சினிமா ரசனை 2.0 - 22: அறிவியல் புனைவின் உச்சம்!

சினிமா ரசனை 2.0 - 22: அறிவியல் புனைவின் உச்சம்!
Updated on
2 min read

உலகில் இதுவரை விவாதிக்கப் பட்டுள்ள மொத்த ‘சைன்ஸ் ஃபிக்‌ஷன்’ கருத்துகளையும் ஒரே சீரீஸுக்குள் வைத்தால் எப்படி இருக்கும்? அப்படி வைக்கும்போது எல்லா எபிசோடுகளும் பரபரவென்று வேகமாகச் சென்றால்? தவிர, உலகின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவர் தனது மேற்பார்வையில் அதை உருவாக்கியிருந்தால்? அதில் உலகின் மிகச்சிறந்த தியேட்டர் நடிகர்களில் ஒருவர் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தால்? இத்தனை சிறப்பு அம்சங்களுக்கும் தகுதி வாய்ந்த ஒரே சீரீஸ்தான் ‘ஃப்ரிஞ்ச்’ (Fringe). 2008 முதல் 2013 வரை ஐந்து சீசன்களாக வெளியான சீரீஸ். உலகெங்கும் பாராட்டப்பெற்றதும்கூட.

இதன்பின்னர் பல வருடங்கள் கழித்து வெளியான ‘டார்க்’ (Dark) என்கிற சீரீஸில் ‘ஃப்ரிஞ்’சின் சில முக்கியமான கதைக் கருக்களை அப்படியே வைத்திருப்பார்கள் என்பதிலிருந்தே அதன் சிறப்பைப் புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக ‘டார்க்’கில் வரும் சிறுவன் காணாமல் போவது, அவன் மாறுபட்ட ‘டைமென்ஷ’னில் வளர்வது, ஒரே நேரத்தில் இரண்டு அண்டவெளிகள் (Universes), அவற்றில் ஒரே மாதிரியான சாயல்கொண்ட கதாபாத்திரங்கள், அவர்களுக்குள் சின்னச் சின்ன மாற்றங்கள், இங்கேயிருந்து அங்கே போனால் என்ன பிரச்சினை வரும், ஒரு ‘போர்ட்ட’லில் இங்கிருந்து அங்கே போவது, இரண்டு ‘யூனிவர்ஸ்’களிலும் சுற்றும் ஆசாமிகள், ஒரு சம்பவத்தை மாற்றினால் அது காலத்தை எப்படிப் பாதிக்கும் எனப் பெரும்பாலான காட்சிகள் உட்பட அப்படியே ‘ஃப்ரிஞ்’சில் ஏற்கெனவே வந்துவிட்டவை ‘டார்க்’கில் எடுத்தாளப்பட்டன. ஆனால், மேலே நான் சொன்னவையெல்லாம் ‘ஃப்ரிஞ்ச்’ சீரீஸில் பின்னால் வரும் சில விஷயங்கள். அவ்வளவே. இவற்றோடு சீரீஸின் தொடக்கத்திலிருந்து ஏராளமான அறிவியல் புனைவுக் கருத்துகள் ‘ஃப்ரிஞ்ச்’ சீரீஸில் உண்டு.

யார் இந்த ஜே.ஜே. ஆப்ராம்ஸ்? - சரி, ‘ஃப்ரிஞ்’சை உருவாக்கிய உலகப் புகழ்பெற்ற அந்த இயக்குநர் யார்? அவர்தான் ஜே.ஜே. ஆப்ராம்ஸ் (JJ Abrams). புகழ்பெற்ற ‘ஆமாகெடன்’ (Armageddon) ஹாலிவுட் படத்துக்குத் திரைக்கதை எழுதியவர். அதன்பின் ‘மிஷன் இம்பாசிபிள்’ மூன்றாம் பாகத்தை எழுதி, இயக்கியவர். இவரது குறிப்பிடத்தகுந்த படமாக 2009இல் வெளியான ‘ஸ்டார் ட்ரெக்’ இருந்தது. ‘ஸ்டார் ட்ரெக்’ என்பது பல வருடங்களுக்கு முன்பே டிவியில் தொடராகவும் பல பாகங்கள் கொண்ட திரைப்பட வரிசையாகவும் வெளிவந்துவிட்ட ஒரு கதை. நமது ‘மகாபாரதம்’ போல் விரிவானது. அதைக் கையிலெடுத்து அட்டகாசமாக ஒரு ‘ரீபூட்’ (Reboot - மறுபடியும் ஒரு கதையை முதலிலிருந்து தொடங்குவது) கொடுத்தார் ஜே.ஜே. ஆப்ராம்ஸ்.

இதன்பின் மேலும் இரண்டு ‘ஸ்டார் ட்ரெக்’ படங்கள் எடுத்துவிட்டு தடாலென்று ‘ஸ்டார் வார்ஸ்’ பக்கம் தாவினார் (ஸ்டார் வார்ஸ், ஸ்டார் ட்ரெக் போன்ற ஒரு மிகப்பெரிய அறிவியல் புனைவுக் காவியம் என்பது திரை ரசிகர்களுக்குத் தெரியும்). அதேபோல் ‘ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்’ (Rise of Skywalker) படத்தையும் அவர்தான் எடுத்தார். இவை தவிர, தொலைக்காட்சியில் சில புகழ்பெற்ற சீரீஸ்களுக்கு எபிசோடுகளை எழுதியும் இயக்கியும் இருக்கிறார். அப்படி அவர் உருவாக்கியதுதான் ‘ஃப்ரிஞ்ச்’.

‘ஃப்ரிஞ்ச்’ என்றால் என்ன? - பொதுவாக விஞ்ஞானத்தில் ‘ஃப்ரிஞ்ச்’ என்றால் இதுவரை நிரூபிக்கப்படாத கூறுகள் என்று பொருள். காலப் பயணம் இதன்கீழ்தான் விவாதிக்கப்படுகிறது. ஒரு ‘போர்ட்டல்’ வழியாக ‘வார்ம்ஹோல்’ என்பதினுள் புகுந்து இன்னொரு பக்கம் வெளியேறுவதும் ‘ஃப்ரிஞ்ச்’ விஞ்ஞானமே. இப்படிப்பட்ட வித்தியாசமான விஞ்ஞானம் அடங்கிய வழக்குகளைத் துப்பறிய ஒரு அமைப்பு உருவாக்கப்படுகிறது. அதற்குக் காரணம், முதல் எபிசோடில் ஒரு விமானம் தரையிறங்குகையில், அதில் இருக்கும் அத்தனை பேரும் பிணமாக இருப்பதே. இது ஏன் என்று துப்பறியத் தொடங்கும் பிலிப் ப்ராயில்ஸ் என்பவர், சிறுகச் சிறுக ஓர் அணியை உருவாக்குகிறார்.

அதில் ஒலிவியா டன்ஹாம் என்கிற எஃப்.பி.ஐ ஏஜண்ட் முக்கிய அங்கம் வகிக்கிறார். பீட்டர் பிஷப் என்கிற நபரை அந்த அணிக்கு அழைத்து வருகிறாள் ஒலிவியா. காரணம் பீட்டரின் மூலமாக அவனுடைய தந்தை வால்டர் பிஷப்பிடம் பேசமுடியும். வால்டர் பிஷப் என்பவர் ஒரு பைத்தியக்கார விஞ்ஞானியாக இருந்தவர். இன்னும் நிரூபிக்கப்படாத அறிவியல் கருதுகோள்களின் மீது வெறித்தனமாக ஆராய்ச்சி செய்துகொண்டே இருந்தவர். அவரை அவரது மகன் பீட்டரின் மூலம் தொடர்புகொள்ளும் எஃப்.பி.ஐ ஏஜெண்ட் ஒலிவியா ஒரு கோரிக்கை வைக்கிறார். அந்த மிக வித்தியாசமான கோரிக்கைதான் இந்த சீரீஸின் தொடக்கம். அதிலிருந்து ஒவ்வொரு எபிசோடும் மிகவேகமாகப் பறக்கும்.

ஜான் நோபிள் எனும் நடிகர்: இந்த சீரீஸில் ‘Mad Scientist’ என்று அழைக்கப்படும் விஞ்ஞானி வால்டர் பிஷப்பாக நடித்தவர் பழம்பெரும் நாடக நடிகர் ஜான் நோபிள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ் - ரிடர்ன் ஆஃப் த கிங்’ படத்தில் பைத்தியம் பிடித்த மன்னன் டெனதாராக நடித்தவர் என்றால் உங்களுக்குப் புரியும். அவரின் அந்த வேடம் மிகச்சிறப்பாகப் பேசப்பட்டது. அதில் பின்னி எடுத்திருப்பார் ஜான் நோபிள். இதுபோன்ற பல மறக்கமுடியாத கதாபாத்திரங்களை நாடக அரங்கிலும் திரையிலும் பல வருடங்களாக நடித்துக்கொண்டிருப்பதே இவரது திறமை. மொத்தத்தில் நாம் முதலிலேயே பார்த்ததுபோல, ஃப்ரிஞ்ச் என்கிற இந்த சீரீஸில் இல்லாத விஞ்ஞானப் புனைவு (Science Fiction) கருத்துகளே இல்லை என்று சொல்லலாம். அத்தனை விஷயங்களும் கதாபாத்திரங்களுக்கு நிகழும் சம்பவங்கள் வழியே அவற்றின் உணர்வுகளுடன் கலந்து விவாதிக்கப்படுகின்றன. இதைப் பார்க்கத் தொடங்கினால் நீங்களும் ‘வார்ம்ஹோ’லுக்குள் நுழைந்தவர்போல் உணர்வீர்கள்! அப்படியொரு சாகசத்துக்குத் தயார் எனில் ‘ஃப்ரிஞ்’சும் உங்களுக்காகக் காத்திருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in