

நே
ர்மையான அரசியல்வாதியாக வலம்வரும் மத்திய அமைச்சர் ஜெயராமை சிலை கடத்தல் விவகாரத்தில் சிக்கவைக்க அரசியல் புள்ளிகள் சிலர் திட்டமிடுகின்றனர். அதற்கான ஆதாரத்தை திரட்டி அவரை ஊழல் குற்றவாளி என்று நிரூபிக்க சிபிஐ அதிகாரி ஆஷா சரத் நியமிக்கப்படுகிறார். அமைச்சரின் தனிச் செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி அனுஷ்கா பக்கம் விசாரணை திரும்புகிறது. ஏற்கெனவே, துப்பாக்கிச் சூடு பிரச்சினையில் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனுஷ்கா, சிபிஐ விசாரணைக்காக பாழடைந்த பங்களாவுக்கு ரகசியமாக அழைத்துச் செல்லப்படுகிறார். பாகமதி ஆவி திரியும் அந்த பங்களாவில் இருந்து வெளியேற முயற்சிக்கிறார் அனுஷ்கா. இதற்கிடையில், கதாநாயகன் உன்னி முகுந்தனுடனான காதல் நினைவுகள் அவ்வப்போது வந்துபோகின்றன. சிபிஐ விசாரணையின்போது, ஜெயராம் பற்றி பல தகவல்கள் வருகின்றன. அதனூடே யார் இந்த பாகமதி என்ற எதிர்பார்ப்பு எகிற ஆரம்பிக்கிறது. இதுபோன்ற படங்கள் இப்படித் தான் முடியும் என்கிற எண்ணம் தோன்றும்போது, படம் தலைகீழாகத் திரும்புகிறது. இது வெறும் திகில் திரைப்படம் அல்ல என்று தெரியவருகிற காட்சியில் படம் களைகட்டுகிறது.
‘பாகுபலி’க்கு சவால்விடும் திரைப் படைப்பு, 2012-லேயே அனுஷ்காவை வைத்துக் கற்பனை செய்யப்பட்ட கதாபாத்திரம், அனுஷ்காவுக்கு வாழ்நாள் திரைப்படம் - இப்படியான பிரம்மாண்டச் சித்தரிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் படம். சமகால சமூக, அரசியல் பிரச்சினைகளை திகில் பாணித் திரைப்படமாகத் தந்துள்ளனர்.
‘பாகுபலி’யில் தேவசேனாவாகக் கவர்ந்த அனுஷ்கா, அமைதி, கோபம், பாவம், வீரம் என்று பல்வேறு முகபாவனையில் அசத்த களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்ஜி.அசோக்.
கண்களில் சாந்தமும், உடல்மொழி யில் கம்பீரமும் நிறைந்த அனுஷ்கா தன்னால் ஒட்டுமொத்தப் படத்தையும் தூக்கி நிறுத்த முடியும் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஜெயராம், ஆஷா சரத் மிரட்டுகின்றனர். உன்னி முகுந்தனை மேலும் பல தமிழ் படங்களில் பார்க்க ஆசை.
சிலை கடத்தல் விவகாரம், தண்டனைக் கைதி, திகிலூட்டும் பங்களா வில் விசாரணை என்று வெவ்வேறு பின்னணியை அடுத்தடுத்த திருப்பங்களாகக் கொண்டு திரைக்கதையை நகர்த்தியது சிறப்பு. ஆனால், பாகமதி பங்களாவுக்குள் அனுஷ்கா ஒவ்வொரு இடமாகச் சென்று பார்ப்பது, சுற்றி சுற்றி ஒரே இடத்தில் அரங்கேற்றப்படும் ரத்தக் காட்சிகளுக்கு கத்தரி போட்டிருக்கலாம்.
வழக்கமான திகில் படங்கள் போலவே, இதிலும் காதல் காட்சிகள் ஒட்டாமல் தனி டிராக்கில் போகிறது. அதுபோல, மக்கள் சேவையில் நாயகன் உன்னி முகுந்தன் ஈடுபடுவது, அனுஷ்கா அவரிடம் காதல் வயப்படுவது ஆகிய காட்சிகள் சுவாரசியமின்றி செயற்கைத்தனமாக உள்ளன.
பாழடைந்த பங்களாவில் போலீஸ் ரகசிய விசாரணை நடத்துவது ஓகேதான். ஆனால், அடையாளம் தெரியாமல் சிதிலமடைந்து ஒட்டடையில் மறைந்து கிடக்கும் கட்டிடத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியைப் பல நாட்கள் அடைத்துவைத்து விசாரிப்பது என்பது தூசிதட்ட வேண்டிய சிந்தனை. நேர்மையான, நிதானமான, மூடநம்பிக்கை அற்றவராக அனுஷ்காவின் கதாபாத்திரத்தைப் படைத்ததற்கு பாராட்டுகள். ஆனால், அவ்வளவு கம்பீரமானவர், போலீஸுக்கும் பொதுமக்களுக்குமான மோதலில் ரத்தத்தைப் பார்த்ததும் மயங்கி விழுவது பலவீனமான புனைவு.
இசையமைப்பாளர் தமன், கலை இயக்குநர் ரவீந்தர் ரெட்டி, ஒளிப்பதிவாளர் மதியின் பங்களிப்பு அபாரம்.
தெலுங்கு, தமிழ் என இருமொழித் திரைப்படமாக இயக்கியுள்ள படம்என்றபோதிலும், பல காட்சிகளில் தெலுங்கு டப்பிங் படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. படத்தின்பிற்பாதியில் பாகமதி, பாகவுன்னாரு!