Last Updated : 13 Oct, 2023 06:06 AM

 

Published : 13 Oct 2023 06:06 AM
Last Updated : 13 Oct 2023 06:06 AM

எல்லா காலத்துக்கும் பொருந்தும் கிரேஸி மோகனின் வசனங்கள்! - மாது பாலாஜி நேர்காணல்

கதை, வசனகர்த்தா, நாடக ஆளுமை, நடிகர், மறைந்த கிரேஸி மோகனும் அவரது ராஜபாட்டையைத் தொடரும் அவருடைய தம்பி மாது பாலாஜியும் இணைந்து தொடங்கிய நாடகக் குழு ‘கிரேஸி கிரியேஷன்ஸ்’. அக்குழு 44ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இன்று மாலை சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் இந்து தமிழ் திசையின் ‘யாதும் தமிழே - தமிழ் திரு’ விருது விழாவின் தொடக்க அம்சமாக, மாது பாலாஜி தனது குழுவினருடன் இதுவரை 1099 முறை மேடையேறிய ‘சாக்லேட் கிருஷ்ணா’ நாடகத்தை நடத்துகிறார். அதற்குமுன், ஒரு மாலை வேளையில் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.

நீங்கள் கல்லூரியில் படிக்கும்போது அண்ணனாக கிரேஸி மோகன் உங்களுக்கு நாடகங்கள் எழுதத் தொடங்கிய நினைவுகளைப் பகிர முடியுமா?

மோகன் பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோது முதல் முதலில் ‘தி கிரேட் பேங்க் ராபரி’ என்கிற நாடகத்தைப் போட்டார். அதற்கு ஏகப்பட்டப் பாராட்டுகள். அதன்பிறகு அவருக்கு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது நான் கல்லூரியில் சேர்ந்திருந்தேன்.

அவர் எனக்காகக் கல்லூரியில் நாடகம் போடத் தொடங்கினார். அவர் எழுதியதை வைத்து, நான் நடித்துச் சிறந்த நடிகர் விருதைப் பெற்றுக்கொண்டு வந்துவிடுவேன். அப்போதே நா.பார்த்தசாரதி, சுஜாதா, ஜெயகாந்தன் போன்றவர்களிடமிருந்து சிறந்த நடிகர் விருதைப் பெற்று வந்தேன். இவையெல்லாம் சேர்ந்துதான் எங்களுக்கென்று ஒரு நாடகக் குழுவைத் தொடங்கும் உந்துதலைக் கொடுத்தது. அதுதான் ‘கிரேஸி கிரியேஷன்ஸ்’.

‘கிரேஸி கிரியேஷன்ஸ்’ நாடகங்களைக் காண சினிமா பிரபலங்கள் படையெடுத்தார்கள் இல்லையா?

ஆமாம்! 1979இல் கிரேஸி கிரியேஷன்ஸை தொடங்கினோம். ‘அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும்’ தான் முதல் நாடகம். அதற்கு முன்பே எஸ்.வி.சேகருக்கும் காத்தாடி ராமமூர்த்திக்கும் மூன்று நாடகங்களை கிரேஸி மோகன் எழுதியிருந்தார். எங்களின் இரண்டாவது நாடகம் ‘மேரேஜ் மேட் இன் சலூன்’.

அந்த நாடகத்தைத்தான் ‘பொய்க்கால் குதிரைகள்’ என்கிற பெயரில் கே. பாலசந்தர் திரைப்படமாக இயக்கினார். கிரேஸி மோகன் சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்க அந்த நாடகம்தான் முதல் படியாக அமைந்தது. 1988இல் கமல்ஹாசனுடன் இணைந்து தொடர்ச்சியாக சினிமாவில் பயணிக்கத் தொடங்கினார் மோகன். அதே நேரத்தில் நாடகத்திலும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தோம்.

உங்களுடைய குழுவின் புகழ்பெற்ற நாடகங்கள் பற்றி..

எங்கள் நாடகங்களில் ‘மேரேஜ் மேட் இன் சலூன்’, ‘மாது 2’, ‘மீசையானாலும் மனைவி’, ‘சேட்டிலைட் சாமியார்’, ‘ஜுராஸிக் பேபி’, ‘சாக்லெட் கிருஷ்ணா’ போன்றவை புகழ்பெற்ற நாடகங்கள். இதில் ‘மேரேஜ் மேட் இன் சலூன்’, ‘மாது 2’, ‘மதில் மேல் மாது’ போன்றவை 200 - 300 காட்சிகளைக் கடந்து இப்போதும் வெற்றிகரமாக மேடையேறிக் கொண்டிருக்கின்றன. கடந்த 44 ஆண்டுகளில் உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 6,500 காட்சிகளை நடத்தி முடித்திருக்கிறோம். அவற்றில் அமெரிக்காவில் மட்டும் 160 காட்சி களை ‘சாக்லேட் கிருஷ்ணா’ கடந்திருக்கிறது.

உங்கள் நாடகக் குழுவில் பயணித்தவர்கள், பயணித்துக் கொண்டிருப்பவர்கள் பற்றிச் சொல்ல முடியுமா?

அன்றைக்கு அப்பா கேரக்டரில் நடிக்கத் தொடங்கிய ரமேஷ் இன்றைக்கும் நடித்துக் கொண்டிருக்கிறார். சுந்தர்ராஜன், பார்த்திபன், ரவி, சத்தியமூர்த்தி, செகரட்டரி ஜி. சீனிவாசன், இயக்குநர் காந்தன் (மௌலியின் சகோதரர்) ஆகியோர் எங்கள் குழுவில் இன்றும் பயணிக்கின்றனர்.

எங்கள் நாடகங்கள் வெற்றி பெற்றதற்கு கிரேஸி மோகனின் வசனமோ, எங்கள் நடிப்போ மட்டும் காரணம் கிடையாது. 44 ஆண்டுகளாக எந்தக் கருத்து வேறுபாடுகளும் இல்லாமல், ஒற்றுமையாக ஒரே குழுவாகப் பயணித்துக் கொண்டிருப்பதுதான் காரணம்.

‘சாக்லெட் கிருஷ்ணா’வுக்கு மட்டும் ஒரு தனி மவுசு உருவானது எப்படி?

குழந்தைகளுக்காகவே ஒரு நாடகம் எழுத வேண்டும் என்று 2008இல் கிரேஸி மோகன் எழுதியதுதான் ‘சாக்லெட் கிருஷ்ணா’. கடவுள் கிருஷ்ணர் ஒரு சாமானியனான மாதுவைச் சந்திக்க வருவதுதான் கதை. குழந்தைகளுக்குக் கிருஷ்ணரைப் பிடிக்கும். சாக்லெட்டையும் பிடிக்கும். நகைச்சுவையையும் குழந்தைகள் ரசிப்பார்கள்.

அதனால்தான் நாடகத்துக்கு ‘சாக்லெட் கிருஷ்ணா’ என்று பெயர் வைத்தார். நாங்கள் நினைத்ததுபோலவே குழந்தைகளை அந்த நாடகம் ஈர்த்தது. அமெரிக்காவில் நாடகம் போட்டபோதுகூட அங்கிருக்கும் குழந்தைகள் நாடகத்தைப் பார்க்க வந்திருந்தனர். இதுதான் அந்த நாடகத்தின் பலம். தமிழ் நாடக மேடையில் இதுவரை எந்த நாடகமும் செய்யாத சாதனையாக 1099 காட்சிகளைக் கடந்திருக்கிறது ‘சாக்லெட் கிருஷ்ணா’.

கிருஷ்ணர் வேடத்தில் கிரேஸி மோகன் மீசையுடன் தோன்றியதைப் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டது எப்படி?

கிரேஸி மோகன் எப்போதும் மீசையுடன்தான் இருப்பார். நாடகம் போடும்போது கிரேஸி மோகன் மீசையை எடுத்துவிட்டு வருவார் என்று நினைத்தேன். ஆனால், “மீசையை எடுக்கப் போவதில்லை, மீசையோடு தான் நடிக்கப் போகிறேன்” என்று சொன்னார். மேடையில் நான், ‘‘கிருஷ்ணா, நீ மீசை வைத்திருக்கிறாயே, ஷேவ் செய்துவிட்டு வருவாய் என்றல்லவா எதிர்பார்த்தேன். இப்படி ஒரு கிருஷ்ணரை எதிர்பார்க்கவில்லையே?” என்று வசனம் பேசுவேன்.

அதற்கு, கிருஷ்ணர், ‘‘திரு வல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்று பார்! அங்கே பள்ளிகொண்டிருக்கும் பெருமாள், பாரதியார் மீசையைப் போல் பெரிய மீசையை வைத்துக் கொண்டிருப்பார். நானும் அந்த மாதிரிதான்’’ என்று சொல்வார். இதைப் பார்வையாளர்கள் ரசித்து ஏற்றுக்கொண்டனர். அப்போது பார்வையாளரில் ஒரு பெண், “நீங்கள் கிருஷ்ணராக நடிக்கிறீர்கள் என்றால் பேண்ட் போட்டுக்கொண்டுகூட நடியுங்கள். ஆனால், எங்களுக்கு நல்ல நகைச்சுவை வேண்டும். அவ்வளவுதான்!” என்றார்.

கிரேஸி மோகன் இருந்த இடத்திலிருந்து பணியை மேற்கொள்வது உங்களுக்குச் சுமையா, சுகமா?

அதைப் சுமையென்று சொல்லக் கூடாது, பெரிய சுகம். மோகன் இறந்த பிறகு நாடகம் போடலாமா, வேண்டாமா என்ற விவாதம் எங்களுக்குள் எழுந்தது. அப்போது குழுவிலிருக்கும் எல்லாரும் நாடகம் போட வேண்டும் என்று ஒருமித்தக் கருத்தில் சொன்னார்கள்.

கமல்ஹாசன்கூட போன் செய்து “நீ நாடகத்தை விட்டுவிடக் கூடாது, தொடர்ந்து நடத்து” என்றார். கிரேஸி இறந்துபோன அந்த மாதமே நாடகத்தை நடத்தச் சொன்னார். நான் வந்து பார்ப்பேன் என்றார். கிரேஸி மோகன் இறந்த பிறகு இதுவரை 150 காட்சிகளுக்கும் மேல் நாடகத்தை நடத்திவிட்டோம்.

கிரேஸி மோகன் ஏற்று நடித்த நாடகங்களில் அவருக்குப் பதிலாக இப்போது நடிப்பது யார்?

ரவிஷங்கர். அவரும் எங்கள் குழுவில் தொடக்கத்தி லிருந்தே இருக்கிறார். இப் போது கிருஷ்ணராக அவர்தான் நடிக்கிறார். அவரையும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண் டார்கள். மோகன் பாத்திரத்தில் யார் நடித்தாலும் ஏற்றுக்கொள்ளும்படி வசனங்களை எழுதியிருப்பதுதான் கிரேஸியின் சிறப்பு.

அவர் உயிருடன் இருக்கும் போதே ரவிஷங்கரை தயார் செய்தார். இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு, ரவிஷங்கரை அழைத்து “என்னுடைய கதாபாத்திரங்களை எல்லாம் நீ பார்த்துக்கொள். இது பின்னால் உனக்கு உதவும்” என்று கிரேஸி சொன்னார். மோகன் இருக்கும்போதே அவருடைய வசனங்களை எல்லாம் ரவிஷங்கர் பார்த்துக் கொண்டார். அது அவருக்குக் கஷ்டமாகவும் தெரியவில்லை.

கிரேஸி கிரியேஷன்ஸ் நாடகங்களில் காலத்துக்கு ஏற்ப வசனங்களில் திருத்தம் செய்வதுண்டா?

கிரேஸி மோகனின் பலமே 1979இல் இயற்றிய நாடகத்தை இப்போதும் நடத்த முடிவதுதான். அந்த நாடகங்களில் லேட்டஸ்ட் விஷயங்கள் எதையும் அப்டேட் செய்வதில்லை. எல்லா காலத்துக்கும் அந்த வசனங்கள் பொருந்திப் போகின்றன. அதற்கேற்பதான் வசனங்களை கிரேஸி மோகன் எழுதியிருக்கிறார். நாடகங்கள் ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் விஷயங்கள் என்பதால் அதில் பெரும்பாலும் வசனங்கள் மாறுவதற்கு வாயப்பில்லை.

44ஆவது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு என்னென்ன நிகழ்ச்சிகளை முன்னெடுக்கிறீர்கள்?

வரும் 15ஆம் தேதி, சென்னை வாணி மஹாலில் நடைபெற உள்ள விழாவில் ‘கிரேஸி மோகன் எக்ஸலன்ஸ்’ விருதை உமையாள்புரம் கே.சிவராமனுக்கு வழங்குகிறோம். கமல்ஹாசன், ரவி அப்பாசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அந்த விருது நிகழ்வின் முக்கிய அம்சமாக ‘சாக்லெட் கிருஷ்ணா’ நாடகத்தை நடத்துகிறோம். இதற்கான டிக்கெட்டுகளை 'Book my show' இணையதளம் வழியாகவும் 9444027202, 9841049386 ஆகிய எண்களிலும் தொடர்புகொண்டு புக் செய்துகொள்ளலாம்.

கிரேஸி மோகன் நினைவாக நாடகம் ஒன்றை அரங்கேற்றப் போவதாகச் செய்திகள் வெளியானதே?

அந்த நாடகத்தை வரும் ஜனவரியில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். நாடகத்தின் பெயர் ‘வீட்டோடு மாப்பிள்ளை’. இந்த நாடகத்துக்கான கதை, வசனம் முழுவதையும் கிரேஸி மோகன் அவரது இறப்புக்கு முன்பே எழுதி முடித்துவிட்டார்.

சினிமாவில் கிரேஸிமோகனுடன் இணைந்து நீங்கள் பணியாற்றிய அனுபவம் உண்டா?

எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. என்றாலும் இரண்டு படங்களில்தான் நடித்திருக்கிறேன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். என்னை நம்பியும் நாடகங்களை நம்பியும் பத்துக்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். என் நாடகங்களில் நடித்த ஒருவரும் சினிமாவுக்குச் செல்லவில்லை. நான் சினிமாவுக்குச் செல்ல வேண்டியிருந்தால் நாடகத்தைத் தியாகம் செய்ய வேண்டியிருந்திருக்கும். அதனால், சினிமாவுக்குச் செல்வதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. இந்தப் புகழே எனக்குப் போதுமானது.

மாது என்ற பெயர் உங்களுடன் ஒட்டிக்கொண்டது எப்படி?

இப்போது பாலாஜி என்று என்னை சொன்னால் யாருக்கும் தெரியாது. மாது பாலாஜி என்று சொன்னால்தான் தெரியும். ‘எதிர்நீச்சல்’ படத்தில் நாகேஷ் சாரின் பெயர் ‘மாடிப்படி மாது’. கிரேஸி மோகன் முதன்முதலில் ‘அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும்’ நாடகத்தை எழுதியபோது ‘மாடிப்படி மாது’ என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினார். அப்போது இனி எல்லா நாடகங்களிலும் மாது என்ற கதாபாத்திரத்தை வைத்துவிடுவோம் என்று கிரேஸி மோகன் முடிவெடுத்தார். இப்போது அது ஒரு சாதனையாகவே மாறிவிட்டது. கடந்த 44 ஆண்டுகளாக ஒரே கதாபாத்திரப் பெயரில் நடித்திருப்பது நானாக மட்டும்தான் இருக்க முடியும்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாடகங்களுக்கு வரவேற்பு இருக்கிறதா?

கடந்த ஐந்து ஆண்டுகளாக நாடகங்களுக்குக் கொஞ்சம் மவுசு குறைந்துள்ளது உண்மைதான். ஆனால், எங்கள் நாடகங்களுக்கு இன்னமும் கூட்டம் வந்துகொண்டுதான் இருக்கிறது. மக்களுக்கு டி.வி, சினிமா, கிரிக்கெட், செல்போன் என்று அவர்களை திசைதிருப்ப வெவ்வேறு விஷயங்கள் வந்துவிட்டன. எல்லாவற்றையும் மொபைலிலேயே பார்த்துவிடுகிறார்கள். இப்போதும் எங்கள் நாடகங்களுக்கு அரங்கு நிறைந்த வரவேற்பு இருப்பதை நீங்கள் நேரில் வந்தால் பார்க்கலாம். அதற்குக் காரணம் மக்களுக்குப் பிடித்த நாடகங்களை போட்டால் வரவேற்பார்கள். இந்த டிஜிட்டல் யுகத்தில் இளைய தலைமுறையினரும் எங்கள் நாடகங்களைக் காண நேரடியாக வருகிறார்கள். அப்படி வருவதால்தான் எங்களால் நாடகங்களைத் தொடர்ந்து நடத்த முடிகிறது.

கிரேஸி மோகனின் நாடகங்களை டிஜிட்டல் ஆக்கம் செய்யும் யோசனை இருக்கிறதா?

கிரேஸி மோகனின் நாடகங்களை டிஜிட்டல் ஆக்கம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறோம். இரண்டு நாடகங்களை ஓ.டி.டி. தளங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். எதிர்காலத்தில் இதுதான் இருக்கப்போகிறது. ஏற்கெனவே கிரேஸி மோகன் பெயரில் யூடியூப் அலைவரிசை இருக்கிறது. அதில் ‘பூம்பூம் வே’ என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறோம். அவருடைய நாடகங்களையும் அதில் வழங்குகிறோம். 2024இல் ஒரு முழுநீள டிஜிட்டல் நாடகம் நடத்த வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. அதற்கான அனுமதி கிடைத்தவுடன் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம்.

- karthikeyan.di@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x