ஓடிடி உலகம்: நடை வழி சினிமா

ஓடிடி உலகம்: நடை வழி சினிமா
Updated on
2 min read

சினிமா என்றதும் பெரிய கதைகள், பிரம்மாண்டமான காட்சிகள் என அந்நியமாகச் சிந்திக்கும் வழக்கம் பெரும்பாலும் இருக்கிறது. அதிலிருந்து வேறுபட்டு நமக்கு அருகிலுள்ள வாழ்க்கையை, அதன் பச்சைத் தன்மையுடன் சித்தரித்த படம்தான், ‘கூழாங்கல்’. மதுரைக்கு அருகில் ஒரு வறண்ட கிராமத்தில் கதை தொடங்குகிறது. கதையின் மையக் கதாபாத்திரங்களான அப்பாவும் மகனும் இந்தக் காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுவிடுகிறார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், நிலக் காட்சிகளின் வழியாகவே படத்தின் மையக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

அந்த நிலமும் சூழலும் மனிதர்களின் மனங்களை வடிவமைப்பதில் உள்ள பங்கை இதன் வழி வினோத் உணர்த்த விரும்புகிறார் எனப் புரிந்துகொள்ளலாம். தன் மகனை அழைத்துக்கொண்டு தன்னுடைய மனைவியைப் பார்க்கச் செல்லும் கதைதான் இது. தன்னுடைய மகனை அழைத்துக்கொண்டு செல்லும் பாதையே, ஒரு கதாபாத்திரமாக படம் முழுவதும் நீண்டு வருகிறது. தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தயக்கமும் பயமும் கொண்ட சிறுவன் கதாபாத்திரம், தக்க உணர்வுடன் வெளிப்பட்டுள்ளது. அப்பாவாக நடித்திருக்கும் கறுத்தடையான், படத்தை ஓட்டமும் நடையுமுமாகத் தன் கைகளுக்குள் எடுத்துச் சென்றுள்ளார்.

பி.எஸ்.வினோத்ராஜ்
பி.எஸ்.வினோத்ராஜ்

உடைந்த கண்ணாடித் துண்டை வைத்துச் சூரிய ஒளியைத் தன்னுடைய அப்பனின் முதுகில் அந்தச் சிறுவன் அடித்துக் காட்டும் காட்சி, சிறார்களுக்கே உரிய விளையாட்டாகவும் அப்பனுக்கு எதிரான பிரதிகாரமாகவும் வெளிப்பட்டுள்ளது. பேருந்துக் காட்சியில் பெரியவர்கள் காட்டுமிராண்டித்தனமாகச் சண்டையிட்டுக்கொள்ளும்போது ஒரு கைக்குழந்தை, சட்டென எழுந்து கத்திக் கரையும் காட்சி, இந்தப் படத்தின் காட்சியாக்கத்துக்கு ஒரு சோற்றுப் பதம். படம் முழுவதையும் சுதந்திரமான காட்சி அனுபவமாக மாற்றும் யத்தனம் இந்தப் படத்தின் சிறப்புகளில் பிரதானமானது.

‘அ’வில் தொடங்கி ‘ஃ’ என இந்தக் கதை ஒரு நேர்க்கோட்டுப் பாதையில் செல்லவில்லை. வழியோரக் குத்துச் செடிகளை உரசிச் செல்லும் சிறுவர்களைப் போல் பல விஷயங்களை விவரித்துச் செல்கிறது. அதாவது, கதையைச் சொல்வதை மட்டும் நோக்காகக் கொண்டு இந்தப் படம் தொழிற்படவில்லை. அதனால் ஒரு இலக்கியப் பிரதிபோல் பார்வையாளனிடமும் இந்தப் படம் பங்களிப்பைக் கோருகிறது. படத்தின் காட்சிகளும் ஒரு யதார்த்தவாத ஓவியம்போல் துண்டுத் துண்டாகப் பார்வையாளர்களுக்கு நல்ல காட்சி அனுபவத்தை அளிக்கக்கூடியது.

இந்தப் படத்தின் காட்சிகள் பெரும்பாலும் நடைதான். ஆனால், இந்த அம்சமே சாதாரண பார்வையாளரின் கோணத்தில் அலுப்பைத் தரக்கூடியதாக இருக்கிறது. கிராமத்தில் நடக்கும் காட்சிகளில் துணைக் கதாபாத்திரங்களின் நடிப்பு, இயல்பாக வெளிப்படவில்லை. துணைக் கதாபாத்திரங்களின் பேச்சு, வட தமிழ்நாட்டின் வட்டார வழக்காக வருகிறது. கறுத்தடையானுக்கும் துணைக் கதாபாத்திரங்களுக்கும் இடையேயான கைகலப்புக் காட்சி ஒரே ஷாட்டில் எடுப்பதற்கான தேவையை அந்தக் காட்சி உணர்த்தத் தவறியிருக்கிறது. ஒரு வாழ்க்கையைச் சாரமாக எடுத்துக்கொண்டு ஒரு நிலப் பகுதியின் பண்பாட்டை, வாழ்க்கையை சோனி லிவ் தளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் வழி வினோத் சித்தரித்துள்ளார். இந்த ஒரு வாழ்க்கையைப் பொது அனுபவமாக மாற்றுவதில் வினோத் ‘கூழாங்கல்’லில் வெற்றிபெற்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in