

‘அனிமே’ என்பது ஜப்பானிலிருந்து தயாரிக்கப்படும் அனிமேஷன் படங்களைக் குறிக்கும் சொல் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். உலகெங்கும் மிகவும் பிரபலமாக இருக்கும் அனிமேஷன் வடிவமாக ‘அனிமே’ விளங்குகிறது. அந்த ‘அனிமே’யில் இல்லாத வகைகள் இல்லை. காதல், ஆக் ஷன், மென்சோகம், நகைச்சுவை என்று எல்லா வகைகளிலும் ஏராளமான ‘அனிமே’க்கள் இருக்கின்றன. அதேசமயம், கோனாமி என்கிற ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம், 1986இல் முதல் முறையாக ஒரு வீடியோ கேமை வெளியிடுகிறது. அது ரசிகர்களிடம் மிகப் பிரபலமாக ஆக, அதன்பின் அவ்வப்போது அந்த கேமின் பாகங்கள் வெளியாகி இன்றுவரை மிகப் பிரபலமாக இருக்கும் கேம், ‘கேஸில்வேனியா’ (Castlevania). இந்த கேமை முன்வைத்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஒரு அனிமே சீரீஸை எடுக்கிறது. அதன் முதல் பாகம் 2017இல் வெளியானது. அது மிகவும் பிரபலமடைய, அதன்பின் மூன்று பாகங்களை நெட்ஃபிளிக்ஸ் வரிசையாக வெளியிட்டது. 2021இல் நான்காவது பாகத்துடன் கேஸில்வேனியா முடிவடைந்தது.
ரத்தவெறி கொண்ட மன்னன்: ‘கேஸில்வேனியா’வின் முக்கியமான கதாபாத்திரம், நம் அனைவருக்கும் தெரிந்த டிராகுலா. ருமேனியாவில் இருந்த மன்னன் தான் டிராகுலா என்பது நமக்குத் தெரியும். வலேக்கியா (Wallachia) என்கிற பிரதேசத்தை ஆண்டுவந்த வ்ளாட் த இம்பேலர் (Vlad the Impaler) என்கிற மன்னனை வைத்தே டிராகுலா என்கிற ரத்தக் காட்டேரி கதாபாத்திரம் எழுதப்பட்டது. ‘கேஸில்வேனியா’வில் டிராகுலா பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானியாகக் காட்டப்படுவான். ரத்தக் காட்டேரியாக இருக்கும்போதே தனியாக வலேக்கியாவில் ஒரு கோட்டையில் பலவிதமான விஞ்ஞானப் பரிசோதனைகள் செய்துகொண்டிருப்பான்.
அப்போது அவனுக்கு லீசா என்கிற பெண் அறிமுகமாவாள். அவளுக்கும் விஞ்ஞானத்தில் பெரும் ஆசை. அவளது ஆர்வத்தைப் பார்த்து டிராகுலா அவளுக்கும் விஞ்ஞானம் கற்றுக்கொடுக்க ஒப்புக்கொள்வான். இருவரும்நெருக்கமாவார்கள். திருமணமும் செய்து கொள்வார்கள். லீசாவை உயிருக்கு உயிராக டிராகுலா காதலிப்பான். சில வருடங்கள் கழித்து, வலேக்கியாவில் லீசாவின் வீட்டில் விஞ்ஞான உபகரணங்கள் கண்டெடுக்கப்படும். பதினைந்தாம் நூற்றாண்டில்இப்படியெல்லாம் கண்டெடுக்கப்பட்டால் என்ன செய்வார்கள் என்று தெரியுமல்லவா? ‘Stake’ என்று தூணில் கட்டிவைத்து உயிரோடு எரிப்பார்கள். அதிலும் பெண்கள் என்றால் உடனடியாக ‘சூனியக்காரி’ என்கிற பட்டம் சூட்டப்படும். அதேபோல் விஞ்ஞானத்தை விருப்பமுடன் கற்றுக்கொள்ள நினைத்த லீசாவை ‘சூனியக்காரி’ என்று பழி சொல்லி மத குருமார்கள் கட்டிவைத்து எரித்துவிடுவார்கள்.
அவகாசம் கொடுக்கும் டிராகுலா: இது டிராகுலாவுக்குத் தெரியவர, உடனடியாகக் கோபமடையும் அவன் மத குருமார்கள் முன்னர் தோன்றி அவர்களுக்கு ஒரு வருடம் நேரம் கொடுப்பான். ‘ஒரு வருடத்துக்குள் செய்த தவறுக்காகத் திருந்தி அனைவரும் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். தவறினால் அந்த ஊரில் இருக்கும் அனைவரையும் ஒருவர் பாக்கியில்லாமல் கொல்லப்போவதாக’ டிராகுலா சொல்லி மறைவான். ஆனால் பாதிரியார்கள் அனைவரும் ‘டிராகுலா என்கிற ஒன்று இல்லவே இல்லை என்ற இறுமாப்புடன் வாழ்வார்கள். டிராகுலாவுக்கு ஒரு மகன் உண்டு. அவன் பெயர் அலுகார்ட் (Alucard). அவன் டிராகுலாவிடம் வந்து, லீசாவைக் கொன்றவர்களை வேண்டுமானால் நீங்கள் கொல்லுங்கள்; அதற்காக ஒரு ஊரையே அழித்தொழிப்பது தவறு என்று பேசுவான்.
அவனை டிராகுலா கோபத்தில் கடுமையாகக் காயப்படுத்திவிடுவான். ஒரு வருடம் கழித்து, லீசா என்கிற சூனியக்காரியைக் கொன்ற நாளை வல்லேகியாவில் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். அப்போது அங்கேடிராகுலா தோன்றி, இன்னும் யாருமே திருந்தாததால் அனைவரையும் அழிக்கப் போவதாகச் சொல்வான். அத்தோடு நில்லாமல், தனது ரத்தக் காட்டேரி வௌவ்வால்களை வைத்து ஊரில் இருக்கும் அனைவரையும் கொன்றுவிடுவான். ஊரே பாழடைந்துபோய், ஒரு பேய் நகரமாக மாறிவிடும். அங்கே இருக்கும் ரத்தக் காட்டேரிகள், மெல்ல அருகே இருக்கும் நகரங்களையும் ஒவ்வொன்றாகக் கைப்பற்றி அனைவரின் ரத்தத்தையும் குடிக்கத் தொடங்கும். இதுதான் ‘கேஸில்வேனியா’வின் முதல் சில நிமிடங்கள். இதிலிருந்துதான் கதை தொடங்குகிறது.
மீண்டும் உயிர்பெறும் நகரம்: ‘கேஸில்வேனியா’வில் மூன்று முக்கியமான கதாபாத்திரங்கள்: ஒன்று, டிரெவர் பெல்மாண்ட். மிகப்பெரிய அரச பரம்பரையின் வாரிசு. ஆனால் தற்போது அரசாங்கமும் இல்லாமல் பணமும் இல்லாமல் நாடோடியாக ஊர் ஊராக அலைபவன் (வந்தியத்தேவன் போல்). டிரெவர் ரத்தக் காட்டேரிகளை வேட்டையாடுபவன். அவனிடம் பல வித்தைகள் உண்டு. வலேக்கியாவின் அருகாமையில் இருக்கும் ஒரு நகரத்தில் ஒரு பெண்ணைக் கொலைவெறி பிடித்த மதகுருக்களிடமிருந்து அவன் காப்பாற்ற, அந்தப் பெண்ணான சைஃபா பெல்னாடஸ் (Sypha Belnades) மந்திர தந்திரங்களில் சக்தி வாய்ந்தவள் என்று தெரிந்துகொள்வான்.
இவர்கள் இருவருடனும் பின்னர் கைகோப்பது நாம் முதலிலேயே பார்த்த டிராகுலாவின் மகனான அலுகார்ட். டிராகுலாவிடம் காயப்பட்டபின் பாதாளத்தில் மயங்கிக்கிடப்பான். அவனையும் தற்செயலாகச் சந்திப்பார்கள் டிரெவரும் சைஃபாவும். இவர்கள் மூவரும் டிராகுலாவுடன் மோதி, வல்லேக்கியாவை மறுபடியும் உயிர்ப்பான நகரமாக மாற்ற முடிவுசெய்வார்கள். இது நடந்ததா இல்லையா என்பதுதான் கேஸில்வேனியாவின் கதை. கேஸில்வேனியா என்பது ஒரு கேம் என்பதை முதலிலேயே பார்த்தோம். இந்த கேமின் பல பாகங்களின் முக்கியமான இடங்களை வைத்துத்தான் கேஸில்வேனியா எடுக்கப்பட்டிருக்கிறது.
சீரிஸில் முதலிலிருந்துஇறுதிவரை அமானுஷ்யம், அட்டகாசமான சண்டைகள், உணர்ச்சிகரமான காட்சிகள், நகைச்சுவை என்று கலந்தே எழுதப்பட்டிருப்பதால் கொஞ்சம்கூட அலுக்கவே அலுக்காது. கூடவே உலகெங்கும் வரவேற்பு பெற்ற சிறந்த ‘அனிமே’க்களில் இதுவும் ஒன்று என ஏன் அழைக்கப்படுகிறது என்பதைப் பார்க்கும்போது நீங்களே புரிந்துகொள்வீர்கள். இதன் திரைக்கதை எழுத்தாளர் குழுவின் தலைவர் வாரன் எல்லிஸ் (Warren Ellis), இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப் புகழ்பெற்ற காமிக்ஸ் எழுத்தாளர். எத்தனையோ காமிக்ஸ்களை எழுதியிருப்பவர். இவரது பிரத்யேகமான பாணி இந்த சீரீஸில் நன்றாகவே வெளிப் பட்டிருக்கும். மேலே சொல்லப்பட்ட கதாபாத்திரங்கள் தவிர, இந்த சீரீஸில் மறக்க முடியாத பல கதாபாத்திரங்கள் உண்டு. முதல் இரண்டு சீசன்களில் டிராகுலாவுடனான யுத்தம் பெரும் பங்கு வகிக்கும்.
அதன்பின் வந்திருக்கும் மூன்றாவது, நான்காவது சீசன்களில் வேறொரு கதை. அதுவும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். நான்கிலும் இதே பிரதானக் கதாபாத்திரங்களே வருவார்கள். நல்ல கதையம்சத்துடன் வெளிவந்திருக்கும் கேஸில்வேனியா அவசியம் திரை ரசிகர்களுக்குப் பிடிக்கும். இதன்மூலம் அனிமேஷன் என்கிற அற்புதமான விஷயத்தை எப்படித் திறமையாகக் கையாளலாம் என்பதும் புரியும். ஊரே பாழடைந்துபோய், ஒரு பேய் நகரமாக மாறிவிடும். அங்கே இருக்கும் ரத்தக் காட்டேரிகள், மெல்ல அருகே இருக்கும் நகரங்களையும் ஒவ்வொன்றாகக் கைப்பற்றி அனைவரின் ரத்தத்தையும் குடிக்கத் தொடங்கும். இதுதான் ‘கேஸில்வேனியா’வின் முதல் சில நிமிடங்கள். இதிலிருந்துதான் கதை தொடங்குகிறது.