

நீ
ண்ட காத்திருப்புக்குப் பின் ‘களவாடிய பொழுதுகள்’ வெளியாகியிருக்கிறது. பொங்கலுக்கு ‘குலேபகாவலி’ வெளியாகிறது. தொடர்ந்து ‘மெர்குரி, ஏ.எல். விஜய் இயக்கும் நடனத்தை மையமாகக் கொண்ட படம்,‘சார்லி சாப்ளின்’ படத்தின் இரண்டாம் பாகம்,‘எங் மங் சங்’, இந்தியில் சல்மான்கானை வைத்து இயக்கவிருக்கும் ‘தபாங்க் 3’ படத்தின் கதை விவாத வேலை என்று ஒரு வலசைப் பறவையாய்ச் சுற்றி வருகிறார் பிரபுதேவா. ‘தி இந்து’ தமிழுக்காக அவரிடம் பேசியதிலிருந்து…
பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் ‘குலேபகாவலி’யில் எப்படிப்பட்ட பிரபுதேவாவைப் பார்க்கலாம்?
‘தேவி’ படம் வெளியான பிறகு தமிழில் நிறைய புதிய இயக்குநர்கள் புதுப்புது ஐடியாக்களோடு வந்து கதை சொன்னாங்க. அப்படித்தான்‘குலேபகாவலி’ கதை என்னைத் தேடி வந்தது. அதைத் தேர்வு செய்யக் காரணம் தயாரிப்பாளர் ராஜேஷ்தான். படப்பிடிப்பு முடிந்து முழுப் படம் தயாரானதும் கதை கேட்கும்போது என் கூட இருந்த நண்பர்கள் சிலரை அழைத்துப் படத்தைப் பார்க்கச் சொன்னேன். “இயக்குநர் கதை சொன்ன மாதிரியே படம் நல்லா வந்திருக்கு. இதுதான் பொங்கல் படம்”ன்னு சந்தோஷத்தோட சொன்னாங்க. இந்தப் படத்துல பதினைந்து, இருபது வருஷங்களுக்கு முன்பு இருந்த பிரபுதேவாவை நீங்க திரும்பவும் பார்க்கலாம். படத்தில் பாடல்களுக்கும் எனர்ஜியான நடனத்துக்கும் முக்கியத்துவம் இருக்கு. அதைச் சிறப்பாகக் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் கல்யாண்.
படத்தோட நாயகி ஹன்சிகா என்ன சொல்றாங்க?
இதுல முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிச்சிருக்கோம். இதுக்கு முன்பு ஹன்சிகாவை வைத்துப் படம் இயக்கியிருக்கிறேன். அப்போ எல்லாமும் சரியா நடக்கணுமே என்று இயக்கத்தில் கவனமாவும் கண்டிப்பாவும் இருப்பேன். அதனால அப்போ என் மேல அவங்களுக்கும் கொஞ்சம் கோபம். ஆனா நடிப்புன்னு வந்துட்டா ஜாலி ஆயிடுவேன். ‘குலேபகாவலி’ படத்துல ஹன்சிகாவோட நடிப்பும் ஜாலியாக இருக்கும். அப்போ என் மேல இருந்த கோபத்தையெல்லாம் இப்போ சுத்தமாக மறந்துட்டாங்க. இதை அவங்களே சொன்னாங்க.
அடுத்தடுத்து ‘மெர்குரி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘எங் மங் சங்’ என்று நடிப்புல செம பிஸியா இருக்கீங்க…
எதுவுமே நான் திட்டமிட்டுச் செய்யவில்லை. அதுவாக அமையும்போதும் அதைத் தவிர்ப்பதுமில்லை. புதிதாக வரும் இயக்குநர்கள் வேற மாதிரி துடிப்பா இருக்காங்க. என்னைச் சந்தித்துக் கதை சொல்பவர்களும், ‘சார் நீங்க திரும்பவும் நடிக்க வந்தது நல்லதாப் போச்சு. ஈஸியா உங்களை ரீச் பண்ணி கதை சொல்லிட முடியுது’ன்னு சந்தோஷத்தோடு சொல்றாங்க. நல்ல கதையோட வர்றவங்க என்னை எளிதா தொடர்புகொள்ள முடிதுங்கிறதுல எனக்கும் சந்தோஷம்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நீங்க நடிக்கிற படம் நடனத்தை மையமாகக் கொண்டதுன்னு செய்தி வெளியானதே?
ஆமாம். விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் ‘லட்சுமி’ படத்தில் நடனப் பின்னணிதான் கதைக் களம். படத்தில் ஒரு சின்னப் பொண்ணு நடிக்கிறாங்க. என்னைவிட இரண்டு மடங்கு அதிகமாகக் கலக்கியிருக்காங்க. படம் பார்த்ததும் இதைச் சொல்வீங்க.
‘சார்லி சாப்ளின்-2’ எப்படித் தொடங்கினீங்க?
‘சார்லி சாப்ளின்’ பட இயக்குநர் ஷக்தி சிதம்பரம் சாரைச் சந்திச்சப்போ, ‘‘ ‘சார்லி சாப்ளின்-2’ பண்ணலாமா என்று யதார்த்தமாகக் கேட்டேன். அந்த ஐடியா அவருக்கு ரொம்பவே பிடித்துப்போய் உடனே கதை தயார் செய்து வந்து சொல்லி அசத்திவிட்டார். அப்படி ஆரம்பித்த படம்தான் இது.
நீங்க இயக்கவிருக்கும்‘தபாங்க் 3’ எப்போ தொடங்குகிறது?
இப்போகூட அந்தப் படத்தோட கதையிலதான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பை மே அல்லது ஜூன் மாதத்தில் தொடங்கத் திட்டமிடுகிறோம். சல்மான்கான் ஹீரோ என்பதால் எதிர்பார்ப்பு எக்கசக்கமா எகிறிகிட்டே இருக்கு. சண்டை, பாட்டு, மாஸ் என்று அத்தனையும் கதையில இருக்கும்.
தமிழில் அடுத்து இயக்கம் எப்போ?
இந்தியில் ‘தபாங்க் 3’ தொடங்குறதுக்கு முன்பு நவம்பரில் வேற ஒரு இந்திப் படத்தை லண்டனில் எடுக்கத் திட்டமிட்டிருந்தோம். அந்த நேரத்துல அங்கே கடுமையான குளிர். தினமும் மாலை 3 மணிக்கெல்லாம் இருள் வந்துடும். அதனால் ஒரு சின்ன இடைவெளி விழுந்தது. அந்த இடைவெளியில்தான் இங்கே ‘சார்லி சாப்ளின் 2’ படத்துல நடிச்சேன். இப்படி நேரம் அமைவதை வைத்து என் வேலைகளை நான் முடிவு செய்துக்கிறேன். தமிழ்ல மீண்டும் இயக்க வருவதும் அப்படித்தான். சரியாக நேரம் அமையும்போது அது நடக்கும்.
ஜிஎஸ்டி, டிக்கெட் கட்டண உயர்வு, கந்துவட்டி என்று தமிழ் சினிமாவுக்கு நெருக்கடி அதிகமாகிக்கொண்டே போகுதே?
பைரசி தொடங்கி பல பிரச்சினைகள் இருந்துகிட்டேதான் இருக்கு. அதையும் மீறி சினிமா இருந்துகொண்டுதானே இருக்கு. பொதுவான விஷயம் என்று வரும்போது அரசியல்வாதிகள், சினிமா, ஊடகங்கள் என இங்கே எல்லோரது உதவியும் ஒவ்வொருவருக்கும் மாறி மாறித் தேவைப்படுது. அதை நாம பயன்படுத்திக்கொள்ளவும் செய்றோம்.இதை உணர்ந்து செயல்பட்டாலே பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.