

முழுமையாகப் பெண் வேடம் போட முடியாவிட்டாலும் வெறுமனே தலைக்கு முக்காடிட்டு, பெண் குரலில் பேசி நடிப்பதையே சாதனையாகக் கருதிய நடிகர்கள் அக்காலகட்டத்தில் உண்டு. நீண்ட கூந்தல் கொண்ட இளவயது சிவாஜி, மதுரை ஸ்ரீ பால கான சபாவில் இருந்தபோது, 16 வயதில் ஏற்று நடித்த ‘ஸ்திரீ பார்ட்’ ராமாயண சீதை. அதைத் தொடர்ந்து அதற்கு நேர் எதிரான சூர்ப்பனகை, ‘கிருஷ்ண லீலா’ நாடகத்தில் அரக்கி பூதகி, தேவகி, ‘மனோகரா’ நாடகத்தில் பத்மாவதி, ‘அபிமன்யு’ நாடகத்தில் சுந்தரி, ‘ஜஹாங்கீர்’ நாடகத்தில் ராணி நூர்ஜஹான் எனப் பிரதானப் பெண் வேடங்களில் நடித்தார்.
அந்தக் காலகட்டத்திலேயே நடிகர் திலகத்தின் ஒப்பனைப் பரிசோதனைகள் தொடங்கிவிட்டன. இவை போக, சமூக நாடகங்களான ‘பதிபக்தி’யில் எம். ஆர் ராதாவுக்கு ஜோடியாக சரஸ்வதி கதாபாத்திரம், ‘இழந்த காதல்’ நாடகத்தில் தாசி சரோஜா என ஸ்திரீ பார்ட் ஒப்பனையில் நாடக ரசிகர்களை ஈர்த்தார். அவரது பெண் வேட ஒப்பனையின் சிறப்புக்கு ஒரு சம்பவம். நூர்ஜஹான் வேடத்தில் நடித்த நடிகர் திலகத்தைப் பெண் என நினைத்து, அவரை கடத்திப் போகத் திட்டமிட்டாராம் ஒரு செல்வாக்கான மனிதர். பின்னர், நூர்ஜஹான் ஒரு ஆண் எனத் தெரிந்து தனது கடத்தல் குழுவை ‘கம்’மென்று இருக்கச் சொல்லிவிட்டாராம்.
நாடக மேடையில் ஒப்பனைக்குக் கொடுத்த அதே முக்கியத்துவத்தைத் திரையிலும் கொடுத்தார் நடிகர்களின் திலகம். ஒப்பனை என்பதைச் சினிமா கம்பெனி பார்த்துக் கொள்ளட்டும் என்று அவர் விட்டுவிடவில்லை. நடிப்பின் ஒரு பகுதி ஒப்பனை என்பதில் நடிகர் திலகம் உறுதியாக இருந்தார்.
‘கர்ணன்’ படத்தில் நெற்றியில் இடப்படும் பொட்டு, அணிகலன்கள் உட்படக் காட்சியின் சூழலுக்கு ஏற்ப வெவ்வேறு காட்சிகளில் வெவ்வேறு விதமாக வருவதைக் கவனிக்கலாம். ‘வணங்காமுடி’, ‘அம்பிகாபதி’, ‘தெனாலிராமன்’, ‘வீரபாண்டியக் கட்டபொம்மன்’, ‘கர்ணன்’, ‘திருமால் பெருமை’யில் மூன்று ஆழ்வார்கள், ‘காத்தவராயன்’, ‘தில்லானா மோகனாம்பா’ளில் சிக்கல் சண்முகசுந்தரம் போன்ற கதாபாத்திரங்களுக்கு அவர் ஒரே மாதிரி நெற்றிப்பொட்டு வைத்ததில்லை.
முழு நீளக் கதாபாத்திரங்களைக்கூட விட்டுவிடலாம் ஒரு துணைக் கதாபாத்திரமாக ‘கந்தன் கருணை’யில் வரும் வீரபாகு தேவரின் தோற்ற வடிவமைப்பு. ஒரு ராஜாளிப் பறவையின் சிறகுகளைப் போல் கச்சிதமாகவும் துடிப்போடும் இருக்கும். காலணி முதல் கிரீடம் வரை கூர்மையான ஒரு படைத் தளபதியாகத் தோற்றத்தில் நம்பகத் தன்மையைக் கொண்டு வந்திருப்பார்.
சாதிய அடையாளங்களைக் கொண்ட கதாபாத்திரங்கள் அவருக்கு வெகுசில படங்களில் வாய்த்திருந்தாலும் அவற்றை வெவ்வேறு விதத் தோற்றங்களில் வெளிப்படுத்தினார். எடுத்துக்காட்டாக ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘முதல் மரியாதை’, ‘என் மகன்’, ‘தேவர் மகன்’, ‘சத்யம்’ போன்ற படங்களில் ஏற்ற கதாபாத்திரங்களின் தோற்ற மாறுபாடுகளைக் கூர்ந்து கவனித்தால் ஒப்பனை மீதான அவரது ஈடுபாடு விளங்கும்.
தோற்ற முன்மாதிரி: ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படத்தைப் பார்த்த வ.உ.சியின் மகன்கள், தங்களுடைய தந்தையை அச்சு அசலாக சிவாஜி பிரதிபலித்தார் என்று வியந்திருக்கிறார்கள். இதற்கு நேரெதிராக ‘கை கொடுத்த தெய்வம்’ படத்தில் கம்பீரமான பாரதியாராக தோற்றம் காட்டியிருப்பார். இவை போக ‘கொடி காத்த குமரன்’, ‘சாம்ராட் அசோகன்’, ‘மராட்டிய சிவாஜி’, ‘தான்சேன்’, ‘நந்தனார்’ எனப் பல்வேறு ஆளுமைகளைத் திரையில் உயிருடன் உலவ விட்டதில் அவரின் நுணுக்கமான ஒப்பனைக்குக் கணிசமான பங்கிருக்கிறது.
மிகப் பெரும் ஆளுமைகள் எப்படி இருந்திருப்பார்கள், எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்பதை, ‘இப்படி இருந்திருக்கலாம்’ என்று நடிகர் திலகம் காட்டிய தோற்றங்களையும் நடிப்பையும் இனிவரும் தலைமுறைகளுக்கும் தைரியமாகக் காட்ட முடியும்.
தான் ஏற்ற ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பொருந்தக்கூடிய, நிஜ வாழ்வில் தான் சந்தித்த வித விதமான மனிதர்களின் பிரத்யேக உடல் மொழியை, அவர்கள் ஆடை, அணிகலன்கள் அணிந்திருந்த விதத்தை அவர் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறார். எடுத்துக்காட்டாக காஞ்சிப் பெரியவரை ‘திருவருட்செல்வ’ரிலும் இந்தியா சிமெண்ட்ஸ் டி.எஸ். கிருஷ்ண சாமியை பாரிஸ்டர் ரஜினிகாந்தாகவும் இன்னொருவரைக் காதோரத்து முடியுடன் பிரஸ்டீஜ் பத்மநாபனாகவும் கொண்டு வந்தார்.
‘பாவ மன்னிப்’பில் இஸ்லாமியர் ரஹீமாக நேர்த்தியாக வெளிப்பட்டார். அவர் கதாபாத்திர ஒப்பனைக்குள்ளிருந்து தனது நடிப்பின் திரியை ஒளிரச் செய்வதில் தனிப்பெரும் நட்சத்திர முன்மாதிரியாகத் திகழ்ந்தார். அதற்கு ‘நவராத்திரி’யில் வரும் ஒன்பது வேடங்கள் மட்டுமல்ல, அதில் வரும் ‘சத்தியவான்’ சிங்காரத்தையும் சேர்த்து 10 தோற்றங்களில் உரிய வேற்றுமைகளுடன் பரிமளிக்க முடிந்திருக்கிறது.
இலக்கணம் வகுத்த எஸ்பி சவுத்ரி: தமிழ் சினிமாவில் காவல்துறை நாயகக் கதாபாத்திரங்களை ‘தங்கப் பதக்க’த்துக்கு முன், ‘தங்கப் பதக்க’த்துக்கு பின் எனப் பிரித்து விடலாம். இத்தனைக்கும், முதலில் மகேந்திரன் எழுதி, செந்தாமரை நடித்த ‘இரண்டில் ஒன்று’ நாடகத்தின் மறுவடிவம் தான் ‘தங்கப் பதக்கம்’. ஓட்ட வெட்டப்பட்டத் தலைமுடி, திருத்தமான மீசை, கையில் சில்வர் கப்பு (சத்யா பட கமலுக்கு முன்னோடி) எனப் புது இலக்கணம் வகுத்திருந்தார் எஸ்பி சவுத்ரி.
‘பதிபக்தி’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘ஜெனரல் சக்ரவர்த்தி’, ‘பைலட் பிரேம்நாத்’ என ராணுவ அதிகாரி ஒப்பனைகளையும் அவர் விட்டுவைக்கவில்லை.
அவரது நடிப்புக்கு முழு ஒப்பனைதான் பக்கபலமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஒப்பனையே இல்லாமல், அல்லது மிகக் குறைந்த ஒப்பனையில் ஸ்ரீதரின் ‘செல்வம்’ படத்தில் அவரை வைத்து பரிசோதனை செய்யப்பட்டது. வெற்றியடைந்தது சிவாஜிதான். வழக்கம்போல் ‘கட்’ சொல்ல முடியாமல் நடிப்பையே பார்த்துக் கொண்டிருந்தார் ஸ்ரீதர். பின்னர் ‘முதல் மரியாதை’, ‘தேவர் மகன்’ இன்னும் சில படங்களையும்கூட மிகக் குறைந்த ஒப்பனையுடன் தோன்றிய கதாபாத்திரங்களுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
ஒப்பனையில் கற்பனை: எப்படி இருந்திருப்பார்கள் என நமக்குத் தெரியாத மாபெரும் ஆளுமைகளைக் கூட இப்படித்தான் இருந்திருப்பார்கள் என இரண்டு தலைமுறைப் பார்வையாளர்களை நம்ப வைத்தது ஒரு சாதனை. அது இன்னும் பல தலைமுறைகளுக்குக் குறிப்பாக யூடியூப் இருக்கும் வரையிலும் தொடரும்.
இன்று ஒரு கதாபாத்திரத்துக்கான தோற்றத்தை வடிவமைக்கச் செயற்கை நுண்ணறிவைப் (ஏஐ) பயன்படுத்துகிறார்கள். ஆனால், தனது கலையாளுமையால் ஒரு சுயம்புவாக ஒப்பனைக் கலையில் தனது எல்லைகளைக் கற்பனையுடன் விஸ்தரித்துக் கொண்டே போனவர் நடிகர் திலகம். அவரது ஒப்பனைக் கலைத்திறன் இன்னும் நீண்ட ஆராய்ச்சிகளுக்குத் தகுதியானது.
(‘ஒப்பனைகளின் அப்பன்’ கட்டுரையின் நிறைவுப் பகுதி).
- tottokv@gmail.com