

“பல நாடுகளுக்குப் பயணித்திருக்கிறார் அப்பா. எந்தவொரு விமான நிலையத்திலும் எந்தப் பாதுகாப்பு அதிகாரியும் அவரைச் சோதனைக்காக நிறுத்தியதேயில்லை. அந்த அளவுக்குத் தன்னை ஓர் ஐரோப்பியக் கனவான்போல் உடையலங்காரம், உயர்தரத் தோற்றம், ஆகியவற்றுடன் மிடுக்கு குறையாமல் ஒரே சீரான உடல்மொழியில் தன்னை வெளிப்படுத்திய விதம் அப்படி"
- ஒரு பேட்டியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி அவருடைய மூத்த மகன் ராம்குமார் கூறிப் பிரமித்த வார்த்தைகள். வெறும் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்து, ஏழாம் வயதில் நாடகக் குழுவில் சேர்ந்து, இருபத்தி ஆறாவது வயதில் தமிழ் சினிமாவை ஆளத் தொடங்கிய சிவாஜி கணேசனின் எண்ணற்ற திறமைகளில் ஒன்று ஒப்பனைக் கலைத்திறன்.
சோதனைக் களம்: நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த, சிவாஜிக்கு முந்தைய தலைமுறை நடிகர் களில் மீசை வைத்துக்கொள்வதைக்கூட பெரிய மாற்றமாக நினைத்த நடிகர்களே அதிகம். நடிகர் திலகமோ திரை வெளியில் ஒப்பனையின் முக்கியத்துவம் உணர்ந்து, அதன் எல்லா எல்லைகளையும் பரிசோதனை செய்து பார்த்தவர்.
அதில் பல புதுமைகளையும் செய்தவர். தனது நாடக வாழ்க்கையில் ‘ஸ்திரி பார்ட்’ போடும் காலத்தி லிருந்தே கதாபாத்திரத்துக்கான ஒப்பனையில் தனது கற்பனைத் திறனுக்குச் சோதனைக் களமாகத் தனது உடலையும் முகத்தையும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்.
யாருடைய சாயலும் இல்லாமல் நடிப்பதே பெரிய விஷயமாக இருக்கும் திரையில், தான் ஏற்று நடித்த எந்தக் கதாபாத்திரத்தின் ஒப்பனையையும் அதன் சாயலையும் இன்னொரு கதாபாத்திரத்துக்கு அவர் கொண்டு வந்ததேயில்லை. செல்வந்தராக, வயோதிகராக, மாற்றுத்திறனாளியாக, மெத்தப் படித்தவராக, எழுத்தறிவற்ற எளிய மனிதனாக, முதியவராக, மன்னனாக, தேச பக்தராக, விவசாயியாக என அவரைத் தேடி வந்த கதாபாத்திரங்களில் ஒன்றைப்போல் பிறிதொன்றின் தோற்றம் இருக்கக் கூடாது என தன்னைக் கதாபாத்திரத்துக்கான தோற்றத்தில் கட்டமைத்துக் கொண்டது அவரின் தனிச்சிறப்பு. அவரது நடிப்பை, உடல் மொழியை, இரண்டு கால்களில் நடந்த இருநூறு நடைகளை, கதை பேசும் கண்களைப் பயன்படுத்திய விதத்தை என சலிக்காமல் ஆராயலாம்.
உடை - ஒப்பனை - உடல்மொழி: அவர் தன்னுடைய ஒப்பனையை 80 சதவீதம் அவரே செய்து கொள்வார். மேலும், ஒப்பனைக்கான ‘கண்டியூனிட்டி’யில் எந்தத் தோற்ற மாறுபாடும் வந்துவிடாமல் இருக்க அந்தப் பொறுப்பையும் தானே பார்த்துக்கொள்வார். அறிமுகப் படத்தில் பர்மாவிலிருந்து திரும்பும் பணக்கார குணசேகரனாக சூட் அணிந்தும் பின்னர் பரம ஏழையாகவும் இரு வேறு உடையலங்காரத்தில் தோன்றியிருப்பார்.
‘திரும்பிப் பார்’, ‘எதிர்பாராதது’, ‘புதிய பறவை’, ‘உயர்ந்த மனிதன்’, ‘வசந்த மாளிகை’, ‘தெய்வமகன்’, ‘அந்த நாள்’, ‘சொர்க்கம்’ எனப் பல படங்களில் சூட் அணிந்த பணக்கார கனவானாகத் தோன்றியிருப்பார். ஆனால் ஒரு சூட் போல் இன்னொரு சூட் இருந்ததில்லை. ஒரு தோற்றம் போல் இன்னொன்று இருந்ததேயில்லை. ‘எதிர்பாராதது’, ‘பாசமலர்’, ‘தங்கப் பதுமை’. ‘பாலும் பழமும்’ ஆகிய நான்கு திரைப்படங்களில் சிவாஜி பார்வைத்திறனற்றவராக நடித்திருக்கிறார். இந்தக் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றிலும் ஒப்பனையில் தனித்த வேற்றுமை காட்டியிருந்தார்.
ஒரே மெல்லிய மஸ்லின் சட்டையை ஒரு காதல் பாட்டுக்காகவும் (ஆஹா மெல்ல நட..) அதையே ஒரு சோகத் தத்துவப் பாடலுக்கும் (எங்கே நிம்மதி..) உபயோகப்படுத்தி நுட்பமாகக் கையாளத் தெரிந்திருந்தது அவருக்கு. இன்னும் கூடச் சொல்லப்போனால் ஒரு கதாபாத்திரம் புகைபிடித்தது போல், அவர் ஏற்ற இன்னொரு கதாபாத்திரம் புகை பிடித்ததில்லை.
நிஜ வாழ்வில் தன்னுடைய தம்பி சண்முகத்தின் கற்றைப் புருவத்தை அப்படியே படியெடுத்து ‘பாசமலர்’ ராஜசேகரனுக்கும் ‘தெய்வ மகன்’ கண்ணனுக்கும் வைத்து வித்தியாசம் காட்டியிருப்பார். ‘பாவ மன்னிப்பு’ படத்தில் அமிலத் தழும்பு கொண்ட ரஹீம் கதாபாத்திர ஒப்பனைக்கு அவரே தான் முன்னோடி.
வெவ்வேறு மன்னர்கள்: ‘உத்தமபுத்திரன்’ படத்தில் நல்லவனாக வரும் பார்த்திப னுக்கும் தீயவனாக வரும் விக்கிரமனுக்கும் மீசை, காதணி, தலை வாரும் தொனி, புருவங்கள், உடையலங்காரம் ஆகிய வற்றில் வேறுபாடுகள் காட்டியிருப்பார். வெறும் கண்களால்கூட இரண்டு கதாபாத்திரங்களை வித்தியாசப்படுத்திக் காட்டிவிடக்கூடிய நடிப்பாற்றல் கொண்டவர்தான் நடிகர் திலகம். விக்கிரமன், பார்த்திபனாக இடம்மாறி பத்மினியை சந்திக்கும் காட்சியில் தனது கண்களைக் கொண்டு அவர் அதைச் செய்திருப்பார்.
‘சம்பூர்ண ராமாயணம்’ பரதனின் மீசையற்ற கனிவான முகம், ‘அம்பிகாபதி’யின் கம்மல், ‘கட்டபொம்ம’னின் கம்மல் போக, காதின் மேல் மடலில் கொப்பு என்கிற ஒரு வகைக் காதணியை அணிந்திருப்பார். இப்படி ஆடை, அணிகலன், ஒப்பனை வழியான தோற்ற மாறுபாட்டுடன் உடல்மொழியைக் கலந்து கதாபாத்திரங்களை வேறுபடுத்திக்காட்டும் பரிசோதனைகளைத் தாமே சுயமாக வடிவமைத்து சோதனை செய்து பார்த்தார்.
ஒரே படம் - பல பரிமாணம்: இதிகாசப் புராணப் படங்களின் உச்சமாக ‘திருவிளையாட’லைச் சொல்லலாம். அதில் சிவபெருமான், தருமிக்கு பாடல் தரும் சிவன், மீனவன், விறகு வெட்டி, எனப் பல்வேறு கதாபாத்திரங்களை ஒரே திரைப்படத்துக்குள் தனியொரு நடிகராக ஏற்று ஒவ்வொன்றையும் வெவ்வேறாக நிறுவ முடிந்ததன் பின்னணியில், அவரது நடிப்புத் திறனோடு அவர் கையாண்ட ஒப்பனைத் திறனுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.
‘நான் பெற்ற செல்வம்’ படத்தில் நக்கீரராகவும் சிவபெருமானாகவும் சிவாஜியே இரு வேடங்களில் நடித்திருந்தாலும் இதே கதாபாத்திரம் பின்னொரு நாளில் ‘திருவிளையாட’லில் வரும்போது சிவனுக்கு அவர் காட்டிய வித்தியாசம் ருசிகர மானது. சிவபெருமானுக்கு மீசையும், லேசான பச்சை வண்ணமும் மீனவனாக வந்த கதா பாத்திரத்துக்கு கறுப்பு வண்ணத்தையும் சேர்த்தது அவரது கைவண்ணமே.
தாத்தாவின் தாத்தா: வயோதிகராக வந்த வேடங் களில் கூன்முதுகுக்காரராக ‘தங்கமலை ரகசியம்’, ‘கப்ப லோட்டிய தமிழன்’, ‘பாபு’ எனப் பல படங்களைச் சொல்லலாம். என்றாலும் ‘திருவருட்செல்வர்’ மிகவும் தனித்துவமானது. அப்படத்தில் மன்னர் வில்லவன், சேக்கிழார், சுந்தரர், சிறு தொண்டர், 80 வயது அப்பர் என அபாரம் காட்டிய சிவாஜியின் வயது அப்போது 39 தான்.
அதுவும் ‘ப்ரோஸ்த்தெடிக்’ என்னும் செயற்கை ஒப்பனை தமிழ் திரையுலகில் அறிமுகமாகாத காலத்தில்! ‘திருவருட்செல்வ’ரும் ‘ஊட்டி வரை உறவு’ம் ஒரே வருடத்தில் வெளிவந்த ஒரே நடிகரின் படங்கள் என்று யார் சொன்னாலும் நம்ப முடியாத அளவுக்கு நடிகர் திலகத்துக்குக் கைவரப் பெற்றிருந்த ஒப்பனைக் கலைத்திறன் அவரது கலை வாழ்வுக்கு ஓர் அரணாகவே விளங்கியது.
(இக்கட்டுரையின் நிறைவுப் பகுதி அடுத்த வாரம்)
படங்கள் உதவி: ஞானம்
- tottokv@gmail.com