

1994 இல் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் அளித்த பேட்டி:
தலைமுறை இடைவெளியையும் மீறி உங்கள் படங்களில் வரும் இளம் கதாபாத்திரங்களைத் தற்கால மனப்பாங்குடன் எப்படிச் சித்தரிக்க முடிகிறது? - நானும் இளமைப் பருவத்தைக் கடந்து வந்தவன்தானே. இளமைக்கால நினைவுகள் பல வருடங்களுக்கு மனதிலிருந்து மறையாமல்தானே இருக்கும்? அது மட்டுமல்ல நான் சினிமா உலகைச் சேர்ந்தவன். எங்களுக்கு இந்த விஷயத்தில் நுண்ணறிவு அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. அதிக அனுபவம் காரணமாக முதிர்ச்சி, நவீனம் ஆகியவற்றுடன் இளமைக் காட்சிகளைக் கையாள முடியும்.
‘டூயட்’ பட விமர்சனத்தில் ஒரு பத்திரிகை ‘அண்ணனும் தம்பியும் ஒரு பெண்ணைக் காதலிப்பது என்கிற கதைக்கரு நெருடுகிறது’ என்று எழுதி இருந்தது. அதுபோன்ற சந்தர்ப்பம் அமையாது என்கிற முன்முடிவை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்? - ‘சிந்து பைரவி’ பட கிளைமாக்ஸில் தனது கணவன் சிந்துவையும் திருமணம் செய்துகொள்ள, அவனது மனைவி பைரவி சம்மதிப்பாள். ஆனாலும் அதை சிந்து மறுத்து வெளியேறுவதாக அமைத்தேன். அந்தப் படத்தில் எனக்கு உதவி இயக்குநராக இருந்த பாலகுமாரன் ‘இரு பெண்களும் ஒத்துக் கொள்ளும்போது கதாநாயகன் அந்த இருவருடனுமே மணவாழ்வை நடத்தினால் என்ன?’ என்று நிறைய விவாதித்தார். ஆனால் என்னைப் பொறுத்தவரை மனிதன் தவறலாம். ஆனால் அதற்காகத் திருமண அமைப்பும் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற உயர்ந்த விழுமியமும் சிதைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
‘டூயட்’ ஏன் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை? - ஒரு இமேஜ் உள்ள டைரக்டர் கே. பாலசந்தர் ஒரு இமேஜ் உள்ள கதாநாயகனுக்காக காம்ப்ரமைஸ் செய்தது மக்களுக்குப் பிடிக்காததுதான் காரணம். ஒரு ஆக் ஷன் ஹீரோவான பிரபுவின் அந்த இமேஜ் மாற வேண்டாம் என்பதற்காக ஆக் ஷன் காட்சிகளைக் கடைசியில் இணைத்தேன். இதெல்லாம் உன் படத்தில் கூடாது என்று மக்கள் அடித்துச் சொல்லிவிட்டார்கள். அதுவும் டூயட்டில் நான் செய்தது விலை உயர்ந்த காம்ப்ரமைஸ். பத்து லட்சம் ரூபாய் செலவழித்து கிளைமாக்ஸை எடுத்தேன். உணர்ச்சிகரமான, அடிதடி தேவைப்படாத, ஒரு கிளைமாக்ஸை ஒரு லட்சம் ரூபாயில் என்னால் எடுத்திருக்க முடியும்.
கதாநாயகன் பிரபுவாக இல்லாமல் வேறு ஒருவராக இருந்திருந்தால் கதையின் பின் பகுதியே மாறி இருக்கும். முதலில் நான் அமைத்த கதையின்படி மூத்த சகோதரனான பிரபுதான் கடைசியில் இறந்துவிடுவான். ஆனால் இந்தப் படத்தில் ‘டைரக் ஷன்’ என்கிற டைட்டிலுக்குக் கீழே வேறு எந்தப் பெயராவது இடம்பெற்றிருந்தால் இப்படம் பெரும் வெற்றி பெற்றிருக்கும். பாலசந்தரின் படம் சுமாராக இருக்கிறது என்று கருத்துப் பரவினாலே போதும், ‘சரி பிறகு வீடியோவில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று ரசிகர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால் முன்பு அப்படியல்ல. ‘அப்படி என்னென்ன தவறுகளை கேபி செய்திருக்கிறார் என்பதைப் பார்த்து விடுவோம்’ என்று தியேட்டர்களை முற்றுகையிடு வார்கள்.
’கவிதாலயா’வை மூடப்போவதாக ஒரு பேச்சு இருக்கிறதே! - 33 படங்களை எடுத்துப் பெயர் பெற்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை அவ்வளவு சுலபத்தில் மூடத் தோன்றுமா என்ன? ஒரு பேட்டியில் ‘கவிதாலயாவுக்காக எடுக்கப்பட்ட ‘ரோஜா’ படத்தைப் பார்த்து நான் நெகிழ்ந்து போனேன். என்னால்கூட இப்படி ஒரு படத்தை இயக்கி இருக்க முடியாது’ என்று கூறியிருந்தேன். சில நாட்கள் கழித்து தொலைபேசியில் ஒருவர் ‘நீங்கள் எப்படி அப்படிக் கூறலாம்? இரு கோடுகள் போன்ற ஒரு படத்தை மணிரத்னம் இயக்க முடியுமா?’ என்றார் வருத்தமாக. ‘பாமா விஜயம்’, ‘இரு கோடுகள்’, ‘மரோ சரித்ரா’ ஆகிய மூன்று காலகட்டங்களைச் சேர்ந்தவர்களும் இன்றும் எனக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அந்த குறிப்பிட்ட படத்தை அளவுகோலாக வைத்துத்தான் மற்ற படத்தை எடை போடுகிறார்கள். இப்படிப் பல வயது பிரிவினர் எனக்குத் தீவிர ரசிகர்களாக அமைந்திருப்பதுதான் என் பலம். அதேசமயத்தில் ஒரு விதத்தில் எனது பொறுப்புகளையும் பிரச்சினைகளையும் இந்த நிலை அதிகரிக்கவும் செய்கிறது.