

எழுத்தாளர் அசோகமித்திரனின் வேளச்சேரி வீட்டுக்குச் சென்றால் பெரும்பாலும் அவரே வந்துதான் கதவைத் திறப்பார். எழுத்தாளர்கள், வாசகர்கள் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். பலரும் பகிர்ந்திருக்கிறார்கள். தன் கதைகளைத் திறந்துவைப்பதுபோல் கதவைத் திறப்பார். இந்தக் கதவைத் திறக்கும் சம்பவம் அவருக்குத் தினம் தினம் நடப்பதாக இருக்கக்கூடும். அந்தக் காட்சியை அப்படியே இயக்குநர் பிரஸன்னா ராமஸ்வாமி தன் ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார். ஃபிலிம் டிவிஷன் ஆஃப் இந்தியா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
ஆவணப்படங்கள் ஆளுமைகளின் பொது வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட தனித்த பண்புகளை விவரிப்பது விசேஷமான அம்சம். அம்ஷன் குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி’ குறித்த ஆவணப்படம், அந்தக் கலைஞரின் பொது வாழ்க்கைக்கு அப்பால் அவரது தினப்படி வாழ்க்கையையும் பின்தொடர்ந்து சென்றுள்ளது. இசைத் துறைக்கு மட்டும் பரிச்சயமான தட்சிணாமூர்த்தி பிள்ளை குறித்த ஆவணப்படம் வாசகர்களுக்குப் புதிது. ஆனால், அசோகமித்திரன் எழுத்தாளராகப் பரவலாக அறியப்பட்டவர். இது சவாலானது. இதைப் படம் திறமையாகக் கையாண்டுள்ளது.
அசோகமித்திரன் எழுத்துகளை வாசிப்பது, அது குறித்த எழுத்தாளர்களின் அபிப்ராயங்கள், அவருடனான உரையாடல், அவரது கடந்த கால வாழ்க்கையைப் பின்தொடர்தல் எனப் பல அடுக்குகளாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
அசோகமித்திரன் குறித்த ஆவணப் படம் என்பதால் அவர் ‘வாழ்வாங்கு வாழ்ந்த மகான்’ என்றில்லாமல் அவரை விமர்சனப்பூர்வமாகவும் படம் எதிர்கொண்டுள்ளது. எழுத்தாளர்கள் பிரபஞ்சன், சாரு நிவேதிதா, விமலாதித்த மாமல்லன், வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி, நடிகை ரோகிணி ஆகியோர் அவரது எழுத்துகள் மீது தங்கள் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். எழுத்தில் அவர் எடுத்துக்கொண்ட சார்புநிலைகளைப் பற்றிய கேள்விகளும் தொடுக்கப்பட்டுள்ளன.
அசோகமித்திரன் எழுதுவதில் மட்டுமல்லாமல் பேசுவதிலும் ஓர் உட்பொருள் இருக்கும். உரையாடலின்போது ஓர் அதீதமான எதிர் உணர்ச்சியை வெளிப்படுத்துவார். அற்பம் என்பதை அதீத வியப்புணர்வு மூலம் கிண்டலுக்குள்ளாக்குவார். இவை எல்லாமும் இந்தப் படத்தில் உள்ளன.
திரைப்பட உலகம் தொடர்பான அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நாவல் குறித்துப் பேசும் காட்சியில் பின்னணியில் ‘ஆண்டவன் கட்டளை’ சினிமா படப்பிடிப்பு நடக்கிறது. ‘18வது அட்சக்கோடு’ நாவலைப் பின்தொடர்ந்து செல்லும் செகந்திராபாத் காட்சி ஒன்றில் நாவலின் கதாபாத்திரங்களை உயிர்ப்பிப்பதுபோல் சிறுமிகள் கர்னாடக சங்கீதம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் அவருடைய வாசகர்களுக்கு நல் அனுபவத்தைக் கொடுக்கும். எழுத்தாளர் அரவிந்தன், நடிகர் நாசர் உள்ளிட்டோர் அவரது எழுத்தின் ஆன்மாவைக் கதைவாசிப்பின் மூலமாகக் காட்டியிருக்கிறார்கள். படத்துக்கு வெளியே இருக்கும் உதிரிக் காட்சிகளைப் படத்துக்குள் இழுத்துப் போட்டிருப்பது சுவாரசியத்தைக் கூட்டியிருக்கிறது.
அவர் தனது பெரும்பாலான கதைகளை தி.நகர் நடேசன் பூங்காவில் வைத்துதான் எழுதியுள்ளார். அதைப் பற்றி அசோகமித்திரன் பேசியுள்ளார். “திராவிட இயக்கத் தலைவர்களுள் ஒருவரான டாக்டர் நடேசன் சிலை பூங்காவின் நடுவிலிருக்கும். அவர் உயிர்பெற்று வருவதுபோல அப்போது கற்பனைசெய்துகொள்வேன். இப்போது அவர் நேரில் வந்தால், ‘என்ன தம்பி பார்க்கு பக்கம் வர்றதே இல்ல’ என்றுதான் கேட்பார்” என்கிறார். அசோகமித்திரன் இல்லாத இந்தக் காலத்தில் அவரது பேச்சைக் கேட்பதே மகிழ்ச்சியளிக்கிறது.
தன் கதாபாத்திரங்களை எந்த அளவுக்கு நேசித்தாரோ அதே அளவுக்குத் தன் வாசகர்களையும் நேசித்தவர் அசோகமித்திரன். தான் அல்லாத ஒருவர் இந்தக் கதைக்குள் நுழையவிருக்கிறார் என்ற கவனத்துடன் கதைகள் எழுதினார். அதனால் வெகு சிக்கலான விஷயங்களைக்கூடச் சுவாரசியமாகச் சொல்வதைத்தான் தன் கதைகளின் லட்சியமாகக் கொண்டிருந்தார். அவரைப் பற்றிய இந்த ஆவணப்படமும் இந்த அம்சங்களைக் கைக்கொள்ள முயன்றுள்ளது.