Last Updated : 19 Jan, 2018 10:44 AM

 

Published : 19 Jan 2018 10:44 AM
Last Updated : 19 Jan 2018 10:44 AM

தரணி ஆளும் கணினி இசை 15: மனத்திரைக்கு உயிரூட்டிய இசை

இசையமைப்பது மட்டும்தான் முன்பு இசையமைப்பாளரின் படைப்புப் பணி. மெட்டுப்போட்டு, இசைக்கோவையை உருவாக்கி, பாடகரைத் தேர்வு செய்து பாடவைப்பது மட்டும்தான் அவரது வேலையாக இருந்தது. ஒலிப்பதிவு, ஒலிக்கலவை உள்ளிட்ட வேலைகளைச் செய்ய ‘சவுண்ட் இன்ஜினீயர்’ இருந்தார். ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்து கணினி உள்ளே நுழைந்த பிறகு இசையமைப்பாளரே ‘சவுண்ட் இன்ஜினீயர்’ ஆக மாறிவிட்டார்.

இது ஒருவகையில் மேம்பட்ட இசையைத் தர உதவியிருக்கிறது. முன்பெல்லாம் ஒலிப்பொறியாளர் அருகில் இசையமைப்பாளர் அமர்ந்துகொண்டு ‘வயலின் இசையை இப்படி மாற்றி வையுங்கள்’ என்று கூறினால், அதை ஒலிப்பொறியாளர் எவ்வளவு புரிந்து உள்வாங்கிக்கொண்டாரோ அந்த அளவுதான் அவரால் திருத்தம் செய்ய முடிந்தது.

ஆனால், இசையமைப்பாளரே ஒலிப்பொறியாளர் ஆனபிறகு, தனது தொழில்நுட்பத் திறமையைக் கலைநுட்பமாக மாற்றத் தொடங்கினார். வயலினின் குரல், கதாபாத்திரத்தின் குரலாக ஒலிக்க அது எந்த அளவு இருக்க வேண்டும்; ‘வயலினே வருந்தாதே’ எனத் தன் குரலை ஒடுக்கிக்கொண்டு தேவையான அளவுக்கு மட்டுமே கிட்டார் இசைக்கிறதா; ‘மாற்றம் இல்லாமல் வாழ்க்கை இல்லை’ என்று இந்த இரு வாத்தியங்களையும் தோளில் தொட்டு, தபலா தட்டிக்கொடுக்கிற த்வணி தாளத்தில் ஒலிக்கிறதா என்று தாம் விரும்பும் ஒலி நேர்த்தியை 100 சதவீதம் கொண்டுவர முடிகிறது. இப்படி இசையமைப்பாளர், ஒலிப்பொறியாளர் ஆகிய இரண்டு பணிகளையும் முதலில் ஒருவரே கையிலெடுத்தார் என்றால் அவர் ஏ.ஆர்.ரஹ்மான்தான்.

ஒலிப்பொறியாளராக ரஹ்மான் தன்னை மேம்படுத்திக்கொண்டிருந்தபோதும் ஸ்ரீதர் போன்ற சிறந்த ஒலிக் கலைஞரைத் தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டார். அவரது மேதமைக்குக் களம் அமைத்துக்கொடுத்தார். சவுண்ட் டிசைன், சவுண்ட் எஃபெக்ட்ஸ், மிக்ஸிங், மாஸ்டரிங் என எல்லாவற்றிலும் கிங் ஆக இருந்தவர் எச்.ஸ்ரீதர். அவர் எல்லா முன்னணி இசையமைப்பாளர்களுக்கும் பணிபுரிந்திருக்கிறார்.

மிகப் பெரிய படங்களுக்குத் தமிழில் அதிகமாக மாஸ்டரிங் செய்தவர் அவர்தான். திரையிசையில் ‘சவுண்ட்’ பற்றிப் பேசினால் ஸ்ரீதரைத் தவிர்க்க முடியாது. அவர் பணியாற்றும் ஒவ்வொரு படத்திலும் மிக அதிக ஈடுபாட்டைக் காட்டியவர். இசையமைப்பாளரின் படைப்பாற்றலுடன் சரியான புள்ளியில் இணைந்துகொள்ளும் வல்லமை அவரிடம் இருந்தது.

ஒருநாளின் 24 மணி நேரத்தில் 23 மணி நேரம் வேலைசெய்துகொண்டே இருப்பார். அதுதான் அவரது ஆயுளை எடுத்துக்கொண்டது என்று அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். ரஹ்மானும் ஸ்ரீதரும் மிக நெருங்கிய நண்பர்கள். சவுண்ட் பற்றி எதுவென்றாலும் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். தொழில் ரகசியங்களைப் பொத்திப் பொத்தி வைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத கலைஞர்.

ஒலியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இவரிடம்தான் கற்றுக்கொண்டேன். அப்படிப்பட்ட ஸ்ரீதர் சாருடன் நானும் இணைந்து பணியாற்றக் காரணமாக இருந்தவர் ‘இசைப்புயல்’. ஏ.ஆர்.ரஹ்மான். அவரிடம் உதவியாளராகச் சேர்ந்திருக்காவிட்டால் ஸ்ரீதரை நான் சந்தித்திருக்கவே மாட்டேன். இந்த இடத்தில் ரஹ்மானிடம் நான் எப்படி இணைந்தேன் என்ற கதையை உங்களுக்குப் பகிர விரும்புகிறேன்.

ஸ்டீரியோ நினைவுகள்

எனக்குச் சொந்த ஊர் சேலம். என் தந்தை கலெக்ட்ராக இருந்தவர். சிறந்த இசை ரசிகர். ஒரு பாடலில் இடம்பெற்றிருக்கும் ஒலிகளையும் இசைக்கோவைகளையும் தனித்தனியாகக் குறிப்பிட்டு ரசிப்பார். ஸ்டீரியோ டேப் ரிக்கார்டர் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதை வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களிடம் கூறி தருவித்தவர். அடுத்து நாலடி உயரம் கொண்ட பெரிய அளவிலான ஸ்டீரியோபோனிக் ஸ்பீக்கர்களையும் காஸ்மிக் என்ற அனலாக் ஆம்பிளிபயர் கருவியையும் வெளிநாட்டிலிருந்து வரவழைத்தார். அதில் கிராமபோன் தட்டு, கேசட் இரண்டையுமே பிளே செய்யலாம். அப்போது நான் கல்லூரியில் முதலாண்டு படித்துக்கொண்டிருந்தேன்.

அந்தக் கருவியில் பாடல்களைப் போட்டதும் இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்களிலும் ஒலிகள் பிரிந்து ஒலிக்கும். ஆண் பாடகரின் குரல் ஒரு ஸ்பீக்கரிலும் பெண் பாடகரின் குரல் ஒரு ஸ்பீக்கரிலும் கேட்கும். மாலை நேரங்களில் அண்ணன் ஷாஜஹான் அதில் பாடல்களைப் போடும்போதெல்லாம் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் எனப் பாடலை இந்த ஸ்பீக்கரில் கேட்பதற்காகவே எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். இன்று இசையைக் கேட்பதில் எவ்வளவோ முன்னேறிவிட்டாலும் அன்று அந்த ஸ்பீக்கர்களில் கேட்டது பிரம்மாண்டமாக இருந்தது. நான் அந்த ஸ்பீக்கர்களின் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டு இன்னும் நெருக்கமாகக் கேட்டுக்கொண்டிருப்பேன்.

மனத்திரையில் காட்சிகள்

அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘ரோஜா’ படத்தின் இசை வெளியாகியிருந்தது. அதன் கேசட்டை அண்ணன் வாங்கி வந்திருந்தார். அதை முதன்முதலாக அதில் போட்டு பிளே செய்தபோது இசையொலிகள் அறைமுழுவதும் தெறிந்துப் பரவின. நான் வியந்துபோனேன். அண்ணன் வேறொரு கேசட்டை எடுத்துப் போட்டுப்பார்த்தார். ஏற்கெனவே எப்படி ஒலித்ததோ அப்படித்தான் அது ஒலித்தது.

மீண்டும் ‘ரோஜா’ படத்தின் கேசட்டை பிளே செய்தார். ‘ஒரு வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’ என்ற வரிகள் தொடங்குவதற்கு முன் ஒலித்த தொடக்க இசை, அதன் காட்சிகளைத் திரையில் காணும் முன்பே எங்கோ ஒரு பனிமலையில் இருந்தபடி நாயகனும் நாயகியும் பாடுவதுபோன்ற காட்சிக் கற்பனையை என் மனத்திரையில் அந்த இசை ஓட்டிக் காட்டியது.

19chrcj_Tajnoor

அண்ணன் வேலைக்குச் சென்ற சென்றபிறகு, ‘ரோஜா’ படத்தின் பாடல்களைத் திரும்பத் திரும்ப ஒலிக்கவிட்டுக் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒலிகளை இப்படிக் கோக்க முடியுமா, குரல்களை மலைமுகடுகளில் ஒலிப்பதுபோல் செய்ய முடியுமா, இவ்வளவு சவுண்ட் குவாலிட்டி கொடுக்க முடியுமா என்று வியந்தேன். ஏ.ஆர்.ரஹ்மான் யாரென்று தெரிந்துகொள்ளத் தொடங்கினேன். அதன் பிறகு ‘காதலன்’ படத்தில் இடம்பெற்ற ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’ பாடல் வெளியான பிறகு ரஹ்மானின் இசை மீது பெரும் ஆவல் உருவாகிவிட்டது.

பிறகு, கல்லூரி முடித்துவிட்டு சென்னை வந்து இசை தந்த உந்துதலில் ‘மல்டி மீடியா’ படித்து முடித்தேன். டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டிருந்த 90-களில் மல்டி மீடியா படிப்பு அறிமுகமாகியிருந்தது. அதைப் படித்து முடித்ததுமே சென்னையில் வேலை கிடைத்துவிட்டது. வேலை நேரம் முடிந்து அறைக்குத் திரும்பிவிட்டால் இசையைக் கேட்பதுதான் ஒரே பொழுதுபோக்கு.

அந்த நேரத்தில் ‘மே மாதம்’ திரைப்படம் வெளியாகி ‘மார்கழிப் பூவே’ பாடல் ஹிட்டாகியிருந்தது. கிடைக்கும் விடுமுறை நாட்களில் சேலத்துக்குச் செல்லும்போதெல்லாம் அருண் மியூசிகல்ஸ் என்ற ஒலிப்பதிவு கடைக்குச் செல்லாமல் இருக்க மாட்டேன். நாம் விரும்பும் பாடல்களை ஒரிஜினல் கேசட்களில் உள்ளபடியே அதே தரத்தில் ஒலிப்பதிவு செய்துதருவார் அந்தக் கடைக்காரர். இந்தத் துல்லியத்துக்காக சென்னையிலிருந்து வந்து அவரிடம் கேசட் ஒலிப்பதிவைச் செய்துகொண்டு செல்வார்கள்.

வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட கேசட்டுகளை அவரிடம் கொடுத்து எனக்கு விருப்பமான பாடல்களை எழுதிக்கொடுத்துவிட்டுவந்தால் ஒருமாதம் கழித்துத்தான் கேசட் கிடைக்கும். ‘மார்கழிப் பூவே’ பாடலை மட்டும் திரும்பத் திரும்ப கேசட்டின் இரண்டு பக்கங்களிலும் பதிவுசெய்து தாருங்கள் என்று கேட்டதும் அந்தக் கடைக்காரர் என்னை ஒருமாதிரி பார்த்துவிட்டு ஒலிப்பதிவு செய்துகொடுத்தார்.

வேலைமுடிந்து திரும்பியதும் அந்த கேசட்டைப் போட்டுவிட்டு படுத்துவிடுவேன். மூன்றாவது முறை கேட்கும்போது தூங்கிப்போயிருப்பேன். இரவு முழுவதும் அந்தப் பாடல் அறையில் தவழ்ந்துகொண்டே இருக்கும். அந்தப் பாடல் இல்லாமல் தூக்கம் வராது என்று நினைக்கிற அளவுக்கு அந்தப் பாடலின் ஒவ்வொரு பிட்டும் எனக்குப் பரிச்சயமாகிவிட்டது.

தொடர்ந்து ரஹ்மானின் பாடல்கள் வெளியாகி என்னைப் போன்ற இசை ரசிகர்களை முழுவதுமாக ஆர்கஷித்துக்கொண்ட அந்தக் காலகட்டம்தான் இசையமைப்பாளரே ஒலிப்பொறியாளராக மாறிநின்ற தருணம். தனது பாடல்களில் ஒலியின் தரமும் அளவும் ஒருங்கிணைப்பும் எப்படி அமைய வேண்டும் என்பதைத் தாமே ஒரு ஒலிப்பொறியாளராக மாறிநின்று முடிவுசெய்த ரஹ்மானை நான் சந்தித்தது ஒரு பள்ளிவாசலில்… எதிர்பாராத அந்தச் சந்திப்பு பற்றி அடுத்த வாரம்…

தொடர்புக்கு
tajnoormd@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x