

பிறந்தபோதே உலகில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே பிரதியெடுத்துக் கொடுக்கும் ‘ஆவணப்பட’மாகத்தான் பிறந்தது சினிமா. ஆனால், இன்று ஆவணப்படத்துக்கும் சிறந்த கதை சொல்லல் முறைகள் வந்துவிட்டன.
அப்படியிருக்கும்போது, மனித வாழ்வைப் படியெடுக்கும் திரைப்படங்கள், இன்று கதை சொல்லும் உத்தியிலும் காட்சிமொழியைக் கையாளும் திறமையிலும் சிறந்து விளங்குகின்றன. ஒரு சிறந்த திரைப்படம் தரும் திரை அனுபவம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வருகிறது. பல சிறந்த நாவல்களை நாம் ‘கிளாசிக்’ என்று மனதுக்கு நெருக்கமாக அழைப்பது போலவே, நல்ல படங்கள் காலப்போக்கில் கிளாசிக்குகளாக மாறிவிடுகின்றன. ஒரு கட்டத்தில் ‘அந்தப் படத்தைப் பார்த்தீர்களா? இன்னும் பார்க்கவில்லையா? தவறவிடாதீர்கள்’ என்று பரிந்துரைக்கிறோம். இந்நூலில் டாக்டர் ஆர். கார்த்திகேயன் அதைத்தான் ரசனையோடு செய்திருக்கிறார்.
பல படைப்பாளிகள் சமரசம் என்கிற சிறைக்குள் சிக்கிவிடாமல், சுயாதீனமாக படங்களை எடுத்து வாழ்வைக் கற்றுக்கொடுக்கும் சிறந்த படைப்புகளைக் கொடுத்து விடுகிறார்கள். இன்னும் சிலர் வணிகக் கட்டமைப்புக்குள் இருந்துகொண்டே சிறந்த படங்களைத் தந்துவிடுகிறார்கள். எப்படியிருப்பினும் ஒரு திரைப்படம் திரைப் பாடம் ஆகும்போதுதான், அதன் மேன்மை காலம் கடந்தும் வாழ்க்கைக்கு உதவுகிறது. அப்படிப்பட்ட சிறந்த படங்களைத்தான் நூலாசிரியர் நமக்கு முற்றிலும் புதிய பார்வையுடன் அறிமுகப்படுத்துகிறார்.
ஆங்கிலம், இத்தாலி, ஜப்பானியம் என பல அந்நிய மொழிகளிலும் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய இந்திய மொழிகளிலும் வெளியான 31 சிறந்த திரைப்படங்களைக் குறித்த தனது அட்டகாசமான, ஆழமான பார்வையைச் சுவைபடப் பரிமாறியிருக்கிறார்.
குறிப்பாக இந்நூலில் அவர் அலசியிருக்கும் திரைக் கதாபாத்திரங்களின் மனப்பாங்கு, மனப்போக்கு ஆகியவற்றைக் குறித்து நாம் தவறவிடும் கோணங்களை முன்வைக்கிறார். அது திரை விமர்சனத்துக்குப் புதிய பரிமாணத்தைத் தருகிறது.
திரைப்பாடம்
l டாக்டர் ஆர்.கார்த்திகேயன்
வெளியீடு: தமிழ் திசை
134 பக்கங்கள்
விலை ரூபாய்: 160
நூலைப் பெற: 044 -35048001
7401296562 / 7401329402