சினிமா ரசனை 2.0 - 18: ஒரு சிறைப் பறவையின் கோபம்!

டைலர் ஷெரிடன்
டைலர் ஷெரிடன்
Updated on
3 min read

கரோனா காலத்தில் மாபெரும் கவன ஈர்ப்பாக மாறி வெற்றிபெற்ற ‘துல்சா கிங்’ உருவான விதத்தைக் கடந்த வாரம் பார்த்தோம். அந்த சீரீஸில், செய்யாத குற்றத்துக்குச் 25 வருடங்கள் சிறையில் தண்டனை அனுபவித்துவிட்டுத் தன்னுடைய மாஃபியா தலைவரைத் தேடிவந்த மேன்ஃப்ரெடிக்கு ஓர் அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது. என்னவெனில், அவன் 25 வருடங்களுக்கு முன்னர் மாஃபியா கும்பலின் முக்கியமான நபராக இருந்தபோது நிலவிய சூழல் இப்போது இல்லை.

எல்லாருமே புதியவர்கள்; மாஃபியா தலைவரின் மகனுடைய ஆள்கள். மாஃபியா பாஸ் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். பாஸுடைய மகனுக்கு மேன்ஃப்ரெடியைப் பிடிப்பதில்லை. இதனால், ‘மேன்ஃப்ரெடிக்கு இனிமேல் நியூயார்க்கில் வேலை இல்லை, எங்கோ மிகத் தொலைவில் இருக்கும் துல்சா என்கிற ஊருக்குப் போய் தங்கள் மாஃபியா தொழிலைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று மேன்ஃப்ரெடிக்கு பாஸின் மகன் ஆணையிடுகிறான்.

மேன்ஃப்ரெடிக்கு உச்சபட்சக் கோபம் வருகிறது. ஆனால், அப்போது அங்கு வரும் மாஃபியா பாஸ் மேன்ஃப்ரெடியை சமாதானம் செய்கிறார். பாஸின் மீது பெருமதிப்பு கொண்டிருக்கும் மேன்ஃப்ரெடி, வேறு வழியில்லாமல் துல்சாவுக்குச் செல்லச் சம்மதிக்கிறான்.

புதிய ஊரில் பழைய வாழ்க்கை: மேன்ஃப்ரெடிக்கு ஒரு மகள் உண்டு. அவள் பல வருடங்கள் முன்னரே மேன்ஃப்ரெடியைப் பிரிந்து எங்கோ சென்றுவிட்டாள். இப்போது அவளிடம் பேச ஆசைப்படுகிறான் மேன்ஃப்ரெடி. ஆனால், அவள் எங்கே என்று தெரியவில்லை. மேன்ஃப்ரெடிக்கு ஒரு தம்பியும் உண்டு. அவன் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறான்; மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருக்கிறான்.

இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் துல்சாவுக்கு வந்து இறங்குகிறான் மேன்ஃப்ரெடி. துல்சா என்பது அமெரிக்காவில் ‘வெஸ்டர்ன்’ என்று அழைக்கப்படக்கூடிய பிராந்தியத்தில் இருக்கும் சிறிய ஊர். ஒக்லஹாமா, ஆர்கன்சாஸ், கேன்சாஸ், டெக்சாஸ் ஆகிய ஊர்களை வெஸ்டர்ன் திரைப்படங்களிலும் காமிக்ஸ் கதைகளிலும் பார்த்திருப்பீர்கள். அத்தகைய வெஸ்டர்ன் ஊர்தான் துல்சா. ஒக்லஹாமா மாகாணத்தில் இருக்கும் ஒரு ஊர்.

துல்சாவுக்கு வந்து இறங்கும்போதே ஒரு முடிவுடன்தான் இறங்குகிறான் மேன்ஃப்ரெடி. ஊரை மெல்ல அலசுகிறான். கறுப்பினத்தைச் சேர்ந்த ஒரு டாக்ஸி ஓட்டுநரிடம் பேசி, அவனது வண்டியில் ஏறுகிறான். அவனிடம், தான் ஒரு மாஃபியா ஆசாமி என்று சொல்லி, அவனைத் தனக்கு நிரந்தர ஓட்டுநராக நியமிக்கிறான்.

ஊரில் எங்குக் கஞ்சா கிடைக்கும் என்று விசாரித்து, கஞ்சா விற்கும் கடை ஒன்றை வைத்திருக்கும் போதி என்கிற நபரிடம் செல்கிறான். அவனை மிரட்டி, இனிமேல் அவனுக்கும் அவன் கடைக்கும் நிரந்தரப் பாதுகாப்பைத் தானே அளிப்பதாகச் சொல்லிப் பணத்தைப் பிடுங்குகிறான். அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு ஊரிலேயே பெரிய விடுதி ஒன்றில் தங்குகிறான். இவையெல்லாமே நகைச்சுவையாகச் சொல்லப் பட்டிருக்கும் சம்பவங்கள்.

மாபியாவிடம் மயங்கும் அதிகாரி: இப்படியாக துல்சாவில் மேன்ஃப்ரெடியின் புதிய வாழ்க்கை தொடங்குகிறது. டாக்ஸி ஓட்டுநர் மேன்ஃப்ரெடியின் வலதுகையாக மாறுகிறான். போதி மேன்ஃப்ரெடியின் நண்பனாக ஆகிறான். அந்த ஊரில் மேன்ஃப்ரெடிக்கு இன்னும் சில தொடர்புகள் கிடைக்கின்றன.

விடுதலையாகி வந்திருக்கும் மேன்ஃப்ரெடியை உளவுத்துறை கண்காணிக்கிறது. அந்த ஊரில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஸ்டேஸி என்கிற பெண்ணிடம் சொல்லி மேன்ஃப்ரெடியைக் கண்காணிக்கச் சொல்கிறது. ஆனால், அதற்கு முன்னரே ஸ்டேஸியிடம் துல்சாவில் பழகியிருக்கிறான் மேன்ஃப்ரெடி. அவன் யார் என்று தெரிவதற்கு முன்னரே ஸ்டேஸிக்கு மேன்ஃப்ரெடியைப் பிடித்துப்போய் விடுகிறது.

இதுதான் துல்சா கிங்கின் தொடக்கம். இங்கிருந்து கதையில் எத்தனையோ திருப்பங்கள்,சம்பவங்கள், அடிதடிகள் ஆகியவை வருகின்றன.சில்வஸ்டர் ஸ்டாலோன் தொண்ணூறுகளில் எப்படிக் கொடிகட்டிப் பறந்தாரோ, அதே ஸ்டைலுடன் அதேபோல் அதிரடியாக இதில் நடித்திருப்பார்.

துல்சாவில் இருக்கும் போதுதான் தன்னை சிறையிலேயே மாஃபியா பாஸின் மகன் கொல்ல நினைத்தான் என்பது மேன்ஃப்ரெடிக்குத் தெரியவருகிறது. அதேபோல் தன்னைவிட்டுப் பிரிந்த தனது மகளைத் தேடிச் சென்று கண்டுபிடிக்கிறான் மேன்ஃப்ரெடி. மகளிடம் பேசும்போது பல அதிர்ச்சியான சம்பவங்கள் தெரியவருகின்றன. மாஃபியா பாஸின் மகனுடைய வலதுகையாக இருந்தவன் அவளைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதை அறிந்து கொலைவெறியாகிறான்.

நியூயார்க்குக்கு அழைக்கும் விதி: இச்சமயத்தில் மேன்ஃப்ரெடியின் தம்பி இறக்கும் தறுவாயில் இருப்பதால் அவனைப் பார்க்க நியூயார்க் செல்கிறான். அங்கு தம்பியின் குடும்பத்தைப் பல வருடங்கள் கழித்து சந்திக்கிறான். அங்கிருந்து நேராக மாஃபியா பாஸைச் சந்திக்கச் செல்கிறான். அவரிடம் பேசுகிறான். அவர் மருத்துவமனைப் படுக்கையில் இருக்கிறார். அங்கிருந்து பாஸின் மகனைத் தேடிச் செல்லும் மேன்ஃப்ரெடி, தனது மகளைப் பலாத்காரம் செய்த அடியாளை அனைவருக்கும் முன்னால் அடித்தே கொல்கிறான். துல்சா திரும்புகிறான்.

இப்போது மேன்ஃப்ரெடிக்கும் மாஃபியா பாஸின் மகனுக்கும் நேரடி யுத்தம் தொடங்குகிறது. இதற்கிடையே துல்சாவில் உள்ளூர் கும்பல் ஒன்று மேன்ஃப்ரெடியிடம் பிரச்சினை செய்கிறது. இவற்றை மேன்ஃப்ரெடி எப்படிச் சமாளித்தான் என்பதே மீதிக்கதை.

அடுத்த சீசன் விரைவில்: இந்த சீரீஸைப் பார்க்கத் தொடங்கினால் சர்ரென்று அத்தனை எபிசோடுகளும் ஓடி முடிந்துவிடும் என்பதே இதன் சிறப்பு. கூடுதலாக சில்வஸ்டர் ஸ்டாலோன் வேறு அதகளம் செய்திருப்பார். ஆனால், சீரீஸ் முழுதுமே நகைச்சுவையும் உண்டு.

கிட்டத்தட்ட நமது நெல்சன் பாணியில் இருக்கும். இப்படிப்பட்ட சீரீஸ் பிய்த்துக்கொண்டு போனதில் ஆச்சரியமில்லை அல்லவா? ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றதால் இதன் அடுத்த சீசனின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அடுத்த வருடம் வெளியாகும் என்று தெரிகிறது.

டைலர் ஷெரிடன் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். வெஸ்டர்ன் கதைகளில் மேதை. எத்தனையோ வெஸ்டர்ன் சீரீஸ்களை ஒரே சமயத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரது மிகச் சிறந்த சீரீஸின் பெயர் ’யெல்லோஸ்டோன்’ (Yellowstone). வெஸ்டர்ன் படங்களில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டுக்கு அடுத்தபடியாக நிறைய நடித்துப் பிரபலமான கெவின் காஸ்ட்னர்தான் இதன் ஹீரோ. காட்ஃபாதர் கதையை எடுத்துக்கொண்டுபோய் ஒரு வெஸ்டர்ன் உலகத்தில் வைத்தால் எப்படி இருக்கும்? அதுதான் ’யெல்லோஸ்டோ’னின் கதை.

இந்த ’யெல்லோஸ்டோன்’ நடக்கும் இடம் மாண்டனா. அதுவும் வெஸ்டர்ன் கதைகள் அதிகம் நடக்கும் இடம்தான். இதனால் யெல்லோஸ்டோனின் கெவின் காஸ்ட்னரையும் துல்சா கிங்கின் சில்வஸ்டர் ஸ்டாலோனையும் டைலர் ஷெரிடன் இணைக்கப்போகிறார் - ஒரு யூனிவர்ஸ் உருவாக்கப்போகிறார் என்கிற வதந்தி ஒரு வருடமாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அதற்கு வாய்ப்பும் இருக்கிறது என்றுதான் நான் சொல்வேன். அநேகமாக இனிவரும் ‘யெல்லோஸ்டோ’னின் புதிய சீசனிலோ ’துல்சா கிங்’கின் இரண்டாம் சீசனிலோ இதற்கான ‘க்ளூ’க்கள் கொடுக்கப்படலாம் என்றே தெரிகிறது. அப்படி மட்டும் நடந்துவிட்டால் அதுதான் உலகின் மிகப் பிரம்மாண்டமான அதிரடி சீரீஸாக இருக்கும்.

இந்த சீரீஸைப் பார்க்கத் தொடங்கினால் சர்ரென்று அத்தனை எபிசோடுகளும் ஓடி முடிந்துவிடும் என்பதே இதன் சிறப்பு. கூடுதலாக சில்வஸ்டர் ஸ்டாலோன் வேறு அதகளம் செய்திருப்பார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in