Last Updated : 15 Dec, 2023 11:52 AM

 

Published : 15 Dec 2023 11:52 AM
Last Updated : 15 Dec 2023 11:52 AM

7 நாள்கள்... 7 படங்கள்... - சென்னை சர்வதேச பட விழா 2023

டிசம்பர் 14-ஆம் தேதியான நேற்று தொடங்கியது சென்னை சர்வதேசப் பட விழா. இன்று முதல் 21ஆம் தேதி வரை ஏழு நாள்களுக்கும் தினசரி ஒரு சிறந்த படத்தையாவது பார்த்துவிடுவது என்கிற திட்டத்துடன் இருப்பவர்களுக்காக ஏழு படங்களின் சுருக்கமான அறிமுகத்தைப் பார்க்கலாம்.

‘ஃபர்பெக்ட் டேய்ஸ்’ (Perfect Days) - ஜப்பான் - ஜெர்மனி கூட்டுத் தயாரிப்பில் 2023இல் உருவாகியுள்ள படம். ஹிராயமா என்கிற நடுத்தர வயது மனிதர் டோக்கியோவில் ஒரு துப்புரவுத் தொழிலாளியாகப் பணிபுரிகிறார். தன்னுடைய வேலையிலோ இப்போதுள்ள தனது வாழ்க்கை நிலையிலோ எந்தப் புகாரும் அவருக்கு இல்லை. ஓய்வு நேரத்தில் புத்தகம், இசை, ஒளிப்படம் எடுப்பது என நகரும் அவரது வாழ்க்கையில் பல எதிர்பாராத சந்திப்புகள். அவற்றின் மூலம் அவரது கடந்த காலத்தின் பல பகுதிகள் படிப்படியாக வெளிப்படுகின்றன. நான்கு சிறு கதைகளை ஒருங்கிணைத்து உருவாக்கியுள்ள இப்படம் இன்றைய டோக்கியோ மாநகரின் அழகினைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இயக்கம் விம் வெண்டெர்ஸ்.

‘லுபோ’ (Lubo) - சுவிஸ்சர்லாந்து ஓர் அற்புதமான, இயற்கை அன்னையின் மடியில் தலை சாய்த்திருக்கிறதோ என எண்ணத் தூண்டும் நாடு. ஆனால், அந்த நாட்டையும் ஓர் அடக்கு முறை அரசாங்கம் ஆட்சி செய்திருக்கிறது என்பது கசப்பான ஓர் உண்மை. 2023இல் தயாராகியுள்ள ‘லுபோ’ திரைப்படத்தின் கதைக்களன் 1939. ஒரு தெருக்கலைஞன்தான் லுபோ மோசர். கட்டாய ராணுவச் சேவைக்கு அவன் அழைக்கப்படுகிறான். உண்மையில் ஒரு தொல்குடி வம்சாவளியை அரசின் பழிவாங்கும் செயலாகவே இது அமைகிறது.

அரசாங்க கல்விக் கொள்கைகளினால் அவனது குழந்தைகளை போலீஸ் காவலில் எடுத்ததாகவும் அவர்களைத் தடுக்க முயன்ற அவர் மனைவி கொல்லப்பட்டதாகவும் செய்தி கிடைக்கத் துடித்துப்போகிறான். அவன் வாழ்க்கையில் திடீரென வீசும் அரசியல் சூறாவளியால் அவன் குடும்பம் நிலைகுலைகிறது. லுபோ வாழ்க்கையில் வீசும் சூறாவளியை அவன் அறச்சீற்றத்தோடு எவ்வாறு எதிர்கொண்டான் என்பது படம். இப்படத்தின் இயக்குநர் ஜியோர்ஜியோ டிரிட்டி. தனது சிறந்த படங்களுக்காக உலகம் உற்றுநோக்கும் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் 40 விருதுகளைப் பெற்றுள்ளவர்.

‘லாஸ்ட் இன் த நைட்’ (Lost in the Night) - இருபது வயது இளைஞன் எமிலியானோவின் தாய் ஒரு பேராசிரியர், ஒரு சமூக செயல்பாட்டாளர். அவர் திடீரெனக் காணாமல் போகிறார். காவல்நிலையத்துக்குச் சென்று எமிலியானோ புகாரளித்து தன் தாயைக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்கிறான். அவர்களோ அவனை மிகவும் அலட்சியமாக நடத்துகிறார்கள். நீதி அமைப்புகள் திறமையற்று இருப்பதையும் அதற்குப் பின்னுள்ள சதிகளையும் உணர்கிறான்.

சர்வதேசச் சுரங்க நிறுவனத்துக்கு எதிராக, உள்ளூர் மக்களின் வேலைகளுக்காக, நியாயம் கேட்டுப் போராடியவர் அவன் தாய். தன் தாயின் இறுதிப்பயணத் திசையின் தடங்களைச் சில தடயங்கள் அவனுக்குத் தருகின்றன. அதை நோக்கிய அவனது பயணம் எதை நோக்கிச் செல்கிறது என்பதே படம். இப்படமும் 2023இல் உருவானதே. உண்மையை ஒரு பின்னலின் சிடுக்குகளைப் போல் பிரித்தெடுக்கிறார் இயக்குநர் அமத் எஸ்காலெனெட். ஏற்கெனவே 2013இல் கான் திரைப்படவிழாவில் சிறந்த இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

‘இன்சைட் தி எல்லோ குக்கூன் ஷெல்’ (Inside the Yellow Cocoon Shell) - ‘‘புகழை அல்லது அதிர்ஷ்டத்தைத் தேடிச்சென்று சிலந்தி வலைப் பின்னலான பட்டுப்போன்ற உறைகளில் சிக்கிக்கொள்ளும் லார்வாக்கள்தாம் நாம் என்பதை இப்படத்தில் குறியீடாகச் சொல்லியுள்ளேன்'' என்கிறார் இயக்குநர் பாம் தியென் ஆன். ஓர் எளிய கதையை எடுத்துக்கொண்டு, நாம் இதுவரை பார்த்திராத அழகிய உலகைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். கார் விபத்தொன்று ஒரு சிறுவனை நிராதரவாக ஆக்கிவிடுகிறது. தியென் என்கிற அந்தச் சிறுவன் துவண்டுவிடாமல் தனது வாழ்வின் கிளைகளைப் பற்றிக்கொள்கிறான்.

முப்பது வயதில் தன்னை வளர்த்த நகரமான சைகோனை விட்டு வெளியேறுகிறான். தனது சொந்த ஊரின் அடையாளங்களைத் தேடி ஒரு புதிய பயணத்தை மேற்கொள்கிறான். அதில் அவன் கண்டதும் உணர்ந்த தும் என்ன என்பதுதான் படம். வியட்நாம், சிங்கப்பூர், பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் 2023இல் உரு வான இத்திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவுக்காக இந்த ஆண்டு கான் படவிழாவில் விருது வென்றது.

‘லாஸ்ட் கண்ட்ரி’ (Lost Country) - 1996களில் நிகழ்ந்த ஒரு வரலாற்று நிகழ்வை இப்படம் அதன் தீவிரத்தோடு பதிவு செய்துள்ளது. செர்பியா நாட்டின் பெல்கிரேட் நகரம்தான் கதைக்களம். அரசியல் படுகொலைகள், பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்குதல், காவல்துறையின் மிருகத்தனம் ஆகிய பல குற்றச்சாட்டுகளுடன் அதிபர் மிலோசெவிக் ஆட்சியின் அலங்கோலத்தை எதிர்த்து இயங்கும் மாணவர் அணியில் 14 வயது சிறுவன் ஸ்டீபனின் பார்வையிலிருந்து மொத்தப் படமும் விரிகிறது. அவனுடைய தாய் அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பதோடு கொள்கை முடிவுகளிலும் சம்பந்தப்பட்டிருக்கிறார்.

அதை அறிந்து ஸ்டீபன் அதிர்ச்சியடைகிறான். அதன்பின் அவனது போராட்ட நிலைப்பாடு என்னவானது என்பதுதான் படம். இயக்குநர் விளாடிமிர் பெரிசிக் அன்றைய யுகோஸ்லோவியாவில் நேரில் கண்ட அனுபவத்தை 2023இல் படமாக்கியுள்ளார். இந்த ஆண்டு அக்டோபரில் பிரான்ஸ் நாட்டின் திரையரங்குகளில் ‘லாஸ்ட் கன்ட்ரி’ வெளியாகியுள்ளது. ஒரு நாட்டின் அரசியலைத் துணிவுடன் பேசியுள்ளதால் இதுபோன்ற படங்களை வெளியிட பிரான்ஸ் மட்டுமாவது இடமளிக்கிறது என்பது ஆறுதலானது.

‘தி பேலஸ்’ (The Palace) - 2023இல் வெளியாகியிருக்கும் இதுவும் புதிய படமே. இரண்டாம் உலகப்போரின் உக்கிரத்தை, அதன் இடிபாடுகளை ‘பியானிஸ்ட்’ திரைப்படம் மூலம் நம் கண் கொண்டுவந்தவர் ரோமன் போலன்ஸ்கி. 1933இல் பிறந்த ரோமன் போலன்ஸ்கி தனது 89 வயதில் ‘தி பேலஸ்’ என்கிற ஓர் எள்ளல் நகைச்சுவைப் படத்தை அளித்துள்ளார். 1962 முதல் இப்போது வரை அவர் எடுத்தது மொத்தமே 23 படங்கள்தாம். ஆனால், அவர் ஒவ்வொரு முறையும் தனது திரைச் சித்திரத்தை உலக சினிமா வரலாற்றின் ஏடுகளில் மைல்கல் முத்திரைபோல் பதித்துவிடுவார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் வலிமிகுந்த சில சர்ச்சைகள், சறுக்கல்கள், நாடு கடந்த வாழ்க்கை என அலைபாய்ந்தவர். இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் எனப் பன்முக ஆளுமை. இவர் பெறாத விருதுகள் இல்லை. ‘தி பேலஸ்’ படத்தில் புத்தாண்டு இரவை எதிர்கொள்ளும் ஓர் ஆடம்பரமான சுவிஸ் ஹோட்டலில் செல்வந்தர்களின் கொண்டாட்டத்துக்குப் பின்னுள்ள உழைப்பின் ஆதாரமாகத் திகழும் ஹோட்டல் தொழிலாளர்களின் வாழ்க்கையை அழுத்தமாகப் பேசியுள்ளார் என்பதுதான் இப்படத்தின் சிறப்பு.

‘20,000 ஸ்பீசீஸ் ஆஃப் பீஸ்’ (20000 Spieces of Bees) - 73ஆவது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் கோல்டன் பியர் போட்டிப் பிரிவுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படம். ஆனால், இப்படத்தில் லூசியா என்கிற முதன்மைக் கதாபாத்திரத்தை ஏற்றிருந்த ஒன்பது வயது சோபியா ஓட்டேரோ சிறந்த முன்னணி நடிப்பிற்காக வெள்ளிக் கரடியை வென்றார். தனது முதல் படத்திலேயே துணிச்சலாக ஒரு சிறு பெண்ணின் வாயிலாக மூன்றாம் பாலினத்தவரின் வலிகளை யாவரும் ஏற்றுக்கொள்ளும்விதமாகப் படைத்துள்ளார் ஸ்பானியப் பெண் இயக்குநரான எஸ்டிபாலிஸ் உர்ரெசோலா சோடாகுரென்.

மூன்றாம் பாலினமும் சமூகத்தின் இன்னோர் அங்கம்தான். தேனீக்களில் நம் கண்ணுக்குப் புலப்படாத இருபதாயிரம் இனம் இருப்பதைப் போல், மனிதப் பிறப்பிலும் நாம் அரவணைத்துச் செல்லவேண்டிய இனங்கள் பல உண்டு என்பதைப் புதிய கோணத்தில் எடுத்துக்காட்டுகிறது படம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x