

வட்டிக்கு வாகனக் கடன் வழங்கும் வடசென்னை சேட்டு ஒருவரிடம் வேலை செய்கிறார் விக்ரம். ஒழுங்காக தவணை கட்டாதவர்களின் இருசக்கர வாகனங்கள், கார்களை ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கிவந்து சேட்டிடம் ஒப்படைப்பதுதான் விக்ரமின் வேலை. அதனால், அதுவே அவரது பெயராகிவிடுகிறது. ‘கல்லூரி’ வினோத், ‘கபாலி’ விஷ்வநாத், ஸ்ரீமன் ஆகியோர் அவரது கூட்டாளிகள். வடசென்னையை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ரவுடியின் காரையும் இவ்வாறு தூக்கி வந்துவிடுவதால், அவரது கோபத்துக்கு ஆளாகிறார். இதனால், அவரும் நண்பர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் மீதிக் கதை.
கதை தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டால், வடசென்னையை வாடகைக்கு எடுத்துக்கொள்வது வணிக தமிழ் சினிமாவின் வாடிக்கை. அதிலும், வடசென்னையை குற்றங்கள் மலிந்த பூமியாகக் காட்டுவதற்கு சலித்துக்கொள்வதே இல்லை.
இந்தப் படத்திலும் சலிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு வன்முறைக் காட்சிகள். திரைக்கதையை ஓரளவுக்கு சுவாரசியமாகத் தந்துவிடவேண்டும் என்று இயக்குநர் விஜய்சந்தர் முயன்றிருப்பது தெரிகிறது. ஆனால், கதை விறுவிறுப்பாகும் நேரத்தில் வேகத்தடையாக குறுக்கே புகுந்து கதையின் ஓட்டத்தை தடுத்து விடுகின்றன பாடல்கள்.
காதல், ஆக்சன் என படம் முழுவதையும் விக்ரம் தாங்கிப் பிடிக்கிறார். தமன்னா தன்னை காதலிப்பதாக நண்பர்களிடம் பீலா விடும் இடங்களில் அழகு. ஆனால், உடல்மொழி, வசனம் உச்சரிப்பு ஆகியவை அவரது பழைய மாஸ் மசாலா படங்களின் தொடர்ச்சியாகவே இருக்கின்றன. விரல்களைக் காட்டி அவர் பஞ்ச் வசனம் பேசுவது, ஜெமினியின் ‘ஓ போடு’ காட்சியை நினைவுபடுத்துகிறது. ‘கனவே.. கனவே புதுகனவே’ பாடலில் ‘தல’ பாணியில் ‘சால்ட் அண்ட் பெப்பர்’ தலையில் வந்து வசீகரிக்கிறார். சண்டைக் காட்சிகளில் தன்னைத் தனித்துக் காட்டிக்கொள்ள விரும்பும் விக்ரம், அந்த விஷயத்தில் ரசிகர்களை ஏமாற்றவில்லை. ஆனால், சண்டைக் காட்சிகளுக்கு இணையாக காதல் காட்சிகளை அவருக்கு வைத்து, பார்வையாளர்களை கடுப்பேற்றியிருக்கிறார் இயக்குநர்.
தமன்னாவுக்கு பெரிய பங்களிப்பு இல்லாவிட்டாலும், கிடைத்த இடங்களில் ஸ்கோர் செய்கிறார். அதுவும், தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை யின் வீட்டுக்கே விக்ரமை அழைத்துப் போய் அறிமுகப்படுத்தும் இடத்தில் கெத்து! ‘உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு, உன்கூட வாழ்ந்து காட்ட ஆசை’ என உருகும் போது ஈர்க்கிறார்.
படத்தில் சூரியும் இருக்கிறார். அவ்வளவே! ‘நீ குழம்பு வை. நான் வந்து பேரு வைக்கிறேன்’ என்று வாட்ஸ்அப் காமெடியை பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்கு படத்தில் நகைச்சுவை பகுதி பலவீனம்.
ரவுடியாக வரும் பாபுராஜ், சேட்டாக வரும் ஹரீஷ் பெராடி ஆகிய மலையாள நடிகர்களும் வழக்கமான கதாபாத்திரங்களையே ஏற்றிருக்கின்றனர். பெராடி கொஞ்சம் கவனிக்க வைக்கிறார்.
படத்துக்கு எஸ்.எஸ்.தமனின் இசை எந்த விதத்திலும் உதவவில்லை. ஊகிக்கமுடியாத கிளைமாக்ஸ் மற்றும் அதன் பின்னால் வரும் தகவல்களுக்கு சபாஷ்! ஆனால், சமூக அக்கறையுள்ள நல்ல விஷயத்தை கையில் வைத்துக்கொண்டு, ஆளைத் தூக்குவது, காரை தூக்குவது என்று வீணாக்காமல், திரைக்கதை உருவாக்கத்தில் இயக்குநர் இன்னும் கொஞ்சம் ஸ்கெட்ச் போட்டு வேலை செய்திருக்கலாம்.