

ஹாலிவுட்டில் ஒரு மிகப்பெரிய சூப்பர்ஸ்டார், திடீரென்று ஒரு வெப் சீரீஸில் நடித்தால் எப்படி இருக்கும்? பல வருடங்கள் சினிமா உலகை ஆட்டிப் படைத்துவிட்டு, உலகம் முழுக்க ஓடிய பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர் சில்வஸ்டர் ஸ்டாலோன். அவர் ‘துல்சா கிங்’ என்கிற வெப் சீரீஸில் நடித்தபோது அதைப் பலராலும் நம்ப முடியவில்லை. இத்தனைக்கும் இந்த சீரீஸ் வெளியானது 2022 நவம்பரில். உலகெங்கும் வெப் சீரீஸ்கள் நன்கு புரிந்துகொள்ளப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த நேரம்.
யார் வெப் சீரீஸ்களுக்கு வந்தாலும் அதிர்ச்சியோ ஆச்சரியமோ படாமல் அவர்களைப் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளும் காலகட்டம். இருந்தாலும் சில்வஸ்டர் ஸ்டாலோன் திடீரென்று வெப் சீரீஸ் ஒன்றில் வந்து குதித்ததை உலகம் சற்று நம்பமுடியாமல் பார்த்தது என்றே சொல்ல வேண்டும்.
ஏனென்றால், அது கரோனா காலகட்டம். உலகமே வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த நேரம். அப்போது ஹாலிவுட் ஸ்டுடியோக்களுமே என்ன செய்வது என்றே தெரியாமல் படப்பிடிப்புகளைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த காலகட்டம். நடிகர்கள், இயக்குநர்கள் ஆகிய அனைவருமே முடங்கிப்போனதால் அவர்களுக்கே ஒருவிதத் தலைச்சுற்றல் வந்திருந்த காலகட்டம். அவர்களுக்கு எப்போதும் படப்பிடிப்பில் இருக்க வேண்டும். இல்லையென்றால் கை கால் ஓடாது!
வீடடைய மறுத்த இயக்குநரும் நடிகரும் பேரமவுண்ட் ஸ்டுடியோவில் இயக்குநர் டைலர் ஷெரிடன், அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற ‘Yellowstone’ சீரீஸை சூப்பர் ஸ்டார் கெவின் காஸ்ட்னரை வைத்து இயக்கிக்கொண்டிருந்தார். ஏற்கெனவே ஒன்றிரண்டு சீசன்கள் வெளியாகி அந்த சீரீஸ் சூப்பர்ஹிட் ஆகியிருந்தது.
டைலர் ஷெரிடன் ஏற்கெனவே ‘Hell or High Water’ என்கிற திரைப்படத்துக்குத் திரைக்கதை எழுதி, அந்தப் படம் புகழ்பெற்றிருந்தது. அதன்பின் ‘Wind River’ என்கிற படத்தை எழுதி, இயக்கி அந்தப் படமும் பலரையும் கவர்ந்திருந்தது. எப்படித் திகில் படங்களுக்கு நாம் இதற்கு முந்தைய அத்தியாயங்களில் பார்த்த மைக் ஃப்ளானகனோ, அப்படி நவீன வெஸ்டர்ன்களுக்கு டைலர் ஷெரிடன் என்பது எழுதப்படாத விதியாக ஏற்கனவே உருவாகிவிட்டிருந்தது.
அப்போது கரோனா வர, அனைத்தும் முடங்கிய காலகட்டத்தில் பேரமவுண்ட் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர்கள் டைலர் ஷெரிடனிடம் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தபோது, ‘இனி என்ன செய்வது என்றே தெரியவில்லையே?’ என்பதுபோல் சொல்ல, உடனடியாக டைலர் ஷெரிடன் அவர்களிடம், “நாம் செய்யவேண்டியதெல்லாம் அட்டகாசமான ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, ஆடியன்ஸ் முன்பின் அறிந்திராத ஒரு கதைக்களத்தில் அந்தக் கதாபாத்திரத்தை இறக்கிவிடவேண்டியதே! இதை மட்டும் நாம் செய்துவிட்டால் இந்தக் கரோனா காலத்தில்கூட ஒரு பயங்கரமான சீரீஸை எடுக்க முடியும்” என்றார். உடனடியாக பேரமவுண்ட்டின் தயாரிப்பாளர்கள் டைலர் ஷெரிடனுக்கு அந்தச் சுதந்திரத்தை அளிக்க, ஒரே வாரத்துக்குள் டைலர் ஷெரிடன் உருவாக்கிய கதைதான் ‘துல்சா கிங்’ (Tulsa King).
உடனடியாக அவர் மனதில் பளிச்சிட்டது சில்வஸ்டர் ஸ்டாலோனே. இதுவரை ஸ்டாலோன் எந்த வெப் சீரீஸிலும் நடித்ததே இல்லை என்பதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. கதையை எழுதி முடித்ததுமே ஸ்டாலோனின் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார் வீடடைய மனமில்லாத நம் இயக்குநர். ஸ்டாலோனே ஃபோனை எடுக்கிறார்.
அவரிடம் ஃபோனிலேயே டைலர் ஷெரிடன் துல்சா கிங் கதையைச் சொல்ல, அதே மனநிலையில் கரோனாவால் தாமும் சற்றே தளர்ந்துபோயிருந்த ஸ்டாலோன் உடனடியாக உற்சாகமடைகிறார். “நான் ரெடி. எப்போது ஷூட்டிங்?” என்று ஸ்டாலோன் கேட்க, இதை வைத்தே, ஸ்டாலோன் தனது முதல் வெப் சீரீஸில் நடிக்கச் சம்மதித்துவிட்டார் என்று பேரமவுண்ட் ஸ்டுடியோவிடம் பேசி ‘துல்சா கிங்’ வெப் சீரீஸைத் தொடங்கிவிட்டார் டைலர் ஷெரிடன்.
கமலுக்கு ‘விக்ரம்’ போல: ஆனால் ஒரு சிக்கல்! ‘துல்சா கிங்’ உருவாகும்போது டைலர் ஷெரிடன் ஏற்கெனவே அதைச் சேர்க்காமல் எட்டு வெப் சீரீஸ்களுக்கு ஒவ்வொரு எபிசோடாக திரைக்கதை எழுதிக்கொண்டிருந்தார். உலகிலேயே ஒரே சமயத்தில் இத்தனை வெப் சீரீஸ்களுக்குத் திரைக்கதை எழுதியவர் டைலர் ஷெரிடனாகத்தான் இருக்கமுடியும். அவற்றில் பல சீரீஸ்கள், ’யெல்லோஸ்டோன்’ சீரீஸின் முன்னும் பின்னும் நடந்த சம்பவங்களை வைத்து இவரே எழுதி இயக்கிக்கொண்டிருந்த சீரீஸ்கள்.
இதனால் ஒரு முடிவுக்கு வந்தார் ஷெரிடன். ஒரு திரைக்கதை அணியை உருவாக்கினார். அவர்களுக்கு ‘துல்சா கிங்’கின் கதையைப் புரியவைத்தார். அவர்களை வைத்து ஒவ்வொரு எபிசோடாக எழுதவைத்தார். அப்படி உருவான திரைக்கதையைச் சில இயக்குநர்களை அமர்த்திப் படமாக்கினார்.
அப்படி வெளியான துல்சா கிங், சென்ற வருடத்தின் ‘ப்ளாக் பஸ்டர்’ வெப் சீரீஸாக மாறியது. கமல்ஹாஸனுக்கு எப்படி ‘விக்ரம்’ அமைந்ததோ அப்படி ஸ்டாலோனுக்கு ‘துல்சா கிங்’. ஒட்டுமொத்த அமெரிக்காவும் சீரீஸைக் கொண்டாடித் தள்ளிவிட்டது. இதனால் சீரீஸின் இரண்டாம் சீசன் விரைவில் தொடங்கப்போகிறது.
பாவம் ஓரிடம்.. பலி வேறிடம்.. அப்படியென்ன ‘துல்சா கிங்’கின் கதை என்று கேட்டால் மிக எளிமையான கதை இது. பல்லாண்டுகளாக நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு மாஃபியா குடும்பத்துக்கு உண்மையாக உழைத்து வருபவர் ட்வைட் மேன்ஃப்ரெடி (Dwight Manfredi). இளமைக் காலத்திலிருந்தே மிக நேர்மையான கேங்ஸ்டர். தளபதி ரஜினி போல், அந்தக் குடும்பத்துக்காக எதையும் செய்வார்.
ஒருநாள் மாஃபியா பாசின் என்பவனின் மகன் ஒரு கொலையைச் செய்துவிட, அவன் மாட்டிவிட்டால் தனக்குப் பின்னர் மாஃபியா குடும்பத்தைக் கவனிக்க ஆளில்லாமல் போய்விடும் என்பதால் ட்வைட் மேன்ஃப்ரெடியை அழைக்கும் பாஸ், குற்றத்தை ஒப்புக்கொண்டு மகனுக்குப் பதில் மேன்ஃப்ரெடியை சிறைக்குச் செல்லச் சொல்கிறார்.
கூடவே, மேன்ஃப்ரெடி கிடுகிடுவென்று வளர்ந்து வருவதைத் தடுக்க வேண்டும் என்பதும் காரணம், இல்லையென்றால் தன் மகனைத் தாண்டி அவன் வளர்ந்துவிடுவான் என்று லேசாக பயப்படுகிறார் மாஃபியா பாஸ். அந்தக் குடும்பத்துக்காக நேர்மையாகச் செக்குமாடு போல் உழைத்த மேன்ஃப்ரெடி உடனடியாக ஒப்புக்கொண்டு சிறை செல்கிறான். அவனைப் பொறுத்தவரை மாஃபியா பாஸ் என்ன சொன்னாலும் செய்யவேண்டும்.
உள்ளெ சென்ற மேன்ஃப்ரெடி, 25 வருடங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியே வருகிறான். இதுதான் சீரீஸின் முதல் சில நிமிடங்கள் (சிறையிலிருந்து மேன்ஃப்ரெடி வெளியே வருவது அப்படியே ‘கபாலி’ படத்தில் ரஜினி வெளியே வருவதை ஒத்திருக்கும். ‘கபாலி’யைப் பார்த்து நகல் எடுத்துவிட்டார்களோ என்று நான் எண்ணியதுண்டு). நேராக பாசிடம் வருகிறான் மேன்ஃப்ரெடி.
ஆனால் இருபத்தைந்து வருடங்கள் கழித்து வயோதிகத்தின் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள மாஃபியா பாஸ், நோய்வாய்ப்பட்டிருக்கிறார். இந்த இருபத்தைந்து வருடங்களில் மேன்ஃப்ரெடியைப் பார்க்க யாருமே சிறைக்கு வரவும் இல்லை. இந்தக் காலகட்டத்தில் மாஃபியா பாசின் மகன் அடுத்த பாஸ் ஆகிவிட்டான். மேன்ஃப்ரெடியுடன் வேலை செய்த பலரும் இறந்துவிட்டிருக்கிறார்கள். அதாவது, முன்னர் மேன்ஃப்ரெடி இருந்தபோது இருந்த மாஃபியா கும்பலின் சூழல் இப்போது முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது.
இருபத்தைந்து வருடங்கள் சிறையில் செய்யாத குற்றத்துக்குத் தண்டனை அனுபவித்துவிட்டு மாஃபியா பாஸைத் தேடிவந்த மேன்ஃப்ரெடிக்கு என்ன ஆனது? வரும் அத்தியாயத்தில் இன்னும் விரிவாக இந்த சீரீஸைக் கவனிப்போம். இதைப் பற்றிப் பேச இன்னும் நிறைய இருக்கிறது.
‘துல்சா கிங்’ சென்ற வருடத்தின் ‘ப்ளாக் பஸ்டர்’ வெப் சீரீஸாக மாறியது. கமல்ஹாஸனுக்கு எப்படி ‘விக்ரம்’ அமைந்ததோ அப்படி ஸ்டாலோனுக்கு ’துல்சா கிங்’. ஒட்டுமொத்த அமெரிக்காவும் சீரீஸைக் கொண்டாடித் தள்ளிவிட்டது