

ஆண்டுக்கு 350 படங்களுக்குக் குறையாமல் உற்பத்தி செய்யும் பாலிவுட்டில் மசாலா குப்பைகளே அதிகமாக மலிந்திருக்கும். அவ்வப்போது பிராயச்சித்தம் செய்வதுபோல் சில படங்களையும் கொடுக்கும். அப்படியொரு படம்தான் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘த்ரீ ஆஃப் அஸ்’ என்கிற இந்திப் படம்.
தொடக்க நிலையில் இருக்கும் மறதிக் குறைபாட்டு நோயுடன் போராடுகிறார் நடுத்தர வயதுப் பெண்ணான ஷைலஜா தேசாய். அவர் தனது கணவரின் துணையுடன், தனது பால்யமும் பதின்மமும் கழிந்த கடற்கரை கிராமத்துக்குப் பயணிக்கிறார். பரபரப்பான மும்பை வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, அங்கே வரும் அவருக்கு, காலத்தில் பின்னோக்கிய நினைவுகள் அலையடிக்கின்றன. இழந்த காதல், தொலைந்த பால்யம், குடும்ப உறவு, கேட்க வேண்டிய மன்னிப்பு என அந்த ஊரில் ஷைலஜாவின் பழைய சுவடுகள் எஞ்சியிருக்கின்றன.
தனது நோய்மையால் அவற்றை மறப்பதற்கு முன், தன் வாழ்வைச் சரி செய்யும் முயற்சியாக அந்த ஊருக்கு வந்து அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் கதை. இதை ஒரு திரைக் கவிதையாகச் செதுக்கியிருக்கிறார் அவினாஷ் அருண். கடந்த 2014 இல் தேசிய விருது பெற்ற ‘கில்லா’ என்கிற மராத்தியத் திரைப்படத்தை எழுதி, இயக்கியவர். ஒளிப்பதிவும் அவர்தான்.
நடிகர்கள் தேர்வும் கதாபாத்திரங்களை நம் மனதுக்கு நெருக்கமாக உணரவைக்கும் நடிகர்களின் நேர்த்தி குறையாத நடிப்பும் இந்தப் படத்தை உணர்வுகளால் நிறைத்துவிடுகின்றன. ஷைலஜா தேசாயாக நடித்திருக்கும் ஷெபாலி ஷா, பிரதீப் காமத்தாக வரும் ஜெய்தீப் ஆலாவத், ஷைலஜாவின் கணவராக வரும் ஸ்வானந்த் கிர்கிரே ஆகிய மூன்று பேருடன் படத்தில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருப் பவர்களும்கூட வாழ்ந்திருக்கிறார்கள்.
விரலிடுக்கில் வழியும் கடற்கரை மணல் நினைவுகளோடு எல்லாவற்றையும் பார்வையால் விழுங்கியபடியே ஷெபாலி தனது அகன்ற கண்களாலேயே நடித்திருப்பது சிறப்பு. ஒரு பெண் கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தியுள்ள படத்தில் கையறு நிலையில் சங்கடமான புன்ன கைகளும் தாழ்ந்தே இருக்கும் பார்வையுமாகப் பிரமாதப்படுத்தியிருக்கிறார் ஜெய்தீப் ஆலாவத் . திரைமொழியின் உச்சமாக இரண்டு காட்சிகளைக் குறிப்பிடலாம்.
தான் பயின்ற பரதநாட்டியப் பள்ளிக்குச் செல்லும் ஷைலஜா, அங்கே, மாணவிகள் நடனமாடும் போது தன்னிலை மறந்து, தாம் நாட்டியம் கற்ற நாள்கள் நினைவுக்கு வந்து அவர்களுடன் சேர்ந்து ஆடும் காட்சி. மற்றொன்று, இறுதிக்கட்டத்தில் ஒரு பெரிய ரங்க ராட்டினத்தின் உச்சியில் உறைந்த சட்டகத்தில் மன்னிப்புக் கேட்டு அழுது முடிக்கும் காட்சி.
ஒவ்வொரு சட்டகமும் ஓர் ஓவியம் போலவே அமைத்த வகையில், பாலு மகேந்திராவை எல்லா வகையிலும் நினைவு படுத்துகிறார் அவர் படித்த அதே புனே கல்லூரியில் ஒளிப்பதிவைப் படித்தவர் இந்த மராத்திய இயக்குநர் அவினாஷ் அருண். எந்தவித வணிகக் கட்டாயத்துக்கும் உள்ளாகாமல் தன் போக்கில் நிதானமாக ஒரு தியானம்போல் கதையை நகர்த்தியிருக்கிறார். குறிப்பாக ஒரு காட்சி முடிந்த பின்னும் அதன் தீவிரம் உணரப்பட அக்காட்சியின் சட்டக நேரத்தை நீட்டித்திருப்பது தனி அழகு.
வாழ்வென்பது அவசரமும் எச்சரிக்கையுமாகக் கடக்க வேண்டிய காட்டாறு ஒன்றின் மீது கட்டப்பட்டுள்ள கயிற்றுப் பாலமில்லை, அது சலலத்துப் பளிங்குபோல் தெளிவாக ஓடும் காட்டு நீரோடை ஒன்றில் பயமின்றிக் கால் வைத்து நடந்து செல்வதுபோல் நிதானமானது என்பதை நமக்குச் சொல்கிறது இப்படம்.