காதலிசை - ‘நீ பேசும் பேச்சு அய்யோ அள்ளிடுதே..’

காதலிசை - ‘நீ பேசும் பேச்சு அய்யோ அள்ளிடுதே..’
Updated on
2 min read

இசை ஆட்கொண்டு விடுகிறபோது, கொஞ்சம் உன்மத்த நிலைக்குப் போய்விடுகிறது மனம். கடந்த காலத்தின் இசைக்கொடை, விவரிப்புக்கு அப்பாற்பட்டது. நிகழ்காலமும் ரசனை கொண்டாடிகளை ஏமாற்றி விடுவதில்லை. அண்மையில் ஒரு திரைப்படத்தைப் பார்க்கையில் அதன் அதிர்ச்சியான சமூகச் செய்தி ஒரு பக்கம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்க, மறுமுனையில் உள்ளம் ஆழ்ந்துபோய் அதை அருந்திச் சேமித்துக் கொண்ட ஒரு பாடல், படுத்தி எடுத்துக்கொண்டிருக்கிறது.

காதல் இதயங்களின் மயக்க கீதம்தான் அது. ஆனால், அது கட்டமைக்கப்பட்ட மெட்டும் அதில் பட்டுத் தெறித்திருக்கும் சொற்களும் பாடகர்கள் அதன் நுட்பங்களை ரசிகர்களுக்குக் கடத்தும் இன்பமும் இசைக் கருவிகளின் கொண்டாட்டமும் பாடலைப் பேச வைக்கின்றன.

‘சித்தா’ திரைப்படத்தின் தலைப்பே வித்தியாசமானது. அண்ணன் மகள் மீது உயிரான நேசம் கொண்டிருக்கும் சித்தப்பாதான் சித்தா. அவனது காதல் இதயத் துடிப்புதான் அந்தப் பாடல்.

சுவாரஸ்யமான கோரஸ் மிக மென்மையாக எடுத்துக் கொடுக்க, ரகசியப் பரிமாற்றமாக நாயகியின் ‘உம்’ கொட்டுதலில் தொடங்குகிறது அந்தக் காதலிசை. தாளக்கட்டு, வேறென்ன இதயத் துடிப்பேதான்! ‘கண்கள் ஏதோ’ என்று தொடங்கும் பல்லவியில், அந்த ‘ஏதோ’விலேயே நிறைய மாயங்கள் நிகழ்கின்றன, அத்தனை சங்கதிகள்! யுகபாரதியின் அருமையான இந்தப் பாடலின் ஒவ்வொரு சொல்லிலும் காதல் இழைகளை அப்படி இழைக்கிறார் இசை அமைப்பாளர் நிபுணன் மன்னிக்க.. திபு நினன் தாமஸ் (Dhibu Ninan Thomas).

‘கண்கள் ஏதோ தேட, களவாட, நெஞ்சம் தானே பாட, பறந்தோட’ என்று அவள் முன்னெடுக்கும் சொற்களில் ஒரு காதல் கருக்கொண்டு உருக்கொண்டு பித்தேறிய காலத்தின் கதையைச் சிக்கனச் சொற்செட்டாகக் கொட்டுவதுபோல் அமைகிறது பல்லவி. அங்கே இணையும் அவன், ‘அடி ஒவ்வொரு ராப்பொழுதும் ஒன்ன அப்படி நான் ரசிச்சேன்...உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே...’ என்கிற இடத்தில், அந்த ‘ஓ.. ஓ.. ஓ..’ ஹம்மிங் ரசனையைக் கூட்டுகிறது.

‘ஓர் ஆயிரம் வானவில்ல உன் பூவிழி காட்டுதடி ...அத சட்டுனு நீ மறைச்சா நா என்ன செய்வன் புள்ள...’ எனும்போது. காதலின் அழுத்தமும், பாசாங்கு வருத்தமும் அமர்க்களமாக வந்து விழுகின்றன. பல்லவியின் முதல் வரிகளை நாயகி மீண்டும் எடுக்கையில், வேகமெடுக்கிறது இசைக்கருவி இதயத் துடிப்பாகவே.

பிரதீப் குமார், கார்த்திகா வைத்தியநாதன் இணைக் குரல்களில் பாடலின் பல்லவியே ஈர்த்துவிட, முதலும் முடிவுமான ஒரே சரணத்தை நோக்கிய திசையில் காதலின் குழைவுக்கேற்ற குழலிசை பிறக்கிறது. காதலின் ஏக்கங்களை, கனவுகளை, கற்பனைகளை எல்லாம் பிழிந்து பொழிந்தபடி போய்க் கொண்டே இருக்கிறது. ‘நீ பேசும் பேச்சு அய்யோ அள்ளிடுதே’ என்கிற வரியில் காதல் இன்னும் அள்ளிக்கொண்டு போகிறது. கார்த்திகாவின் சின்ன சிரிப்பொலி அதைப் பிரதிபலிக்கிறது.

‘என்னென்னவோ ஒங்கிட்ட சொல்லவும் தோணுதடா.... காதல் வந்தே சட்டுன்னு சல்லடா போடுதடா’ என்று கார்த்திகா எடுக்கும் ஒவ்வொரு சொல்லிலும் கொஞ்சுகிறது அந்தக் காதல்! தொடரும் பிரதீப், ‘நடு நெஞ்சுல ஒன்னோட வாசம்...’ என்று வேகமாக எடுத்து, ‘என்ன ஏதேதோ பண்ணுதடி...’ என்று இறக்கி, மிதமான கதியில், ‘தாங்காத சந்தோஷம்...’ என்று விவரித்து, ‘நான் என்ன செய்வன் புள்ள’ என்று வந்து நிற்க, இதயத் துடிப்புகள் மீண்டும் கூடுகின்றன.

பல்லவிக்கு மீளும் இடத்தில் பாடல் வரிகள் முடிந்தாலும் இசைக்கருவிகள் இன்னும் இதமாகவும் பதமாகவும் காதலை விவரித்துக்கொண்டே போக, இதயத் துடிப்புகளின் சிறகடிப்போடு அபாரமாக நிறைவு பெறுகிறது பாடல்.

இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இந்தப் பாடலைக் காட்சிப்படுத்தும் திசையில் காதலர்களோடு சுருக்கிக் கொண்டுவிடாமல், திரைக்கதையின் மையக் கதாபாத்திரங்களது பரஸ்பரம் நெருக்கமான வாழ்க்கையைக் கவித்துவமாகப் படைத்துவிட முடிவது, பாடலை இன்னும் அழகாக்கிவிடுகிறது.

- venu@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in