

ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட மாஸ் கதாநாயகர்களின் படங்கள் தீபாவளி வெளியீடாகத் திரையரங்குகளை முற்றுகையிட்டு நீண்ட காலமாகிறது. தற்போது வசூல் களத்தில் அடுத்தக் கட்ட அந்தஸ்தில் இருந்து வரும் கதாநாயகர்களுக்கான களமாக தீபாவளி ரிலீஸ் மாறிவிட்டது. இன்று கார்த்தி, ராகவா லாரன்ஸ், விக்ரம் பிரபு ஆகிய மூன்று மாஸ் ஹீரோ படங்கள் வெளியாகின்றன.
இதுவரை சமூகப் பிரச்சினைகள், மக்களுக்கான அரசியல் என்று பிரபலமான நடிகர்களைக் கொண்டு, கொஞ்சம் சீரியஸானப் படங்களை எடுத்து வந்த ராஜு முருகன், கார்த்தி நடிப்பில் முதல் முறையாக முழு நீள கமர்ஷியல் பொழுதுபோக்குப் படம் எடுத்திருக்கிறார். எள்ளலும் துள்ளலும் மிக்க ‘கேரண்டி பிராண்ட்’ கார்த்தியை இக்கூட்டணி உருவாக்கியிருக்கும் ‘ஜப்பான்’ படத்தில் பார்க்கலாம்.
சரியாக 9 வருடங்களுக்கு முன்பு கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜிகர்தண்டா’ தற்போது கல்ட் கிளாசிக்ஸ் என்று ரசிகர்கள் கூறும் அளவுக்குத் தற்போதும் விரும்பிப் பார்க்கப்படும் படமாக இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இல்லாமல், அதேநேரம் ‘அப்படம் கொடுத்த திரை அனுபவத்தை இரட்டிப்பாகத் தருகிறோம்’ என்கிற இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜின் உறுதிமொழியுடன் வெளியாகிறது ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.
1975 இல் நடக்கும் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா, சத்யஜித் ராயின் ஆசீர்வாதத்துடன் படமெடுக்க வரும் புதுமுக இயக்குநராகவும் அவரை தன்னை வைத்து ஆக்ஷன் படம் எடுக்க வற்புறுத்தும் மதுரை கேங்ஸ்டராக ராகவா லாரன்ஸும் நடித்திருக் கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ‘பான் இந்தியன்’ படமாக வெளியாவதால், அந்த மொழிகளுக்குரிய நடிகர்களையும் படத்தில் இணைத்திருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ். குறிப்பாக மலையாள ரசிகர்களைக் கவர, ‘கிரேட் இண்டியன் கிச்சன்’, ‘சித்தா’ படங்களில் நடிப்புக்காகப் பேசப்பட்ட நிமிஷா சஜயன் இதில் முதன்மைப் பெண் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.
‘டாணாக்காரன்’, ‘இறுகப்பற்று’ படங்களில் விக்ரம் பிரபுவுக்கு ‘நல்ல நடிகர்’ என்று பெயர் கிடைத்திருந்தாலும் அவை இரண்டுமே ஓடிடி தளத்துக்கான படங்கள் என்றாகிவிட்டன. ஆக்ஷன் கதைக் களத்தில் அதிரடி கிளப்பும் அவர், தனது வசூல் களத்தை நிலைநிறுத்திகொள்ள, கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘டகரு’ படத்தின் தமிழ் மறு ஆக்கமாக இ.கார்த்திக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ரைடு’ படத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
ஆக இன்று வெளியாகும் இந்த மூன்று படங்களும் ரசிகர்களுக்கு ஆக்ஷன் தீபாவளியைப் பரிசளித்திருக்கின்றன. இவற்றுக்கு நடுவே, தீபாவளியின் சுகமான எண்ணெய்க் குளியல்போல் வெளியாகிறது, மறைந்த ‘பூ’ ராமு, காளி வெங்கட் உள்ளிட்ட பலரது நடிப்பில், ரா.வெங்கட் இயக்கியிருக்கும் ‘கிடா’.
தீபாவளிப் பண்டிகையையே கதைக் களமாக வைத்து ஒரு கிராமத்துத் தாத்தா, அவருடைய 12 வயது பேரன், அவன் தனது தம்பியைப்போல் வளர்க்கும் ஓர் ஆட்டுக் கிடா இடையிலான 48 மணி நேர உணர்ச்சிப் போராட்டத்தை முன் வைக்கும் இப்படம், தீபாவளி அன்று மிகப் பொருத்தமாக வெளியாகிறது. பல சர்வதேசப் பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுகளைப் பெற்றிருக்கும் இப்படம், ரசிகர்கள் அரவணைத்துக்கொள்ள வேண்டிய படைப்பு.
மகனோடு போட்டி! - தேசிய விருதுபெற்ற எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி, நடித்துள்ள திரைப்படம் ‘கட்டில்’. இதற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அதை முன்னிட்டு, படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் கவிஞர் வைரமுத்து, மதன் கார்க்கி, இயக்குநர் ஜெயம் ராஜா, கே.எஸ்.ரவிகுமார், ஒளிப்பதிவாளர் ஒய்டு ஆங்கிள் ரவிரங்கரன், நடன இயக்குநர் மெட்டி ஒலி சாந்தி, எழுத்தாளர் தஞ்சை செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் வைரமுத்து பேசும்போது: “ கணேஷ்பாபு தமிழ் சினிமாவில் கால் நூற்றாண்டும் மேலாகப் பயணித்து வருகிறார். அவர் என் அன்புக்குரியவர். கட்டில் மாதிரியான தரமான கதைப் படங்கள் ஓடினால்தான் தமிழ் சினிமாவுக்கு நல்லது.பெரிய படங்கள் திட்டமிட்டுப் பார்க்க வைக்கப்படுகின்றன.
துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் கணேஷ்பாபு புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறார். கண்ணதாசன், வாலி இருந்தபோது அவர்களோடு களத்தில் நின்றேன். அவர்களை ஜெயிக்க முடியாது எனத் தெரியும், ஆனால் அவர்களோடு நானும் இருக்கிறேன் என நின்றேன், அது மட்டும் போதுமா? இப்போது நான் மதன்கார்க்கியோடு போட்டிப்போடுகிறேன். அவரை ஆஸ்திரேலியாவிற்குப் படிக்க அனுப்பினேன், விஞ்ஞானம் படித்துவிட்டு வந்து பேராசிரியர் ஆனார்.
ஆனால் எனக்குப் போட்டியாக வருவார் என நினைக்கவில்லை. இந்தப் படத்தில் அருமையான வரிகளைத் தந்துள்ளார். கணேஷ்பாபு நினைவுகளின் வலியை இப்படம் மூலம் பதிவுசெய்துள்ளார். அவர் இயக்குநராகவும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.