Last Updated : 24 Nov, 2023 06:12 AM

 

Published : 24 Nov 2023 06:12 AM
Last Updated : 24 Nov 2023 06:12 AM

திரைப் பார்வை: 12th ஃபெயில் | வெளிச்சமென்பது வெளியேயில்லை

“படிப்பை மட்டும் நம்மகிட்டேர்ந்து எடுத்துக்கிறவே முடியாது சிதம்பரம்! அவங்கள எதிர்த்து நீ ஜெயிக்கணும்னு நெனச்சா படி! " - ‘அசுரன்’ படத்தில் சிவசாமி தன் மகன் சிதம்பரத்துக்கு சொல்லும் இறுதி அறிவுரை இது. கல்வியின் முக்கியத்துவம் பற்றி திருவள்ளுவர் முதல் அம்பேத்கர் வரை வலியுறுத்தியதும் இதைத்தான். எல்லாப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் இலவசமாகத் திரையிட்டுக் காட்டவேண்டிய அபூர்வ ரத்தினமாக வெளிவந்திருக்கிறது ‘12th ஃபெயில்’ என்கிற இந்தித் திரைப்படம். அனுராக் பதக்கின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, விது வினோத் சோப்ரா எழுதி இயக்கியிருக்கிறார்.

குற்றப் பின்னணியின் தீராக் கறை படிந்த சம்பல் பள்ளத்தாக்கு. அங்கேயுள்ள பின்தங்கிய கிராமமொன்றில் வாழும் நேர்மையான குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் மனோஜ் குமார் சர்மா. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைகிறார். சூழல் காரணமாக, தான் சந்திக்கும் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியான துஷ்யன் சிங்கின் மந்திர வார்த்தைகள் அவர் வாழ்வைத் திசை திருப்புகிறது. பின்னாளில், அந்த கிராமத்தை விட்டு வெளியேறி, தன்னைப் போலவே லட்சக்கணக்கில் போட்டித் தேர்வுக்கும் தயாராகும் மாணவர்கள் மத்தியில், கனவுகளைச் சுமந்து டெல்லி செல்கிறான்.

முள்பாதைகள் நிறைந்த வறுமையின் நெருக்கடிகளுக்கும் கனன்று எரிந்துகொண்டேயிருக்கும் நம்பிக்கையென்னும் அணையா நெருப்புக்குமிடையே நடக்கும் அவனது வாழ்க்கைப் போராட்டங்களே கதை. பள்ளத்தாக்கிலிருந்து பனிமலையின் உச்சியை அடையும் பழைய அச்சில் வார்த்த வெற்றிக்கதை போல்தான் மேற்பரப்பில் தெரிகிறது. ஆனால், துல்லியமான திரைக்கதை, அழுத்தந்திருத்தமான கதாபாத்திர எழுத்து ஆகியவற்றால் பிரமிக்கும்படி செதுக்கியிருக்கிறார் எழுத்தாளர், இயக்குநர் விது வினோ சோப்ரா.

இவர் ஏற்கெனவே ‘காமோஷ்’, ‘முன்னா பாய்’, ‘3 இடியட்ஸ்’ போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர். ஏற்கெனவே, தாம் கொடுத்த வெற்றிப் படங்களின் தொடர்ச்சி என்று கூறிவிட்டு, அவர் ஏனோதானோவென ‘சீகுவல் சினிமா’க்களை எடுத்துக்கொண்டிருந்தால்கூட சுலபமாக பொருளீட்டலாம். ஆனால், அதில் விருப்பமில்லாமல், ஒரு நேர்மையான கதையைப் பிரமாதமாகச் செதுக்கியிருப்பதற்காகவே அவரைப் பாராட்டலாம். கதாபாத்திரங்களுக்கு வெகு பொருத்தமான நடிகர்கள் தேர்வும் விருதுகளுக்கு உண்டான எல்லா தகுதிகளும் கொண்ட நடிப்பும் ஈர்க்கிறது.

கதையை மீறாத ரங்கராஜன் ராமபத்ரனின் ஒளிப்பதிவு உள்ளே இழுத்துக்கொள்கிறது. கையறுநிலை, வறுமை, காதல், லட்சியம், பிடிவாதம் எனக் கதாபாத்திரத்தின் எல்லா நிழல்களையும் தனது முகத்திலும் உடல்மொழியிலும் வசன உச்சரிப்பிலும் வெளிப்படுத்தியிருக்கும் படத்தின் கதாநாயகன் விக்ராந்த் மாசே, கதாநாயகி மேதா ஷங்கர் ஆகிய இருவரும் அபாரமான பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ராவின் பின்னணி இசையைச் சிலாகித்துச் சொல்லலாம். சித்தார், சரோத், புல்லாங்குழல் இவை மூன்றை மட்டுமே கொண்டு, தேவைப்படும் இடங்களில் மட்டும் ஒரு வலுவான, ஆனால் கதாபாத்திர உணர்வுகளை அளவோடு மீட்டும் பின்னணி இசையை அமைத்துள்ளார்.

ஒவ்வொரு முறை நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கி திருட்டுப் பட்டம் சூட்டப்படும் போதும் மனோஜ் செருப்பைக் கழற்றிச் சீறும் காட்சி, டார்ஜிலிங்கில் காதலியின் வீட்டை கண்டடைந்ததும் அவள் பார்க்க முடியாது என்று சொல்லும் நான்கு நிமிட சிங்கிள் டேக் காட்சி, முதல் முறை மகன் தேர்ச்சி பெற்றதை தொலைபேசியில் கிராமத்துத் தாய் கண்ணீருடன் சிரித்தபடி கேட்கும் உணர்வுபூர்வமான காட்சி, இறுதித் தேர்வை நேர்மையாக எதிர்கொள்ளும் உச்சக்கட்டக் காட்சி என ஒரு நாவலின் சம்பவங்களுக்குரிய அத்தனை நயங்களும் நுண்ணுணர்வும் படம் முழுக்க வியாபித்திருக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x