ஹாலிவுட் ஜன்னல்: 87 வயது இயக்குநரின் படம்!

ஹாலிவுட் ஜன்னல்: 87 வயது இயக்குநரின் படம்!
Updated on
1 min read

ரண பயமும் அது தரும் நெருக்கடியும் சாமானியரைக்கூட சாகசங்களைப் புரியச் செய்யும். ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் பின்னணியை அலசும் ‘த 15:17 டு பாரிஸ்’ திரைப்படம் பிப்ரவரி 9 அன்று வெளியாகிறது.

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் வழியாக, 2015, ஆகஸ்ட் 21 அன்று பாரீசுக்கு செல்லும் அதிவிரைவு ரயிலில் ஐ.எஸ். தீவிரவாதி ஒருவனும் பயணிக்கிறான். ஓடும் ரயிலில் 500-க்கும் மேற்பட்ட பயணிகளை கொல்வதற்கான சதித்திட்டத்தை செயல்படுத்த தயாராகிர்றான். இதற்காக வெடிப் பொருட்கள் மற்றும் தானியங்கி துப்பாக்கியுடன் அவன் செயல்படத் தொடங்குகிறான். அப்போது பயணிகள் மத்தியிலான மரண பயம், அந்த ரயிலில் பயணிக்கும் மூன்று அமெரிக்க இளைஞர்களைத் தீவிரவாதிக்கு எதிராக நிறுத்துகிறது. அடிப்படையில் ராணுவ வீரர்களான அம்மூவரும் தீவிரவாதியை எதிர்கொண்டு சாதித்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக்கி ‘த 15:17 டு பாரிஸ்: எ ட்ரூ ஸ்டோரி ஆஃப் எ டெரரிஸ்ட், எ ட்ரெய்ன் அண்ட் த்ரீ அமெரிக்கன் ஹீரோஸ்’ என்ற புத்தகம் அடுத்த ஆண்டே வெளியானது.

சதா தீவிரவாத தாக்குதல் அச்சத்தில் வாழும் மேற்குலகினர் மத்தியில் இந்தப் புத்தகத்துக்கு பரவலான வரவேற்பு கிடைக்கவே, நடிகரும் இயக்குநருமான க்ளிண்ட் ஈஸ்ட்வுட் அதனைத் திரைப்படமாக்க முன்வந்தார். தயாரிப்பில் பங்கேற்று, ஒளிப்பதிவாளர் டாம் ஸ்டெர்ன் உள்ளிட்ட தனது வழக்கமான தொழில்நுட்ப அணியுடன், 87 வயதாகும் ஈஸ்ட்வுட் இயக்கியிருக்கும் இப்படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் உலகெங்கும் வெளியிடுகிறது.

படத்தின் சிறப்பு அம்சமாக மேற்படி சாகச சம்பவத்தில் பங்கேற்ற, ஆண்டனி சாட்லெர், அலெக் ஸ்கர்லடஸ் மற்றும் ஸ்பென்சர் ஸ்டோன் (Anthony Sadler, Alek Skarlatos, Spencer Stone) ஆகிய மூன்று அமெரிக்க வீரர்களையே அவர்களின் நிஜ கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளனர். தங்கள் சாகச நடவடிக்கைக்காக பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் உயரிய விருதுகளைப் பெற்றவர்கள். இவர்களின் பள்ளிப் பருவத்தில் தொடங்கி ராணுவப் பயிற்சி வரை பல சுவாரசியமான அனுபவங்களையும் படத்தில் சேர்த்துள்ளார் ஈஸ்ட்வுட்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in