு முழு சினிமாவை யும் உருவாக்கும் முறைதான் ‘ஸ்டுடியோ சிஸ்டம்’. சுதந்திரத்துக்கு முன்பு வரை நடைமுறையில் இருந்த இம்முறையில் தமிழ்ப் படம் தயாரிக்க வேண்டும் என்றால் ஒன்று கொல்கத்தா வுக்குச் செல்ல வேண்டும். அதைவிட்டால் மகாராஷ்டிரத்தின் கோலாப்பூர்.
அன்றைய சென்னை மாகாணத்தின் தமிழ்க் கலைஞர்கள் இந்த இரு நகரங்களுக்கும் பயணித்து, பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்துகொண்டிருந்தார்கள். இதை மாற்றிக் காட்டினார் சேலம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த செல்வந்தரின் மகனான டி.ஆர்.சுந்தரம் என்கிற தமிழர். குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலாக இருந்தது ஜவுளித் தொழில்.
அதனால், லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஜவுளிப் பொறியியல் படித்து பட்டம் பெற்றவர், கிளாடிஸ் என்கிற பிரிட்டிஷ் பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டு நாடு திரும்பினார். இந்தத் தம்பதிக்குத் திரைப்படத் தயாரிப்பு மீது ஆர்வம் இருந்தது. அதனால், சேலம், ஏற்காடு அடிவாரத்தில் 10 ஏக்கர் பரப்பில் மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட் ஸ்டுடியோவை உருவாக்கினார்.
படப்பிடிப்புத் தளங்கள், பிலிம் லேபரெட்டரி, ரெக்கார்டிங் தியேட்டர், போஸ்ட் புரொடக்ஷன் என ஒரு திரைப்படம் திரையிடலுக்கு ஏற்ற படச் சுருளாக உருவாகும் வரையிலான அனைத்து வசதிகளும் கொண்டதாக மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை அமைத்தவர், தானே படங்களை, இயக்கித் தயாரிக்கவும் தொடங்கினார். சரியான திட்டமிடலோடு படப்பிடிப்பைத் தொடங்கி, சொன்ன நாளில் படத்தை ரிலீஸ் செய்து காட்டுவதில் வல்லவராக விளங்கினார்.
தொடக்க முயற்சிகளும் முத்திரைகளும்: மாடர்ன் தியேட்டர்ஸில் உருவான முதல் திரைப்படம் ‘சதி அகல்யா’ (1937). புராணக் கதையைக் கொண்ட இது முதல் வெற்றியாக அமைந்தது. 1938இல் வெளியான ‘மாயா மாயவன்’ தமிழின் முதல் முழு நீள சண்டைப் படம். 1940இல், பி.யு.சின்னப்பா நடிப்பில் வெளியான ‘உத்தம புத்திரன்’, தமிழின் முதல் இரட்டை வேட சினிமா. 1942இல் ஆண்டு வெளியான ‘மனோன்மணி’, பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயம் என்கிற கவிதை நாடகத்தைத் தழுவி, டி.ஆர்.சுந்தரத்தால் இயக்கப்பட்டது.
மலையாள மொழியில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமான ‘பாலன்’ (1938), மலையாளத்தின் முதல் வண்ணப்படமான ‘கந்தம் பேச கொட்டு’ ஆகியன மாடர்ன் தியேட்டர்ஸால் எடுக்கப் பட்டவை. கன்னட மொழிப் படங்களும் இங்கே தயாரிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் படமான ‘தி ஜங்கிள்’, மாடர்ன் தியேட்டர்ஸால் உருவாக்கப்பட்ட ஆங்கிலப் படம். இதில், ஹாலிவுட் நட்சத்திரங்களான ரோட் கேமரூன், சீஸர் ரொமாரியோ, எம்.என். நம்பியார் எனப் பலர் நடித்திருந்தனர். சிங்கள மொழியிலும் 7 படங்களைத் தயாரித்தார் டி.ஆர்.சுந்தரம்.
கருணாநிதி-எம்.ஜி.ஆர்.-வி.என்.ஜானகி: தமிழக அரசியலில் புகழ்பெற்று விளங்கிய கலைஞர் மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகிய இருவருமே மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்தவர்கள். இவர்கள் முதன் முதலில் இணைந்த ‘மந்திரி குமாரி’ படத்தை, எல்லிஸ் ஆர். டங்கனுடன் இணைந்து, டி.ஆர்.சுந்தரம் இயக்கித் தயாரித்தார். எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகியும் மாடர்ன் தியேட்டர்ஸில் உருவாக்கப்பட்ட ‘தேவகி’ படத்தில் நடித்தவர்.
மாடர்ன் தியேட்டர்ஸின் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த, தமிழின் முதல் வண்ணப்படமான (Gevacolor) ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’, ‘சர்வாதிகாரி’ ஆகிய இரண்டு படங்கள் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு திரையுலகில் வளர வித்திட்டன. தமிழகத்தின் 3 முதலமைச்சர்கள் பணியாற்றிய இடம் என்கிற பெருமை மாடர்ன் தியேட்டர்ஸுக்கு உண்டு.
எழுத்துலகப் பிரபலங்கள்: இவர்களைத் தவிர, பி.யு.சின்னப்பா, எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், கே.ஏ.தங்கவேலு, ஏ.கருணாநிதி ஆகியோர் மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த படங்களில் நடித்த முக்கிய நடிகர்கள்.
அதேபோல், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், புதுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி, கவிஞர் கண்ணதாசன், இயக்குநர் தர், கா.மு.ஷெஃரீப், முரசொலி மாறன், தஞ்சை ராமையா தாஸ், டி.கே.சுந்தர வாத்தியார், ஏ.கே.வேலன், ஏ.எல்.நாராயணன், சலகை கண்ணன் என எழுத்துலகப் பிரபலங்களும் மாடர்ன் தியேட்டர்ஸில் பணியாற்றியவர்கள்.
திரையுலகின் முதலாளி: மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம், ‘சண்ட மாருதம்’ என்கிற சினிமா பத்திரிகையை வெளியிட்டு, அதில் திரைப்படங்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்டு வந்தது. அதற்கு கவிஞர் கண்ணதாசன் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றிய பெருமை உண்டு.
டி.ஆர்.சுந்தரம் 55 படங்களை இயக்கியதுடன், 98 திரைப்படங்களைத் தயாரிக்கவும் செய்தார். தமிழில் 52, மலையாளத்தில் 8, சிங்களத்தில் 7 என மாடர்ன் தியேட்டர்ஸில் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. நடிகர்கள், ஊழியர்களால் முதலாளி என அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் டி.ஆர்.சுந்தரம். தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் டி.ஆர்.சுந்தரம் இருந்தார்.
தமிழ் சினிமா உலகில் முடி சூடா மன்னராக வலம் வந்த டி.ஆர்.சுந்தரம், தனது 56ஆவது வயதில், 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29இல் திடீரென காலமானார். அவரைத் தொடர்ந்து, மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை ஏற்று நடத்திய அவரது மகன் டி.ராம சுந்தரம், நடிகர் ஜெய்சங்கரை கதாநாயகனாகக் கொண்டு, ஜேம்ஸ்பாண்ட் பாணித் திரைப்படங்களைத் தயாரித்து வெற்றி பெற்றார். அதனால், தமிழகத்தின் ஹாலிவுட் எனப் பெயர் பெற்றது மாடர்ன் தியேட்டர்ஸ்.
அருங்காட்சியகம்: இவ்வளவு பெருமைக்குரிய வரலாற்றுச் சுவடுகளைக் கொண்ட மாடர்ன் தியேட்டர்ஸை இக்கால மனிதர்களுக்கு நினைவூட்ட அதன் அலங்கார நுழைவு வாயில் மட்டுமே இன்னமும் எஞ்சியிருக்கிறது. டி.ஆர்.சுந்தரத்தின் குடும்பம், அவரது நண்பர்களின் குடும்பம், மாடர்ன் தியேட்டரில் பணிபுரிந்தவர்களின் குடும்பம் ஆகியோரிடம் அரிய புகைப்படங்கள், சினிமா தயாரிப்புக்குப் பயன்படுத்திய கருவிகள் உள்ளிட்டவை இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மாடர்ன் தியேட்டரின் நடிப்பு ஒத்திகை அரங்கமாக இருந்த பழமையான கட்டிடத்தில் டி.ஆர்.சுந்தரத்தின் முழு உருவச் சிலை உள்ளது. சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவாக, ஓர் அருங்காட்சியகம் அமைத்தால், தமிழ் திரையுலக வளர்ச்சிக்கு டி.ஆர்.சுந்தரம் ஆற்றிய பணிகளுக்கு அது பெருமை சேர்க்கும். வருங்காலத் தலைமுறையினருக்கும் மாடர்ன் தியேட்டர்ஸை அறிந்துகொள்ள வழிவகையாக அமையும்.