இயக்குநரின் குரல்: உறவுகளைத் துரத்தும் திருமணம்!

இயக்குநரின் குரல்: உறவுகளைத் துரத்தும் திருமணம்!
Updated on
2 min read

சுசீந்திரனிடம் இணை இயக்குநராகப் பணி புரிந்தவர் நாகராஜ் கருப்பையா. இவர் எழுதி, இயக்கியிருந்த ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்ற படம். தற்போது, வேல.ராமமூர்த்தி, சமீபத்தில் மறைந்த நடிகர் மாரிமுத்து, சுரேஷ் நந்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘வீராயி மக்கள்’ என்கிற தனது இரண்டாவது படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

படத்தின் தலைப்பு இதுவொரு தெற்கத்திக் குடும்பப் படம் என்பதைச் சொல்கிறது.. ஆமாம்! ‘பாண்டவர் பூமி’, ‘மாயாண்டி குடும்பத்தார்’ என அண்ணன் - தம்பி, தங்கை உறவை மையப்படுத்திப் பல படங்கள் வந்திருக்கின்றன. அந்தப் படங்கள் ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் மக்களைக் கவர்ந்தவை.

அந்த வரிசையில் ‘வீராயி மக்கள்’ அழுத்தமான இடத்தைப் பிடிக்கும் தற்காலத்தின் கதை. கிராமங்கள், நகரங்களின் நாகரிகத்தில் மூழ்கித் திளைக்கும் இந்தக் காலத்தில், நவீன வாழ்க்கையைத் தேடிப் போய், உறவுகளைப் பிரிந்து நிற்கும் ஒரு குடும்பத்தின் கதையை, ஊரின் கலாச்சாரத்துடன், வழிபாட்டுடன் இணைத்துக் கதை புனைந்திருக்கிறேன்.

என்ன கதை, எங்கே நடக்கிறது? - அறந்தாங்கி, ஆவுடையார் கோயில் பக்கம் நடப்பதுபோல் திரைக்கதை அமைத்திருக்கிறோம். அங்கேயே 38 நாட்கள் படப்பிடிப்பு நடத்திப் படத்தை முடித்தோம். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் கிராமிய வாழ்வும் அங்குள்ள வட்டார மொழியும் திரைக்கதையில் இருக்கும். மடியில் உட்கார வைத்து காது குத்திவிட்ட தாய் மாமா, திருவிழாவுக்குக் கூட்டிக்கொண்டு போன சித்தப்பா, நாம நல்லா இருக்கணும் என்று நொண்டிக் கருப்பன் என்கிற எல்லைச்சாமியிடம் வேண்டிக்கொள்கிற அப்பத்தா என இன்னும் ஈரத்தோடும் பாசத்தோடும் நம் வரவுக்காகக் காத்திருக்கும் உறவுகள் தமிழ்நாட்டின் கிராமங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

நாம்தான் நவீன வாழ்க்கையைத் தேடி, வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே வாய்க்கிற இந்த அற்புத உறவுகளைப் பிரிந்து, நீண்ட தூரம் வந்துவிட்டோம். அப்படிக் குடிபெயர்ந்துபோன மூன்று அண்ணன் - தம்பிகளின் பிரிவும் அவர்கள் மீண்டும் ஒன்று சேர்வதும்தான் கதை.

இந்த வகைமையில் பல படங்கள் வந்துவிட்டன. நீங்கள் புதிதாக என்ன சொல்லிவிடப் போகிறீர்கள்? - அதுதான் படமே! குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்தால் மட்டும் போதாது. அவர்களுக்குச் சொத்து, சுகம்கூடச் சேர்த்து வைக்காமல் நாம் கடந்து சென்றுவிடலாம். ஆனால் அவர்களுக்குச் சொந்த பந்தங்களைக் காட்டாமல், உறவுகளின் உன்னதத்தை உணர்த்தாமல் போனால், அது உணர்வுகளே இல்லாமல் வாழப் பழகிவிடும் ஒரு தட்டையான தலைமுறையை உருவாக்கிவிடும்.

அந்த ஆபத்தை என்ன விலை கொடுத்தாவது தவிர்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். திருமணத்துக்கு முன்புவரை, அண்ணன், தம்பி, அக்காள், தங்கையாக இருக்கும் நாம், திருமணத்துக்குப் பிறகு ஏன் உறவைக் கடினமாக்கிக் கொள்கிறோம் என்பதைப் பார்வையாளர்களிடம் ரகசியமாக இந்தப் படம் முன் வைக்கும்.

யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்? - வீராயி என்கிற முதிய பெண்மணியின் மூன்று மகன்களில் மூத்தவராக வேல.ராமமூர்த்தியும் அவரது தம்பியாக சமீபத்தில் மறைந்த நடிகர் மாரிமுத்துவும் மற்றொரு தம்பியாக ஜெரால்ட் மில்டனும், சகோதரியாக தீபாவும் நடித்திருக்கிறார்கள். படத்தின் நாயகனாக, வேல ராமமூர்த்தியின் மகனாக சுரேஷ் நந்தா நடித்துள்ளார். நாயகியாக மலையாளத்திலிருந்து நந்தனா அறிமுகமாகிறார்.

‘எதிர்நீச்சல்’ மெகா தொடரில் மாரிமுத்துவின் இடத்தில் அவருக்குப் பதிலாக வேல.ராமமூர்த்தி தற்போது நடித்து வருகிறார். அந்த அளவுக்கு இரண்டு பேருமே இன்றைக்குத் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த கலைஞர்கள். மக்கள் மத்தியிலிருந்து வந்து, முதலில் படைப்பாளிகளாகப் புகழ்பெற்று பின்னர் திரை நடிப்புக்கு வந்தவர்கள். இந்தப் படத்தில் இரண்டு பேரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் கதைதான் ஹீரோ. நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரமாக மட்டுமே வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in