சினிமா ரசனை 2.0 - 21: திவாலான குடும்பத்தைக் காப்பாற்றும் கிராமம்!

சினிமா ரசனை 2.0 - 21: திவாலான குடும்பத்தைக் காப்பாற்றும் கிராமம்!
Updated on
3 min read

மம்மூட்டி-ஜோதிகா நடித்து ‘காதல் -The Core' என்கிற மலையாளப் படம் வந்திருக்கிறது. மிகப் பரவலான விவாதக் களமாக மாறியிருக் கிறது. காரணம், அந்தத் திரைப்படத்தில் கையாளப்பட்டுள்ள கதைக் கரு.

எந்தப் பிரபல சூப்பர் ஸ்டாரும் செய்யாத ஒரு கதாபாத்திரத்தை மம்மூட்டி ஏற்று நடித்திருக் கிறார். படத்தின் பிரதானக் கதாபாத்திரம் ஓர் தன்பாலின உறவாளர் (Gay). அப்படியொரு கதாபாத்திரத்தை நம்மூரில் நட்சத்திர நடிகர்கள் நடித்ததே இல்லை. இதுதவிர, பலவிதமான உறவுகள், பாலினங்கள், அவர்களுக்கிடையே நிலவும் உறவுச் சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிய படங்களும் உலகளவில் அதிகமாகவே வந்துகொண்டிருக்கும் காலகட்டம் இது. ஆண், பெண் என்றே பல்லாண்டு காலமாக உலகம் முழுதும் கதாபாத்திரங்கள் எழுதப்பட்டு வரும் நிலையில், தற்போது அனைத்துப் பாலின அடையாளங்கள் பற்றிப் பேசவேண்டிய தேவை எழுந்திருக்கிறது. மக்கள் கூட்டத்தில் இருக்கும் அக்கதாபாத்திரங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தவேண்டியது கதாசிரியர்களின் காலக் கடமை என்றுகூடச் சொல்லலாம். அதுதான் ஆரோக்கியமான போக்கும்கூட. ‘Inclusivity’ என்பது உலகெங்கும் பேசப்படும் சொல்லாக இப்போது மாறியிருக்கிறது.

90களின் மத்தியில்: அந்த வகையில் பார்த்தால் மிகப்பிரபலமான ‘Friends’ என்கிற சீரீஸிலேயே லெஸ்பியன் உறவு சித்தரிக்கப்பட்டிருக்கும். நாயகர்களில் ஒருவனான ராஸின் முதல் மனைவி, இன்னொரு பெண்ணால் கவரப்பட்டு இவனை விவாகரத்து செய்துவிட்டு அந்தப் பெண்ணுடன் வாழ்ந்துகொண்டிருப்பார். ஆனால் அப்போது அவர் கர்ப்பமாக இருப்பதால் ஒரு குழந்தை பிறக்கும். ஒரு பக்கம் அப்பாவான ராஸ், இன்னொருபக்கம் இரண்டு அம்மாக்கள் என்று அக்குழந்தை வளர்வதைக் காட்டியிருப்பார்கள். ‘Friends’ சீரீஸ் வந்தது தொண்ணூறுகளின் மத்தியில்!

இப்படி உலகெங்கும் நடைமுறையில் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பாலினங்கள், உறவுகள் ஆகியவற்றுக்கு ஓர் அற்புதமான உதாரணமே ‘ஷிட்’ஸ் க்ரீக் (Schitt's Creek) சீரீஸ். கடந்த 2015இல் தொடங்கி 2020 வரை ஆறு சீசன்கள் ஒளிபரப்பான இந்த சீரீஸ், ‘Friends’ போலவே இதுவும் விழுந்து புரண்டு சிரிக்கவைக்கும் ஒன்று என்றாலும், உணர்வுபூர்வமான காட்சிகளும் இதில் உண்டு. தவிர, உலகெங்கும் இன்றும் பெரிதாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதை உருவாக்கியவர்கள் பிரபல நடிகர்கள் யூஜீன் லெவியும் அவரது மகன் டான் லெவியும். இந்த இருவரும் இந்த சீரீஸிலும் அப்பா - மகனாகவே நடித்திருப்பார்கள் (யூஜீன் லெவியை ‘American Pie’ வரிசைத் திரைப்படங்களில், குழந்தைகள் பதின்ம வயதை எட்டியதும் தட்டுத்தடுமாறிக்கொண்டு அறிவுரை கூறும் தந்தை கதாபாத்திரத்தில் பார்த்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்).

மறக்கப்பட்ட கிராமம்: இந்த ‘Schitt's Creek’ சீரீஸின் கதைச் சுருக்கம் இதுதான். மிகப் பிரம்மாண்டமாகவும் பல மில்லியன் டாலர்களுடனும் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு குடும்பம் (தந்தை ஜான்னி ரோஸ், தாய் மொய்ரா ரோஸ், மகன் டேவிட் ரோஸ், மகள் அலெக்ஸிஸ் ரோஸ்) ஆகியோர் திடீரென ஒரு நாள் தங்களது அவ்வளவு பணமும் சொத்துக்களும் அவர்களின் மேலாளரால் திருடப்பட்டுவிட்டதைத் தெரிந்துகொள்கின்றனர். மேலாளர் தலைமறைவு. கையில் ஒரு பைசா இல்லை. திடீரென நடுத்தெருவுக்கு வந்துவிடும் நிலை. அவர்களின் பிரம்மாண்டமான வீடு அரசால் கையகப்படுத்தப்பட்டுவிடுகிறது. எங்கே போவது என்பதே தெரியாத சூழல். அப்போதுதான் அவர்களுக்குத் திடீரென நினைவு வருகிறது ‘ஷிட்’ஸ் க்ரீக்’ என்கிற சிறிய கிராமத்தை என்றோ ஒரு நாள் விளையாட்டாக வாங்கி, அதை மறந்துவிட்ட கதை (அமெரிக்காவில் இப்படி சில கிராமங்களை வாங்க இயலும்). உடனடியாகத் தப்பித்தால் போதும் என்று அக்கிராமத்துக்கு இப்பணக்காரக் குடும்பம் குடிபெயர்கிறது. இதன்பின் அக்கிராமத்து மனிதர்களுக்கும் இவர்களுக்கும் ஏற்படும் முரண்பாடுகள், நட்பு, பிரச்சினைகள், சண்டைகள், காதல்கள் என்பதே ஆறு சீசன்களின் கதை.

கிராமத்து வாழ்வில் பாடுகள்: இந்த சீரீஸின் கதாபாத்திரங்கள் மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டவை. தந்தை ஜான்னி ரோஸ் ஒரு பெரிய வீடீயோ கடையை வைத்திருந்தவர். பொறுமைசாலி. எது சரி, எது தவறு என்பதை அவரது குடும்பத்தில் உண்மையாக உணரத் தக்கவர். ஆனால் பெரும் பணக்காரக் குடும்பமாக இருந்ததால் அதற்கேற்ற கெத்து காட்டுபவர். கிராமத்துக்குப் போனாலும் அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள மறுத்து, பணக்காரத் தோரணையுடன் வாழ முயல்பவர். ஆனால் அது நடக்காமல் போகிறது. அதை உணர்ந்ததும் மெல்ல மெல்லக் கிராமத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ள நினைப்பவர். எப்படியாவது கிராமத்தில் மீண்டும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று நினைத்து அதற்கான வழிகளைத் தேடுகிறார். தன்னுடைய குழந்தைகள் வாழ்க்கைப் புரிந்துகொள்ளாமல் இஷ்டத்துக்கு வாழ்கிறார்களே என்கிற சிறிய வருத்தம் கொண்டவர்.

அவரது மனைவி மொய்ரா ரோஸ்தான் இந்த சீரீஸின் மனோரமா என்று சொல்லலாம். ஒரு பழைய மெகா சீரியலில் கதாநாயகியாக நடித்தபின் அதை வைத்துக்கொண்டே பல்லாண்டுகள் பணக்கார வட்டங்களில் வளைய வருபவர். அனைத்து மிகப்பெரிய வி.ஐ.பிக்களையும் நன்றாகத் தெரிந்தபடி பேசுவது இவரது வழக்கம். உடைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மகளை விடவும் மகனை மிகவும் பிடிக்கும். அந்த மகனைத் தன்னைப்போலவே வளர்த்துவிட்டிருப்பவர். கிராமத்தில் இவரால் உருவாகும் நகைச்சுவை கலந்த பிரச்சினைகள் சீரீஸில் ஏராளம். அதில் சிரிப்பும் தாராளம். அனைத்துக் கிராம மக்களையும் விடத் தன்னை உயர்வாகக் காட்டிக்கொள்ள எப்போது பார்த்தாலும் எதையாவது செய்துகொண்டேயிருப்பவர்.

செல்வச் செருக்கு எனும் சிக்கல்: மகன் - டேவிட் ரோஸ். அவனுக்கு ஆடை வடிவமைப்பு மிகவும் பிடிக்கும். உலகின் அத்தனை ஃபேஷன் ஷோக்களைப் பற்றிய செய்திகளும் அத்துப்படி. இத்தனைக்கும் மேல் இவர் ஓர் தன்பாலின உறவாளரும்கூட (Bisexual என்றும் சில எபிசோடுகளில் சொல்லப்படும்). பொதுவாக ஆண்களின் மீது ஈடுபாடு கொண்டவர்.தன் தங்கையுடன் எப்போது பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பவர். ஆனால் பொதுவில் அப்பாவி.

மகள் - அலெக்ஸிஸ் ரோஸ். பிறக்கும்போதே அனைவரையும் விடவும் தான் தான் மேல் என்கிற எண்ணம் உண்டு. யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவார். ஆனால் உள்ளுக்குள் யாராவது தன்னிடம் வந்து அன்பாகப் பேசினால் போதும் என்று நினைப்பவர். உலகின் பணக்காரர்கள் அனைவருடனும் பலமுறை டேட்டிங் போனவர். இதனால் கிராமத்தில் வந்து குடியேறும்போது எதுவுமே ஒட்டாமல், யாருடனும் பழகாமல் இருப்பவர். மெல்ல மெல்ல அங்கிருக்கும் மக்களிடம் பழகும்போது ஒரு சிலருடன் நட்பு, அடுத்தடுத்து சிலருடன் காதல் அனுபவங்கள் அவருக்கு அமைகின்றன. ஆனால் இவரது மேட்டிமைத்தனமான ‘ஈகோ’வினால் அவற்றிலும் பிரச்சினைகள் வருகின்றன.

மொத்தத்தில் இந்தக் குடும்பம், இன்னும் தங்களைப் பணக்காரர்கள் என்று நினைத்துக்கொண்டே கிராமத்தில் இருக்கும் மக்களுடன் பழகுவதும் அதனால் நேரும் பிரச்சினைகளும்தான் இந்த சீரீஸின் முக்கியமான கதை.

இவர்களைத் தவிர கிராமத்தில் பல ‘ஜாலி மூட்’ கதாபாத்திரங்கள் உண்டு. ஒருமுறை பார்க்கத் தொடங்கினால் சீரீஸை விடமாட்டீர்கள் என்பது இதன் சிறப்பம்சம். எல்லாவற்றையும்விட முக்கியமாக, இதில் டேவிட் ரோஸாக நடித்த டான் லெவியே ஓர் தன்பாலின உளவாளர் என்பதால் அது தொடர்பான காட்சிகள் எல்லாமே அழுத்தமாகவும் இயல்பாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. சில படங்களில் இருப்பதுபோல் துருத்திக்கொண்டு தெரியாது.

இந்த சீரீஸ் முடிந்ததும் உலகெங்கும் இருக்கும் பால் புதுமையினரின் (LGBTQ) பேராதரவைப் பெற்றது. பால் புதுமையினர் பற்றிய முக்கியமான சீரீஸ்களில் ஒன்றாக இது விளங்குகிறது. அனைவரும் பார்க்கவேண்டிய மிக முக்கியமான சீரீஸ்களில் இதுவும் ஒன்று.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in