சினிமா ரசனை 2.0 - 19: வீடுகளை வைத்து விளையாடிய இயக்குநர்
தடாலடி ‘ஜம்ப் ஸ்கேர்’களை நம்பாமல், திகில் உணர்வை இயல்பாகக் கடத்துவதில் மன்னராக விளங்கி வருபவர் மைக் ஃப்ளானகன். அவர் எடுத்த படங்கள் குறித்து, அவரைப் பற்றிய முதல் அத்தியாயத்தில் கவனித்தோம். இப்போது அவர் எடுத்த வெப் சீரீஸ்கள் பற்றி விரிவாகக் கவனிக்கலாம்.
உலகின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான ஸ்டான்லி குப்ரிக் எடுத்த மறக்க முடியாத திகில் படம் ‘தி ஷைனிங்’ (The Shining). 1980இல் வெளியான இப்படத்தில் ஒரு சிறுவன் வருவான். அவனால் சக மனிதர்களுடன் டெலிபதி போன்ற வகையில் மனதால் தொடர்பு கொள்ளமுடியும். அந்தத் திறனுக்குதான் ‘Shining ’ என்று பெயர்.
அவனுடைய தந்தை ஜேக் டாரன்ஸ், மக்கள் புழக்கம் அதிகமில்லாத கொலராடோவில் இருக்கும் ஒரு ஹோட்டலைப் பனிக்காலத்தில் பார்த்துக்கொள்ளத் தனது குடும்பத்தோடு அங்கே வருகிறார். அப்போது அங்கே என்ன நடக்கிறது என்பதே ‘தி ஷைனிங்’ திரைப்படம்.
பெரியவனாக வளர்ந்த ‘டெலிபதி’ சிறுவன்: இப்படத்தின் இரண்டாம் பாகமாக மைக் ஃப்ளானகன் 2019இல் இயக்கி வெளியிட்ட படம்தான் ‘டாக்டர் ஸ்லீப்’ (Doctor Sleep) ஷைனிங் திரைப்படத்தில் வரும் சிறுவன் இதில் பெரிதாகிவிடுவான். சிறுவயதில் ‘ஷைனிங்’ படத்தில் நடந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு குடிகாரனாக இருப்பான். அவன் வேலை செய்யும் மருத்துவமனையில் அவனது ‘ஷைனிங்’ என்கிற டெலிபதி திறனால், இறக்கும் தறுவாயில் இருக்கும் நோயாளிகளுக்கு நிம்மதி அளித்து, அவர்கள் அமைதியாக இறப்பைத் தழுவ உதவி செய்வான்.
அப்போதுதான் இந்தத் திறன் இருக்கும் நபர்களையெல்லாம் வேட்டையாடி, கொன்று, அவர்களிடம் இருக்கும் இந்த ‘ஷைனிங்’ திறனை உறிஞ்சி, அதனால் உயிர்வாழும் நாட்களை அதிகப்படுத்திக்கொள்ளும் சிலரைப் பற்றி அவனுக்குத் தெரியவரும். இந்த புதிய எதிரியை அவன் எப்படிச் சமாளிக்கிறான் என்பதே ’டாக்டர் ஸ்லீப்’ திரைப்படம்.
மலையோரம் ஒரு வீடு! - ஸ்டீஃபன் கிங்கின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்துக்கு பிறகுதான் மைக் ஃப்ளானகன் முழுவீச்சில் வெப் சீரீஸ்கள் பக்கம் குதித்தார். ‘Doctor Sleep’ படத்துக்கு முன்னர் மைக் ஃப்ளானகன் ஒரு வெப் சீரீஸ் எடுத்தார். அதுதான் அந்த வகைமையில் அவரது முதல் முயற்சியாக அமைந்த ‘The Haunting of Hill House’.
இது 1959இல் ஷிர்லி ஜாக்சன் என்கிற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்புத்தகம் ஏற்கெனவே 1963இல் ‘The Haunting’ என்கிற பெயரிலும் பின்னர் 1999இல் அதே பெயரிலும் இரண்டு முறை படமாகியிருக்கிறது. இவற்றில் 1963இல் எடுக்கப்பட்ட படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
ஆனால், மைக் ஃப்ளானகன் அந்தப்புத்தகத்திலிருந்து சில முக்கியமான கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெப் சீரீஸ் உருவாக்கியபோது கதையைமாற்றினார். ஒரிஜினல் போல் அப்படியே இல்லாவிட்டாலும் அந்த சீரீஸ் பெரும் புகழ்பெற்றது. அழுத்தமான கதை, கதாபாத்திர உறவுகளுக்கு இடையிலான உணர்வுகள் ஆகியவற்றில் அவர் திகிலை மென்மையாகக் கலந்து பார்வையாளர்களை தரமாக பயமுறுத்தினார்.
இறந்த காலம், நிகழ்காலம் ஆகிய இரண்டு காலங்களில் நடக்கும் சீரீஸ் இது. 1992இல் ஒரு குடும்பம் பழைய வீடு ஒன்றில் குடியேறச் செல்கையில் நடக்கும் அமானுஷ்யப் பிரச்சினைகள், பின்னர் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் வளர்ந்து அதே வீட்டுக்குத் தங்கள் தந்தையுடன் மறுபடி செல்வது என்கிற கதையை வைத்து இந்த சீரீஸ் எடுக்கப்பட்டிருக்கும்.
இதன் பத்து எபிசோடுகளையும் மைக் ஃப்ளானகனே இயக்கினார். பாராட்டுகளைக் குவித்த இந்த சீரீஸுக்குப் பிறகே ‘Doctor Sleep’படம் வெளியானது. இந்தப் படம் 2019இல் வந்தபின் இன்றுவரை மைக் ஃப்ளானகன் திரைப்படங்கள் பக்கமே திரும்பவில்லை. வரிசையாக வெப் சீரீஸ்களையே எடுத்துக் கொண்டிருக்கிறார்.
மீண்டும் திகில் வீடு: இந்தப் படத்துக்குப் பின்னர் மைக் ஃப்ளானகன் இயக்கிய இரண்டாவது வெப் சீரீஸ், ‘The Haunting of Bly Manor’. இது 2020இல் வெளியானது. இது, 1898இல், புகழ்பெற்ற திகில் எழுத்தாளர் ஹென்றி ஜேம்ஸ் எழுதிய ‘The Turn of the Screw’என்கிற புத்தகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. ஃப்ளானகனின் முந்தைய சீரீஸில் நடித்த பலரும் இதிலும் வேறு கதாபாத்திரங்களாக இடம்பெற்றனர்.
ஒரு மிகப்பெரிய மாளிகையில் இருக்கும் இரண்டு குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வரும் ஒரு இளம்பெண், அங்கு வந்த சில நாள்களிலேயே அந்த மாளிகையில் ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதைத் தெரிந்துகொள்கிறாள். அதன்பின் அங்கு என்ன நடக்கிறது? அமானுஷ்ய நிகழ்வுகளின் பின்னணியில் இருப்பது யார் என்பதுதான் கதைச்சுருக்கம். ஃப்ளானகனின் முதல் சீரீஸ் போலவே இதுவும் பரவலான பாராட்டுகளைப் பெற்றது.
ஒரு தீவு, ஒரு பாதிரியார், ஒரு மனிதன்: இதன்பிறகு 2021இல் மைக் ஃப்ளானகன்,‘Midnight Mass’ என்கிற சீரீஸை இயக்கினார். அதன் கதை அவரது வாழ்க்கையுடன் தொடர்புடையது என்று அவரே சொல்லியிருக்கிறார். ஒரு தீவில் இருக்கும் தனது வீட்டுக்கு நான்கு வருடச் சிறைவாசத்துக்குப் பின் விடுதலையாகி வருகிறான் ஒருவன்.
அந்தத் தீவுக்குப் புதிதாக வந்து அங்குள்ள தேவாலயத்தில் இரவுநேரப் பிரார்த்தனை நடத்தும் இளம் பாதிரியார் மீது, சிறைப் பறவையாக இருந்த அந்த மனிதனுக்கு சந்தேகம் வருகிறது. அந்தப் பாதிரியாரோ அருள் தவழும் முகத்துடன் பிறரை வசீகரிக்கக்கூடிய வகையில் இருக்கிறார். அப்போது அந்தத் தீவில் என்ன நடக்கிறது, சிறையிலிருந்து வந்திருக்கும் மனிதன் என்ன ஆனான் என்பதே கதை.
இத்தொடரின் ஏழு எபிசோடுகளையும் மைக் ஃப்ளானகனே இயக்கினார். இது முற்றிலும் அவரே எழுதிய கதை. எந்தப் புத்தகத்திலிருந்தும் எடுக்கப்படவில்லை. சிறு வயதிலிருந்து மைக் ஃப்ளானகன் கத்தோலிக்க மதப் பாரம்பரியத்தில் எப்படி வளர்க்கப்பட்டார் என்பதிலிருந்தும், பின்னர் எதனால் அவர் கடவுள் மறுப்பாளராக மாறினார் என்பதைப் பற்றியும் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாக வைத்தே மைக் ஃப்ளானகன் இத்தொடருக்கான கதையை எழுதியதாகச் சொல்லியிருக்கிறார்.
இந்த ‘மிட்நைட் மாஸ்’ என்ன ஆனது, அதன் பின் அவர் எடுத்த வெப் சீரீஸ்கள் என்னென்ன என்பனவற்றை ஏற்கெனவே மைக் ஃப்ளானகன் பற்றிய இரண்டாவது கட்டுரையில் பார்த்தோம். மைக் ஃப்ளானகன் பற்றிய கடந்த 4 அத்தியாயங்களில் அவரது படங்கள் சீரீஸ்கள் பற்றி முழுவதும் பார்த்து விட்டோம். இனி வரும் வாரத்திலிருந்து வேறொரு இயக்குநர், வேறு பல அட்டகாசமான வெப் சீரீஸ்களை கவனிப்போம்.
