சூனா பானா 25! - நிறைக்க முடியாத அரியணை!

சூனா பானா 25! - நிறைக்க முடியாத அரியணை!
Updated on
2 min read

நாம் செய்யத் தயங்கும் குறும்பு, ஏளனம், எள்ளல், பிறர் மனம் புண்படாதபடி இகழ்வது உள்ளிட்ட குண மாதிரிகளைக் கொண்டிருக்கும் சாமானியன் ஒருவனின் பிரதி பிம்பம் என்றால் வைகைப் புயல் வடிவேலு நம் நினைவுக்கு வந்துவிடுவார். தமிழ் சினிமாவில் என்ன செய்தாலும் ரசிக்கும்படியாக செய்வதில் இப்போது வரை முன்னோடியாகத் திகழ்கிறார். செய்யும் சேட்டை எதுவாயினும் அதை, அருவெறுப்பில்லாமல் செய்து சிரிக்க வைத்து விடுவார். ஆசான்களைப் போல் நாடகங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றுடன் வறுமையும் வடிவேலுவுக்குக் கற்றுத் தந்தது. எவ்வித அலங்காரப் பூச்சும் இல்லாமல், நகைச்சுவை உணர்வை அவர் நமக்குக் கடத்தும் விதம், ஓர் இசையமைப்பாளர் செய்யும் ஜாலத்தைப் போன்றது.

அவர் செய்து வந்துள்ள வேடங்களில், பொத்தாம் பொதுவான பயந்த சுபாவமுள்ள ரவுடிக் கதாபாத்திரங்களின் மாதிரிகள் அமரத்துவம் மிக்கவையாகத் தொடர்கின்றன. கைப்புள்ள (வின்னர்), மொக்கைச் சாமி (மாயி), படித்துறை பாண்டி (கருப்பசாமி குத்தகைதாரர்), தீப்பொறி திருமுகம் (இங்கிலீஷ்காரன்), ஸ்நேக் பாபு (ஆர்யா), பாடி சோடா (போக்கிரி), வீரபாகு (கிரி), கீரிப்புள்ள (தவம்), அலர்ட் ஆறுமுகம் (வெடிகுண்டு முருகேசன்), நாய் சேகர் (தலைநகரம்), ஸ்டைல் பாண்டி (நகரம்) என நூறு மாறுபாடுகள் காட்டியிருக்கிறார். அவற்றுக்கெல்லாம் முன்னோடியாக ஒரு கதாபாத்திரத்தை அவர் ‘கண்ணாத்தாள்’ படத்தில் செய்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பாரதி கண்ணன் இயக்கி, 1998, டிசம்பரில் வெளியான இப்படத்தில், அவர் அதகளப்படுத்திய ஒரு முன்னோடி மறக்க முடியாத கிராமிய ரவுடிக் கதாபாத்திரம் தான் ‘சூனா பானா’ என்கிற சுப்பையா பாண்டியன்.

எல்லா பெரிய நடிகர்களையும் போலவே தாம் ஏற்கும் கதாபாத்திரத்தின் புறத்தோற்றத்தைப் பெரும்பாலும் வடிவேலுவே கட்டமைத்துக் கொள்கிறார். ‘ஒரிஜினல் பிரண்ட்ஸ்’ மலையாளப் படத்தில் கான்ட்ராக்டர் ஜெகதீ கதாபாத்திரத்தை, தமிழில் வடிவேலு தனக்கேற்றவாறு மாற்றி இருப்பார். ஆங்கில ‘ஃப்ளாட் கேப்’ வகைத் தொப்பி, ‘கேஷ் பேக்’ ஆகியன கொண்டு காண்ட்ராக்டர் நேசமணியை தன் பாணியில் உயிர்ப்பித்திருந்தார். அப்படித்தான் கோடு போட்ட பனியன், அதற்கு மேல் கட்டிய லுங்கி, பச்சை பெல்ட், தோளில் ஒரு துண்டு ,கையில் பீடி என சூனா பானாவுக்கும் அவர் உயிர் கொடுத்திருந்தார். சூனா பானா தன் சேட்டையை, முருகருக்கு உண்டான வேண்டுதலை அம்மனிடம் மாற்றிச் சொல்லித் திட்டு வாங்குவதில்

தொடங்கி விடுகிறார். தொடர்ந்து, சைக்கிளில் கீழே விழுவது, சொல் பேச்சுக் கேளாமல், பாறைக்கு வைக்கும் வெடிகுண்டில் சிக்கிக் கொள்வது, ஆடு திருடி, எப்படியோ சமாளித்து பஞ்சாயத்தில் தப்பிவிடுவது எனப் பிரமாதப்படுத்தியிருப்பார். இப்படம் வெளிவந்த 25 ஆண்டுகளில், அதன் 7 பாடல்களும் மையக் கதை, அதற்கான காட்சிகள், கதாபாத்திரங்கள், வசனங்கள் ஆகியன பார்வையாளன் மனதிலிருந்து மறந்து போயின. ஆனால் படத்தில் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே வந்த சூனா பானா, தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களில் மீம்களிலும் இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்கிறார். அதற்குக் காரணம், வடிவேலு என்கிற மகா கலைஞனின் அசாதாரணமான உடல் மொழி, ,வசன உச்சரிப்பு உள்ளிட்ட அவரது நடிப்பு முறை ஏற்படுத்தி வந்திருக்கும் ஈர்ப்பே காரணம்.

வீராவேசமாகப் பேசிவிட்டுப் பின் திட்டு வாங்குவது, அடி வாங்குவது சூனா பானாவின் வழக்கம். ஆனாலும் எல்லாவற்றிலும் இருந்து மீண்டுவிடும் தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டவர் சூனா பானா. அவர் தன்னைத்தானே தேற்றிக்கொள்ளச் சொல்லும் வசனம் “விட்றா விட்றா வெந்நீ வச்சு குளிச்சா எல்லாம் சரியாப் போயிரும்டா”. அவர் இப்படித்தான் எல்லா வீழ்ச்சிகளையும் சட்டையில் ஒட்டிய மண்ணைத் தட்டிவிடுவதுபோல் தட்டிவிட்டபடி அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்து விடுகிறார். ஆடு திருட்டு பஞ்சாயத்து காட்சியை அவர் ஒற்றை ஆளாகக் கையாண்ட விதத்தைச் சூனா பானா வேடத்தின் உச்சக்கட்டமாகக் கொள்ளலாம். பாபு வைத்திருக்கும் விஷம் கலந்த மதுவைக் குடித்துவிட்டு அவர் செய்யும் அலப்பறை வேறு ரகம்.

பிற்காலத்தில் அவர் செய்த ரவுடிக் கதாபாத்திரங்கள் எதிலும் வடிவேலு சூனா பானாவின் சாயலைத் திரும்பக் கொண்டு வரவில்லை. “நானும் அண்ணன் இளையராஜாவும் தொடக்கத்திலிருந்தே வடிவேலுவின் ரசிகர்களாக இருந்திருக்கிறோம்!” என்று கமல்ஹாசன் ‘மாமன்னன்’ பட நிகழ்ச்சியில் சொன்னது ஒரு முக்கியமான பாராட்டுப் பத்திரம். வாழ்க்கையில் எல்லாச் சூழல்களுக்கும் திருக்குறள் உண்டு. அதைப் போலவே நம் அன்றாட வாழ்வில் எல்லா சூழல்களுக்கும் நகைச்சுவைப் புயல் வடிவேலுவின் ஓர் உடல்மொழியோ, வசனமோ, பார்வையோ, மீம் காட்சித்துண்டோ இல்லாமல் ஒரு நாளை நம்மால் கடக்க முடிவதில்லை. இதில் வயது வித்தியாசமா, பாலினப் பேதமோ இல்லை. எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் வடிவேலுக்கு முன்னாலும் பின்னாலும் வந்தாலும், இருந்தாலும் சூனா பானாவின் அரியணைக்கு அருகில் கூட நெருங்கிடக்கூட முடியவில்லை. ‘கண்ணாத்தாள்’ படத்தின் ஒரு வசனத்தில் வடிவேலு சொல்லியிருப்பார். “ஏன்டா.. எல்லாருமே சூனா பானா ஆகிற முடியுமா?” அது அவருக்கு மட்டுமே மிகவும் பொருத்தமான தேவ வசனம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in