

மம்மூட்டிக்கு இந்த வருடத்தின் மூன்றாவது வெற்றியைத் தேடித் தந்துள்ள படம், ‘காதல் தி கோர்’. ‘கண்ணூர் ஸ்குவாட்’ திரையரங்கில் இன்னும் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில் இந்தப் படமும் கவனம் பெற்று வருகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் வெளிவந்த ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் வெற்றிபெற்ற படம்.
சில ஆண்டுகளாக மம்மூட்டியின் படங்கள், மிக மோசமான தோல்வியைத் தழுவின. ‘போக்கிரி ராஜா’, ‘கசபா’ போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும் சர்ச்சைக்கு உள்ளாகின. அவரது கதாபாத்திரத் தேர்வும் விமர்சனத்துக்குள்ளானது. மம்மூட்டிக்கு சினிமா வாழ்க்கையின் அந்திமக் காலம் தொடங்கியதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மம்மூட்டி தனது மறு வரவை சென்ற ஆண்டே தொடங்கிவிட்டார். சென்ற ஆண்டு வெளியான ‘புழு’ மம்மூட்டிக்குக் கவனம்பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து அவரது தேர்வு இளம் இயக்குநர்களை நோக்கித் திரும்பியது. அந்த வகையில்தான் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியுடன் இணைந்தார்.
ஒரு குறுக்கீடு: ‘பூதகாலம்’ என்கிற ஒரே ஒரு படம் செய்த ராகுல் சதாசிவன் என்கிற இளம் இயக்குநரிடம் ‘ப்ரம்மயுகம்’ செய்யத் துணிந்துள்ளார். அந்த வரிசையில்தான் ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ இயக்குநர் ஜியோ பேபியுடன் தற்போது பேசுபொருளாகியிருக்கும் ‘காத’லில் அவர் இணைந்ததும்.
நாம் வீட்டில் காலங்காலமாகப் பார்த்துப் பழகிய சமையல் கட்டின் அறியாத பகுதிகளை ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ வழிச் சித்தரித் திருந்தார் ஜியோ பேபி. இந்தப் படத்திலும் மனிதன் உருவான காலகட்டத்திலிருந்து இருந்துவரும் ஒரு காதலைச் சொல்லியிருக்கிறார். ஒரு காதல் மட்டுமல்ல; காதல்களின் படம் இது. ‘தி கிரேட் இண்டியன் கிச்ச’னில் கைக்கொண்ட அதே சினிமா மொழியைத்தான் இதிலும் அவர் எடுத்துக்கொண்டுள்ளார். ஒரு கிராமம், ஒரு உதாரணக் குடும்பம்,
அதன் அங்கத்தினர்கள் என இவற்றைக் கொண்டு ஒரு சமூகக் குறுக்கீட்டை நிகழ்த்தியிருக்கிறார். கிராமச் சூழலில் வழி பிறள் உறவு பற்றிய சமூக மதிப்பீட்டைச் சொல்லியுள்ளார்.
கிராமத்தின் மதிப்புமிக்க ஒரு நடுத்தரக் குடும்பத்தின் அங்கம் மாத்யூ. வங்கிப் பணியில் இருந்தவர். ஊரில் நல்ல பெயர். அழகான மனைவி ஒமன. கல்லூரி படிக்கும் மகள். மனைவியை இழந்த தன்னுடைய தந்தையுடன் வாழ்கிறான் மாத்யூ. அக்கதாபாத்திரத்தின் இயல்பைத் தொடக்கக் காட்சியிலேயே மம்மூட்டி இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஒரு தேவாலயத்தில் தொடங்கும் காட்சியில், அவர் மனதுக்குள் கட்டி வைத்துள்ள ஒரு பழைய பாவத்தை முகத்தில் நிழலாகக் காண முடியும். மம்மூட்டியின் படங்களில் ஒரு சிறிய பாவனை மாற்றத்தைக் கவனிக்க முடியும். அது இதிலும் வெளிப்பட்டுள்ளது. ‘நண்பகல் நேரத்து மயக்க’த்தில் தமிழ்க் கிராமவாசியாக ஒரு துள்ளலைக் கைக்கொண்டிருந்தார். சுந்தரமும் ஜேம்ஸுமாகக் குழம்பிப் போகும் தருணத்தில் அந்தச் சுபாவங்கள் இரண்டுமே அவரது உடலில் இருக்கும். இந்தப் படத்தில் முற்றிலும் உள் ஒடுங்கிய சுபாவம். கை, கால்களைக்கூட உடலுடன் இடுக்கி வைத்துள்ளார். பெரிய உணர்ச்சிகள் வெளிப்படுத்த முக பாவத்தின் வழி ஒரு ஜென்மப் பாரத்தைக் கடத்தியுள்ளார்.
இடைத் தேர்தலும் விடை கூறலும்: காட்சிகள் மிக இயல்பாக நகர்கின்றன. ஒரு கிராமத்தில் நடக்கும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான இடைத்தேர்தல் வழியே கதை சொல்லப்பட்டுள்ளது. மாத்யூதான் வேட்பாளர். வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு முன்பு அவரது மனைவி அவர் மீது விவாகரத்து வழக்குத் தொடுக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம், ஊருக்குள் பாட்டாகிறது. ’எனது உடல் தேவைகளை நிறைவேற்றவில்லை என்பது மட்டுமல்ல; அவர் தன்பால் உறவாளர்’ என்கிற சம்சாரத்தின் குற்றச்சாட்டுப் பெரும் சர்ச்சையாகிறது. தேர்தலால் கட்சி இதை அரசியலாக்க நினைக்கிறது. 18 வருட காலத்தில் நான்கு முறைதான் உறவு கொண்டார் என்கிற வாதம், பெண் பக்க நியாயத்தைப் பேசுகிறது. அதே நேரம் தன்பால் உறவாளர்களைக் கூண்டில் ஏற்றவில்லை.
மாத்யூவுக்கும் தங்கனுக்குமான காதல் காட்சிகளாகச் சித்தரிக்கப்படவில்லை. ‘மும்பைபோலீ’ஸில் பிருத்விராஜ் சுகுமாரன் இதுபோன்ற தொரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் அக்காதலைக் காட்சிகளாக சித்தரித்து மலினப்படுத்தியிருந்தது. ஆனால், அதைவிட அந்தக் காதலின் ஆழத்தை, முறிவை ஜியோ பேபியின் இந்தப் படம் உணர்த்துகிறது. தங்கனும் மாத்யூவும் ஒருசில ஃபிரேம்களில்தான் சேர்ந்து வருகிறார்கள். உரையாடலே இல்லாத ஒரு காதல், பார்வைகளுக்கு இடையில் உணர்த்தப் பட்டுள்ளது.
விநோதமான சுவாரஸ்யம்: பதினெட்டு வருட வாழ்க்கைக் கசப்பு ஜோதிகாவின் முகத்தில் திருத்தமாக வெளிப் பட்டுள்ளது. தன் வாழ்க்கைக்காக யாரையும் நொந்துகொள்ளாத ஒரு கதாபாத்திரம். அல்லது நொந்து தீர்ந்தடங்கிய ஒரு கதாபாத்திரம். அதைக் கடைசிவரைக் கையில் ஏந்தியுள்ளார். இந்தத் தம்பதிகளுக்குள் உள்ள காதலையும் படம் சொல்கிறது. விவாகரத்து வழக்குக்காக ஒரே காரில் நீதிமன்றம் செல்கிறார்கள். ஒமன கூண்டில் ஏறப்போகும்போது அவளது கைப்பையை மாத்யூ பிடித்துக்கொண்டு நிற்கிறான். இந்தக் காட்சி விநோதமான சுவாரசியத்தை அளிக்கிறது.
நமது சமூக அந்தஸ்துக்காக அடக்கி வைக்கப்பட்ட ஒரு காதலை, அதனால் பலியான ஒரு வாழ்க்கையை இந்தப் படம் இரு முகமாகச் சித்தரித்துள்ளது. இருபக்கத்தின் நியாயத்தையும் காட்சிகள் வழி மெல்ல மெல்லச் சொல்லவும் செய்துள்ளது. விவகாரத்து என்பதை ஒரு படிமமாகக் கொண்டு இந்தப் பிரச்சினையைப் படம் நீதிமன்றம் போல் விசாரித்துள்ளது. நீதிமன்ற விசாரணைப் போல் சில குறைகளும் படத்தில் உண்டு. ஆனால், காலம் சொல்ல விரும்பாத ஒரு காதல் கதையை இப்படம் சொல்லியுள்ளது. இது ஓர் ஆரோக்கியமான நல்ல தொடக்கம்.