

கு
ழந்தைகளுக்கும், தமக்குள் இருக்கும் குழந்தைமையை போற்றும் பெரியவர்களுக்காகவும் வெளியாகும் படங்களின் வரிசையில் சேர வருகிறது ‘பீட்டர் ராபிட்’.
116 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து எழுத்தாளர் பீட்ரிக்ஸ் பாட்டர் படைத்த குழந்தைகளுக்கான கற்பனை பாத்திரம் ‘பீட்டர் ராபிட்’. ஒரு குறும்பு முயலை நாயகனாகக் கொண்ட கதைகளின் வரிசையாக இவர் படைத்த புத்தகங்கள் தலைமுறைகள் தாண்டி, அனைத்து வயதினரையும் வசீகரித்து வருகின்றன. சகோதரிகள் மற்றும் தாயாருடன் வசிக்கும் பீட்டர் என்ற முயல், தனது நண்பர்களான பல்வேறு விலங்குகளுடன் சேர்ந்து அடிக்கும் கொட்டம் மற்றும் சாகசங்கள் இந்தக் கதைகளில் விரவியிருக்கும். பல மொழிகளில் படக்கதைகள், தொலைக்காட்சி தொடர்களாக இவை வெளியாகி இருக்கின்றன. ஆனால் வால்ட் டிஸ்னி பலமுறை கோரியும் தனது வாழ்நாளில் பீட்ரிக்ஸ் பாட்டர் தனது பீட்டர் ராபிட்டை திரைப்படமாக்க அனுமதிக்கவில்லை.
தற்போது பீட்ரிக்ஸ் பாட்டர் கதைகளின் அடிப்படையிலான திரைக்கதை என்ற அறிவிப்புடன் சோனி நிறுவன வெளியீடாக பிப்ரவரி 9 அன்று திரைக்கு வருகிறது ‘பீட்டர் ராபிட்’ திரைப்படம். 3டி அனிமேஷன் மற்றும் லைவ் ஆக்ஷன் திரைப்படமாக 3டியில் இதனை உருவாக்கி உள்ளனர். திரைக்கதைத் தயாரிப்பில் பங்கேற்றுப் படத்தை இயக்கி உள்ளார் வில் க்ளக் (Will Gluk). குறும்பு முயலுக்கு அமெரிக்க நடிகரான ஜேம்ஸ் கார்டன் குரல் கொடுத்துள்ளார். அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் டோனல் க்ளீசன் (Domhnall Gleeson), ரோஸ் பர்ன் ஆகிய இரு நடிகர்கள் நடித்துள்ளனர்.
குறும்பு முயலுக்கும் அதன் வழக்கமான வில்லன் ‘மெக்கிரகர்’ என்ற நபருக்கும், பக்கத்து வீட்டு விலங்குகள் நேசரான இளம் பெண் ஒருவரின் அன்பைப் பெறுவதில் எழும் கலாட்டாவும் மோதலுமே பீட்டர் ராபிட் படத்தின் கதை.
திரைப்படமாக்கும் முயற்சியில் தாங்கள் வாசித்து ரசித்த குறும்பு முயல் கதாபாத்திரத்தை சிதைத்துவிட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் பீட்டர் ராபிட்டின் மூத்த ரசிகர்களால் இத்திரைப்படம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் பீட்ரிக்ஸ் பாட்டரின் படைப்புகளை அதிகம் அறிந்திராதவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.