சினிமா ரசனை 2.0 - 18: மலிவான பயமுறுத்தல் எடுபடாது!

சினிமா ரசனை 2.0 - 18: மலிவான பயமுறுத்தல் எடுபடாது!
Updated on
3 min read

சில அத்தியாயங்களுக்கு முன்னர், திகில் படங்கள், வெப் சீரீஸ்கள் எழுதி இயக்குவதில் தற்காலத்தில் மிகவும் புகழ்பெற்றுள்ள மைக் ஃப்ளானகன் (Mike Flanagan) பற்றி விரிவாகப் பார்த்தோம். அவரது புதிய படைப்பான ‘The Fall of the House of Usher’ வரப்போகிறது என்றும் பார்த்தோம். அந்த வெப் சீரீஸ் நெட்ஃபிளிக்ஸில் வெளிவந்துவிட்டது.

அவரது வழக்கப்படி ஒரே சீசனுக்குள் அழுத்தமான ஒரு கதை அடங்கிய வெப் சீரீஸாகவே வந்திருக்கிறது. பெரும் புகழ்பெற்ற திகில் எழுத்தாளர் எட்கர் அலன் போவின் கதைகளை வைத்துக்கொண்டுதான் மைக் ஃப்ளானகன் இந்த சீரீஸை எடுத்திருக்கிறார். அவரது படைப்புகளில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இந்த சீரீஸ் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

தொடர்பற்ற 8 கதைகளுக்குள் இணைப்பு: இந்த சீரீஸின் புதுமை என்ன என்றால், ‘The Fall of the House of Usher’ என்கிற தலைப்பில் எட்கர் அலன் போ எழுதிய கதை ஒன்று உண்டு. அதிலிருந்து மிக முக்கியமான கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறார். எட்கர் அலன் போவின் பெரும்பாலான படைப்புகள் புகழ்பெற்றவை. அவற்றில் 8 கதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் ஒவ்வொரு கதைக்கருவையும் ஒரு எபிசோடில் வைத்து, அவற்றில் வரும் கதாபாத்திரங்களையே இந்த சீரீஸ் முழுக்கவும் நடமாட வைத்திருக்கிறார் மைக் ஃப்ளானகன்.

இப்படி 8 படைப்புகளை ஒன்றோடொன்று கலந்தும் பிரிந்தும் இருக்கும்படிச் செய்வது மிகவும் கடினம். அதிலும் எட்கர் அலன் போ எழுதிய இந்த எட்டுமே ஒன்றோடொன்று தொடர்பற்றவை. ஆனால், மைக் ஃப்ளானகன் கவனமாக அவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்புப்படுத்தியே இந்த முழு சீரீசையும் எழுதியிருப்பதில்தான் அவரது திறமை வெளிப்பட்டுள்ளது.

அதிலும் அந்த 8 படைப்புகளும் அப்படியே முழுதாக எட்கர் அலன் போ எழுதியதுபோல இந்த சீரீஸில் வரவில்லை. அவற்றை எடுத்துக்கொண்டு அவை எப்படிச் சொல்லப்பட்டால் தற்காலத்தில் நன்றாக இருக்கும் என்பதை அட்டகாசமாக எழுதி, எடுத்திருக்கிறார் மைக் ஃப்ளானகன். இதுதான் அவரது புத்திசாலித்தனம்.

வாரிசுகளின் மரணம்: அமெரிக்காவின் ஒரு மிகப்பெரிய மருந்து நிறுவனத்தின் தலைவர் ரோட்ரிக் அஷர் (Roderick Usher). அவருக்கு ஒரு தங்கை உண்டு. அவள் பெயர் மேடலீன் அஷர். அறுபது வயதைத் தொட்டு நிற்கும் ரோட்ரிக் அஷருக்கு ஆறு குழந்தைகள். மூன்று மகன்கள், மூன்று மகள்கள். திடீரென்று ஒருவர்பின் ஒருவராக இந்த ஆறு வாரிசுகளும் இறக்கும்போது அதை ரோட்ரிக் அஷர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை. அந்த ஆறு வாரிசுகளும் சாதாரணமாக இறப்பதில்லை.

ஒவ்வொருவருமே கொடூரமானமுறையில் இறந்து கிடக்கிறார்கள். எதுவும் இயல்பான மரணங்கள் இல்லை என்று பார்க்கும்போதே தெரிகிறது. ஆனாலும் அஷர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. எதையோ நினைத்துப் பயப்படுகிறார். இருந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழ்கிறார். இவையெல்லாம் ஏன் நடக்கின்றன என்பதே கதை.

துப்பறியும் புலி: எட்கர் அலன் போவின் கதைகளில்தான் உலகின் முதல் துப்பறிவாளர் அறிமுகமானார். அவரது பெயர் அகஸ்ட் டுபா (Auguste Dupin - டுபின் என்பது ஃப்ரெஞ்சில் டுபா என்று வரும்). அந்தத் துப்பறிவாளர் இந்த சீரீஸிலும் வருகிறார். கதையின் தொடக்கத்திலிருந்தே ரோட்ரிக் அஷரின் மருந்து நிறுவனத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பது டுபாவுக்குத் தெரிகிறது.

உண்மையில் பல வருடங்களுக்கு முன்னர், அந்த நிறுவனம் வேறு ஒரு நபரிடம் இருந்தபோது அதில் ரோட்ரிக் அஷர் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போதே டுபா அவரைத் தொடர்புகொண்டு அந்த நிறுவனத்தின் பிரச்சினைகள் பற்றிக் கேட்டிருப்பார். எனவே ரோட்ரிக் அஷரின் நிறுவனத்தின் மீது அகஸ்ட் டுபாவுக்கு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும்..

இந்த அகஸ்ட் டுபாவை முதல் எபிசோடின் தொடக்கத்தில் ரோட்ரிக் அஷர் தனது பழைய வீட்டுக்கு அழைப்பார். அங்கே டுபாவிடம் தனது வாழ்வில் நடந்த அத்தனை நிகழ்வுகள், தனது வாரிசுகள் வரிசையாக இறந்தது பற்றியும் விரிவாகப் பேசுவார். இதுதான் இந்த சீரீஸின் கதை எழுதப்பட்டிருக்கும் வடிவம்.

சிறுகச் சிறுக ரோட்ரிக் அஷர் பற்றி நாம் அறிகிறோம். ரோட்ரிக் அஷரின் கதையில் பல மர்மங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகத் தெரிந்துகொள்கிறோம். இறுதியான மர்மம், அவரது வாரிசுகள் எப்படி இறந்தார்கள் என்பது. அதையும் தெரிந்துகொண்டபின் நமக்கும் டுபாவுக்கும் அதிர்ச்சி ஏற்படுகிறது. இதன் பின் என்ன நடந்தது என்பதை சீரீஸில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த சீரீஸிலும் தனது வழக்கமான பாணியின்படி மிக அழுத்தமான கதையை வைக்க மைக் ஃப்ளானகன் தவறவில்லை. உண்மையில் எங்குமே அலுக்காமல் செல்லக் கூடியத் திரைக்கதையை இந்த சீரீஸில் எழுதியிருக்கிறார்.

அதேசமயம் அவர் ஒரு திகில் மன்னர் என்பதால் நம்மைப் பயமுறுத்தவும் தவறவில்லை. உலகின் முதல் திகில் மன்னர் என்று இன்றளவும் கொண்டாடப்பட்டு வரும் எட்கர் அலன் போவின் கதைகளை எடுத்தாண்டு மைக் ஃப்ளானகன் இந்த சீரீஸை எடுத்திருக்கும்போது திகிலுக்கு உத்தரவாதம் இல்லாமல் இருக்குமா? ஆனால், நாம் ஏற்கெனவே பார்த்தபடி, பக்.. பக்.. இதயம் துடிக்க, திடீரென்று ஒரு ஷாட்டில் நம்மை பயமுறுத்தும் மலிவான ‘Jump scare’ உத்தியை ஊறுகாய்க்குக்கூட மைக் ஃப்ளானகன் கையாளமாட்டார். அது அசலான திகிலை விரும்பும் பார்வையாளர்களிடம் எடுபடாது! எனில் அவரது ‘The Shining’ போல், கதையோடு செல்லக்கூடிய திகில் விஷயங் களையே சொல்வார். அப்படித்தான் இந்த சீரீஸும் உள்ளது.

அண்ணனை இயக்கும் தங்கை: இந்த சீரீசில் ஒரு பாடமும் உள்ளது. ஒரு மனிதன் எவ்வளவு தூரம்தான் தனக்கான விஷயங்களைத் தேடி வாழ்க்கையில் செல்வான் அல்லது செல்லவேண்டும் என்பதே அது. ரோட்ரிக் அஷரின் வாழ்க்கையில் சிறுவயதிலேயே ஒரு கொடூரம் நடந்துவிடுவதால் அவர் வாழ்க்கையில் மேலே மேலே செல்லவேண்டும் என்பதையே மனதில் பதியவைத்துக்கொள்கிறார்.

அதில் அவருக்குத் தடைகள் நேரும்போதெல்லாம் அவரது தங்கை மேடலீன் அவருக்குப் பக்கபலமாக நின்று எதை வேண்டுமானாலும் சாதிக்கக்கூடிய பலத்தை வழங்குகிறாள். உண்மையில் ரோட்ரிக் அஷரை விடவும் மேடலீன்தான் அவர் மூலமாக எத்தனையோ வேலைகளைச் செய்கிறாள்.

மரணம் என்பது இந்த சீரீஸில் ஒரு குறியீடாகக் காட்டப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் நெட்ஃபிளிக்ஸில் ‘Sandman’ என்கிற சீரீஸ் வெளியானது. அதில் ஒரு எபிசோடில் மரணதேவதை பூமிக்கு வந்து, இறக்கப்போகும் மனிதர்களுடன் இன்னொரு மனிதப் பிறவியாக உரையாடுவாள். அப்போது அவர்களின் லட்சியங்கள் அத்தனையையும் அவர்கள் இவளிடம் சொல்வார்கள். ஆனால், சொன்னதுமே எதிர்பாராமல் இறப்பார்கள்.

அவர்களின் ஆன்மாக்களை மரண தேவதை அதேபோல் சகஜமாக உரையாடிக்கொண்டு கூட்டிச்செல்வதுபோல அந்த சீரீஸின் ஒரு எபிசோட் இருக்கும். மரணம் என்பது குறியீடு என்பதற்கு அந்த எபிசோடு ஓர் உதாரணம். அதற்கும் இந்த சீரீஸுக்கும் சில தொடர்புகள் உண்டு. இன்னொரு உதாரணமாக ‘தும்பாட்’ (Tumbbad) சீரீஸையும் சொல்லலாம்.

இவற்றுக் கெல்லாம் ஒரு தொடர்பு உண்டு. சந்தேகமே இல்லாமல் இந்த சீரீஸ் மைக் ஃப்ளானகனின் சிறந்த சீரீஸ்களில் ஒன்று. கடந்த இரண்டு சீரீஸ்களாகச் சற்றே துவண்டிருந்த மைக் ஃப்ளானகன் இதில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in