

நே
ற்றைய நிகழ்வுகள் இன்றைய செய்தி. இன்றைய செய்தி, நாளைய வரலாறு. அதனால்தான், அமெரிக்காவில் பிரபலமான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழின் வெளியீட்டாளர், மறைந்த பிலிப் கிரஹாம் இப்படிச் சொன்னார்: ‘இதழியல் என்பது, வரலாற்றின் முதல் வரைவு!’ (Journalism is the first rough draft of history). ஆனால், அந்த நாளிதழே பின்னாளில் ஒரு வரலாறாக உருவெடுக்கும் என்று அவரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அந்த வரலாற்றை ஒன்றேகால் மணி நேரத்தில்
‘தி போஸ்ட்’ படத்தின் மூலமாக, உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.
அமெரிக்காவின் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு விதை போட்ட நிறுவனங்களில் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. 1877-ல், அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டன் நகரத்தில் ஸ்டில்சன் ஹட்சின்ஸ் என்பவரால் தொடங்கப்பட்டது அந்தப் பத்திரிகை. பிறகு, 1889 முதல் 1933 வரை, அந்தப் பத்திரிகை பல கைகளுக்கு மாறி, இறுதியாக யூஜீன் மேயர் என்பவரிடம் வந்து சேர்ந்தது. 1946-ல், அந்தப் பத்திரிகையைத் தன் மருமகன் பிலிப் கிரஹாமிடம் ஒப்படைத்தார் யூஜீன் மேயர்.
பிலிப் கிரஹாம் தலைமையில் அந்தப் பத்திரிகை சிறப்பாக வெளிவந்து கொண்டிருந்தது. சிறிது காலத்துக்குப் பிறகு, கிரஹாமுக்கு மன அழுத்த நோய் ஏற்பட்டது. அதனால், அவரால் பத்திரிகையின் மீது தனது கவனத்தைச் செலுத்த முடியவில்லை. எனவே, பத்திரிகை தள்ளாடியது. 1963-ல் கிரஹாம் தற்கொலை செய்துகொள்ள, அந்தப் பத்திரிகை அவருடைய மனைவி கேத்தரின் கிரஹாமின் கைக்கு மாறியது.
ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, அவ்வளவு பெரிய பத்திரிகையைத் தலைமையேற்று நடத்த முடியுமா என்ற சந்தேகம், கேத்தரின் கிரஹாமுக்கு ஆரம்ப காலத்தில் இருந்தது. நேரம், பத்திரிகையைப் பலப்படுத்த, தனது நிறுவனத்தின் பங்குகளைப் பங்குச் சந்தையில் விற்க முற்படுகிறார் கேத்தரின்.
அதே நேரத்தில்தான், வியட்நாம் மீதான அமெரிக்கப் போர் தொடர்பாக, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் ஒரு ‘ஸ்கூப்’ வெளியாகிறது. அதனால் அமெரிக்காவே பரபரப்பாகிறது. எனினும், அந்தச் செய்தி வெளியான சில நாட்களில் அமெரிக்க அரசு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, வியட்நாம் தொடர்பான செய்திகளை அந்தப் பத்திரிகை வெளியிடக் கூடாது என்று தடை வாங்குகிறது.
‘இப்படி ஒரு பெரிய நியூஸை மிஸ் பண்ணிட்டோமே’ என்று பதறிய ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ ஆசிரியர் குழு, அமெரிக்கா – வியட்நாம் நாடுகளின் உறவு தொடர்பான சில ரகசிய ஆவணங்களைக் கைப்பற்றி, ‘பெண்டகன் பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் அடுத்தடுத்து செய்திகளை வெளியிடுகிறது. இதனால், இந்தப் பத்திரிகையும் நீதிமன்ற வழக்கைச் சந்திக்கிறது. ஆனால், அடுத்தடுத்த சில தினங்களில் அமெரிக்காவில் உள்ள அனைத்துப் பத்திரிகைகளும், ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் அடியொற்றி, வியட்நாம் தொடர்பான செய்திகளை வெளியிட, அமெரிக்க அரசுக்கு நெருக்குதல் ஏற்படுகிறது. இறுதியில், ‘ஜனநாயகம் காக்கப்பட, பத்திரிகைச் சுதந்திரம் காக்கப்பட வேண்டும்’ என்று கூறி, உச்ச நீதிமன்றம் மேற்கண்ட பத்திரிகைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குகிறது.
இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டே ‘தி போஸ்ட்’ படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் ராணுவ ஆய்வாளர் டேனியல் எல்ஸ்பெர்க், வியட்நாம் போர் தொடர்பான ரகசிய ஆவணங்களை ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு வழங்குவதிலிருந்து தொடங்குகிறது படம். அங்கு ஆரம்பமாகும் கதை, அந்த ரகசிய ஆவணங்களை ‘தி போஸ்ட்’ பத்திரிகையாளர் கைப்பற்றுவது, பிறகு அவற்றை ஆராய்வது, இறுதியில், அந்தச் செய்திகளை வெளியிடலாமா வேண்டாமா என்று கேத்தரின் கிரஹாமுக்கும் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் பென் பிராட்லீக்கும் வாக்குவாதம் நடப்பது என வேகமெடுக்கிறது.
பத்திரிகையை லாபகரமாக நடத்த வேண்டும். அதே நேரம், தரமாகவும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில், அரசையும் கோபித்துக்கொள்ளாமல், ஆனால் பத்திரிகையின் வாசகர்களையும் இழந்துவிடக் கூடாது என்று இரண்டு நிலைகளில் தவிக்கும் கேத்தரின் கிரஹாமாக, மெரில் ஸ்ட்ரீப் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
ரகசிய ஆவணங்கள் தொடர்பான செய்தியுடன் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ வெளியான அதே நாளில், ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ இதழில், அமெரிக்க அதிபர் நிக்ஸனின், முதல் மகள் ட்ரிஸியா நிக்ஸனின் திருமணச் செய்தி வெளியாகிறது. வியட்நாம் போர் தொடர்பான மிகப் பெரிய செய்தியை விட்டுவிட்டு, அதிபர் மகளின் திருமணம் என்ற சாதாரணச் செய்தியை வெளியிட்டதால், அந்த பேப்பரைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, தனது ஆசிரியர் குழுவினருடன் ‘நாம என்ன கிழிக்கிறோம்?’ என்னும் ரீதியில் ஆலோசனை நடத்தும் பென் பிராட்லீயாக, யதார்த்தமான நடிப்பில் டாம் ஹாங்க்ஸ் நம்மைக் கவர்கிறார்.
‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு ரகசிய ஆவணங்களை வழங்கிய அதே நபரிடமிருந்து ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையும் ஆவணங்களை வாங்குவது, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ‘வெள்ளை மாளிகைக்குள் ‘தி போஸ்ட்’ பத்திரிகையின் நிருபர்கள் யாரும் வரக் கூடாது’ என்று அதிபர் நிக்ஸன் உத்தரவிடுவது என நிஜத்தில் நடந்த சம்பவங்களையும் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார் இயக்குநர்.
நிக்ஸன் அவ்வாறு உத்தரவிடும் அதே நேரம், அரசு அலுவலகங்கள் உள்ள ‘வாட்டர்கேட்’ எனும் கட்டிடத்தில், கதவு ஒன்று உடைக்கப்பட்டிருப்பதைக் காட்டுவதோடு படம் முடிகிறது. அந்தக் கதவுடைப்புக் கொள்ளைச் சம்பவம்தான் பின்னாளில் ‘வாட்டர்கேட் ஊழல்’ என்று பெயர் பெற்று, நிக்ஸனின் ராஜினாமாவுக்குக் காரணமாக அமைந்தது. அந்த ஊழலை வெளிக்கொண்டு வந்ததும் ‘தி போஸ்ட்’ தான்!
அரசுகளால் பத்திரிகைகள் பல சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இன்றைய காலத்துக்கு மிகத் தேவையான படைப்பு இது.