

‘சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்க கோடம்பாக்கத்துக்கு யாரும் வராதீர்கள்’ என்கிற தொனியில் நடிகர் விஷால் தனது ‘மார்க் ஆண்டனி’ பட விழாவில் பேசியது பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.
‘நாலு கோடிக்குள் படமெடுப்பது குற்றமா, சொல்லுங்க விஷால்?’ என்று கடந்த ஒரு வாரமாக அவரைச் சிறு படத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் துளைத்தெடுத்து வருகின்றனர். காரணம், தமிழ்த் திரையுலகில் 20 லட்சத்திலிருந்து 4 கோடிக்குள் படமெடுக்கிறவர்கள் தான் அதிகம். இப்படி சொன்னால் அவர்களுக்குக் கோபம் வராமல் என்ன செய்யும்? அவர்களின் கோபம் நியாயம் தானே? ’ஏன், இதே விஷாலே தொடக்கத்தில் சின்னப் படங்களில் நடித்துத்தானே இன்று பெரிய கதாநாயகனாக ஆகியிருக்கிறார்?’ பல சின்னப் படங்கள் தானே பெரிய இயக்குநர்களை, நடிகர்களை, இசையமைப்பாளர்களை உருவாக்கி யிருக்கின்றன.
‘ஒரு தலை ராக’த்தில் தொடங்கி இன்னாளின் ‘குட் நைட்’ வரைக்கும் பல சிறு முதலீட்டுப் படங்கள்தான் சிறந்த படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருக்கின்றன? அப்படியிருக்க, இப்படி அபத்தமாக விஷால் எப்படிச் சொல்லலாம்? அதுவும், யாரோ அவருடைய ஒரு நண்பர் நான்கு கோடிப் பணம் போட்டு ஒரு கோடி லாபம் வந்தால்கூட போதும் என்று சொன்னதாகவும், ‘வேண்டுமென்றால் அந்த ஒரு கோடியை எங்கிட்டத் தந்திருங்க இல்லைன்னா அந்த நாலு கோடியும் போயிரும்’ என்று சொன்னதாகச் சொல்லியிருக்கிறார்.
சிறு முதலீட்டுப் படங்களின் நிலை உண்மையிலேயே அப்படித்தான் இருக்கிறதா என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது இல்லையா? இன்றைய யதார்த்த நிலை என்னவென்று பார்த்தால் விஷால் கூற்று சுருக்கென்று குத்திவிட்டாலும் அதில் உண்மை இருப்பதாகவும் சொல்ல முடியும். ஆனால் அதை அவர் சரியாகச் சொல்லவில்லை, அல்லது புரிந்துகொள்ளப்பட்டவிதம் தவறு என்றுதான் தோன்றுகிறது.
சிறு படங்களின் வியாபாரம்: சிறு முதலீட்டுப் படங்களுக்கு முதல் வருமானமே முன்பெல்லாம் ஆடியோ உரிமை, வெளிநாட்டு உரிமை ஆகியவற்றின் விற்பனைதான். ஆடியோ உரிமையை விலை கொடுத்து வாங்கும் காலமெல்லாம் கிட்டத்தட்ட தற்போது ‘போயே போயாச்சு’ என்றே சொல்ல வேண்டும். பெரும்பாலும் அதில் தற்போது ‘ரெவென்யூ ஷேரிங்’ முறைதான். அதையும் மீறி சில படங்களின் வியாபாரம் என்றால் மூன்றிலிருந்து ஐந்தே லட்சத்திற்குள்தான்.
குறிப்பாக ஆடியோ உரிமை வாங்குகிறவர்களுக்கே யூடியூப் வருமானமும் போய் சேரும். 5 வருடங்களுக்கு முன்பு வரை வெளிநாட்டு உரிமை விலை குறைந்தபட்சம் 5 முதல் 15 லட்சம் வரை கிடைத்துக்கொண்டிருந்தது. இன்றைக்கு மலேசியா, சிங்கப்பூர் தொலைக்காட்சிகளுக்கு அனுப்பி, அவர்கள் இரக்கப்பட்டு வாங்கினால் உண்டு. வாங்காவிட்டால், வெளிநாட்டு உரிமை என்பதே கிடையாது.
தற்போது, மலேசியாவில் சிறு முதலீட்டுப் படங்களை வாங்குவது குறைந்துவிட்டது. ஏனென்றால் சிறு முதலீட்டுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது இல்லை. இதனால், அவற்றை எடுத்தவர்கள் நம்புவது, உள்ளுர் திரையரங்க வெளியீட்டு வியாபாரம், தொலைக்காட்சி, ஓ.டி.டி ஆகியவற்றின் விற்பனையை மட்டுமே.
அதேபோல், ஒரு காலத்தில் ‘அவுட் ரேட்’ முறையில் சிறு முதலீட்டுப் படங்களை வாங்கியதுபோல், இப்போது யாரும் விலை கொடுத்து வாங்குவது இல்லை. ஒரு வேளை படம் வித்தியாசமாக இருந்து ஓரளவுக்குத் தெரிந்த நடிகர்கள் நடித்த படமாக இருந்தால், ரிலீஸ் செலவை ஏற்றுக்கொண்டு தியேட்டர் போட்டுக் கொடுக்கிறார்கள். அப்போது தியேட்டர் வசூலில் முதலில் வரும் தொகையை, செலவு செய்து வெளியிட்டுத் தருபவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.
ஒரு வேளை செலவு செய்த தொகை அவர்களுக்கு வசூல் ஆகவில்லை என்றால், அதற்கு ஈடாகப் படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளைப் பணயம் வைத்துத்தான் ரிலீஸ் செய்வார்கள் படத்தைத் தயாரித்தவர்கள். அதுவும் ஓரளவுக்கு மேற்சொன்ன தகுதிகள் படத்துக்கு உண்டென்றால் மட்டுமே தியேட்டர் ரிலீஸ் இன்று சாத்தியம். அந்த தகுதியில் வராத படங்களுக்கு ரிலீஸ் எல்லாம் கடைசிவரை கானல் நீர் தான்.
நான் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் படக்குழுவினரின் அழைப்பின் பேரில் சுமார் 120 சிறு முதலீட்டுப் படங்களைப் பார்த்திருக்கிறேன். அதில் இருபது படங்கள் மட்டுமே ‘ஓகே’ ரகம். அந்த படங்களில் வெறும் எட்டுப் படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகியிருக்கின்றன. அந்த எட்டும் நான் மேற்சொன்ன வியாபார முறையில்தான். சரியான விளம்பர, வியாபார உத்தி எதுவுமில்லாமல், செலவு செய்த சில லட்சங்கள்கூட கிடைக்காமல் உரிமைகளை கொடுத்துவிட்டு நடையைக் கட்டியவர்களே அதிகம்.
பின்வாங்கிய ஓடிடி: கையிலிருந்த அனைத்தையும் போட்டு படமெடுத்தாயிற்று. ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்று படமெடுத்தவர்கள் லட்சியக் கனவுடன் குட்டிப்போட்ட பூனையைப்போல் இருப்புக்கொள்ளாமல் சுற்றிச் சுற்று வருவார்கள். அவர்கள் எடுத்த படங்களில் ஓரளவுக்கு சுமாராக உள்ள படங்களை 5 -10 லட்சம் ரூபாயை ‘சர்வீஸ் சார்’ஜாக வாங்கிக் கொண்டு, சில விநியோகஸ்தர்கள் தங்களது நிறுவனம் பெருமையுடன் வெளியிடும் திரைப்படம் என்று போட்டுக்கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிடுவார்கள்.
வெளியீட்டு செலவுகள் எல்லாம் சேர்த்து சுமார் இருபது லட்சம் வரை செலவு செய்வார்கள். இப்படிப்பட்ட வெளியீடும் 2 - 4 கோடி செலவு செய்த தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே சாத்தியம். இதைவிடக் குறைந்த முதலீட்டில் படமெடுத்த தயாரிப்பாளர்களுக்கு இந்த வகையிலான வெளியீடும் தற்போது சாத்தியமில்லாமல் கதவு அடித்து சாத்தப்பட்டுவிட்டது. ஏனென்றால் அவர்கள் 30 லட்சத்தில் படம் எடுக்கலாம் என்று படத்தைத் தொடங்கி, செலவுகள் இழுத்துக்கொண்டு போனதில் ஒரு கோடியில் போய் நின்றவர்கள்.
அதேபோல், சின்ன படங்கள் எல்லாவற்றையும் ஓடிடியில் வாங்கிவிடுவார்கள் என்று ஒரு காலத்தில் கூப்பாடு போட்டுச் சொன்னார்கள். ஆம்! ஒரு காலத்தில் ஓடிடி நிறுவனங்களும் தரம் பற்றி கவலையின்றி கூப்பிட்டுக் கூப்பிட்டு வாங்கிக் கொண்டுதான் இருந்தார்கள். அப்போது, 50 லட்சத்தில் எடுத்தீர்களோ, இல்லை 5 கோடியில் எடுத்தீர்களோ, உள்ளடக்கமும் உருவாக்கமும் நன்றாக இருந்தால் வாங்கிக் கொண்டுதான் இருந்தார்கள்.
ஆனால், எங்கே சிக்கல் தொடங்கியது என்றால், சில பெரிய இயக்குநர்கள் அவர்களுக்கு உவப்பான கருத்துடைய படங்கள் சுமாரான திரைக்கதை, உருவாக்கத்துடன் இருந்தாலும் பணம் பண்ணும் ஆசையில் அவற்றைத் தேர்வு செய்து, அவர்களின் பட நிறுவனப் பெயரைச் சேர்த்துக் கொண்டு வியாபரத்தில் இறங்கினார்கள்.
அவர்கள் பெயர் இருப்பதாலேயே அதை நம்பி, சாட்டிலைட், ஓ.டி.டி வியாபாரம் சிறப்பாக நடந்தது. ரூ.50 லட்சத்துக்குள் தயாரிக்கப்பட்ட இதுபோன்ற படங்களை இவர்களின் பெயரை ‘லேபிள்’ஆக ஒட்டிக்கொண்டு, ஒரு கோடிக்கும் ஒன்றரை கோடிக்கும் வியாபாரம் செய்ததன் விளைவுதான் இன்று தரமான சிறு படங்களையும் ‘பூமாரங்’ ஆக தாக்கியிருக்கிறது.
அப்படி ’லேபிளை’ நம்பி பார்க்க வந்த ஓடிடி ரசிகர்கள் அவற்றைப் பார்த்து மற்றவர்களிடம் ‘நேரத்தை வீணாக்க வேண்டாம்’ என்று எச்சரித்ததால், நல்ல படங்களையும் சந்தேகக் கண்டு விலக்கி வைத்தனர். இப்படி ‘லேபிள்’ நம்பி ஓடிடிக்கள் வாங்க படங்கள், கொடுக்கப்பட்ட விலைக்கு பார்வையாளர்களைக் கவர முடியாமல் போய்விட்டன. இதனால், இப்போது யார் பெயர் போட்டாலும் முதலில் போய் ‘தியேட்டர் ரிலீஸ் பண்ணிட்டு வா. நல்லா ஓடினா பத்து ரூபா எக்ஸ்ட்ராவாகக்கூட சேர்த்துக் கொடுக்குறேன்’ என்று நக்கலாகக் கூறும் அளவுக்கு ஓடிடிகள் உஷார் நிலைபாட்டை எடுத்துவிட்டன.
பெரிய படங்களின் நிலை: பெரிய நடிகர்கள் படத்தைக் கோடிகள் கொடுத்து வாங்கிய பெரிய ஓடிடிகள்கூட, தற்போது தங்களது தளம் என்றில்லாமல் போட்டியாளராக இருக்கும் மற்ற பெரிய ஓடிடி தளங்களுக்கு ‘ரெவின்யூ ஷேரிங்’ என்கிற வருமான பகிர்வு முறைக்கு படங்களைக் கொடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் ‘விக்ரம்’, ‘ஆர்ஆர்ஆர்’ படங்கள். இப்படங்களின் டிஜிட்டல் உரிமைகளை ஜி5, ஹாட் ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களுக்குள் ‘ஷேர்’ செய்து லாபம் ஈட்ட வேண்டிய நிலைக்குச் சென்றிருக்கின்றன.
இதுதான் இன்று ஓ.டி.டியின் நிலைமை. ஓரளவுக்குத் தெரிந்த நடிகர்கள் நடித்து, 5-6 கோடியில் எடுக்கப்பட்ட படங்கள்கூட விலைக்குப் போகாமல், அமேசான் போன்ற ஓடிடியில் வருமான பகிர்வு முறைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அப்படியாவது பணம் வந்தால் போதும் என்று நினைத்தாலும் எல்லாப் படங்களையும் ஓடிடியினர் வருமானப் பகிர்வு முறைக்கு எடுத்துக்கொள்வதில்லை.
அவர்களுக்கு என்று சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கின்றன. அதற்கு உட்பட்ட படங்களை மட்டுமே ஆதரிக்கிறார்கள். பெரும்பாலும் முகம் தெரிந்த நடிகர்களின் படங்கள். சமயங்களில் சிறு முதலீட்டுப் படங்களும் விதிவிலக்காக இம்முறையில் ஓடிஒடியில் வெளியாகின்றன. அதற்கு உதாரணம் தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் மூலமாக வெளியிடப்பட்ட ’இறுதிப்பக்கம்’, ‘கயமை கடக்க’, ‘எறும்பு’ ஆகிய சிறு முதலீட்டுப் படங்களைச் சொல்லலாம்.
அமேசான் போன்ற ஓ.டி.டிகள் இல்லாமல் மூவிவுட் போன்ற சிறிய ஓடிடி தளங்களிலும் வருமானப் பகிர்வு முறையில் வெளியான தரமான சிறு படங்கள் ஓரளவுக்கு வருமானத்தை ஈட்டி வருகின்றன. என்றாலும், அதற்கும் ஊடகங்களின் தார்மிக விமர்சன உதவியும் நேர்மையான சமூக ஊடக விமர்சன ஊக்குவிப்பும் தேவையாக இருக்கின்றன. ஆனால், இன்று குப்பைகளை ’சூப்பர்’ என்று கொண்டாடும் ‘பெய்ட் ரிவ்யூ’ கும்பல் தரமான விமர்சனங்களின் ஒளியை மறைத்து விடுகின்றன. அதைக் கண்டுபிடித்து பார்க்க பார்வையாளர்களுக்கு நேரமோ முயற்சியோ இருப்பதில்லை.
வெகு சில விதிவிலக்குகள்: சமீபத்தில் ரூ. நான்கு கோடிக்குள் எடுக்கப்பட்ட ‘டாடா’, ‘குட் நைட்’, ‘அஸ்வின்ஸ்’, ‘லக்கி மேன்’ போன்ற படங்கள் திரையரங்கில் வெளியாவதற்கு முன்னரே சாட்டிலைட், ஓ.டி.டி உரிமைகள் விற்பனையாகி, பின்னர் திரையரங்குகளில் விநியோக முறையில் வெளியாகி லாபத்தை சம்பாதித்துக் கொடுத்தன. படம் பார்த்த திருப்தியை ரசிகர்களுக்கும் கொடுத்தன.
அதேநேரம் மிகவும் சிறிய முதலீட்டில் தயாரான ‘நூடுல்ஸ்’ போன்ற நல்ல படங்கள் திரையரங்க வெளியீட்டில் லாபம் ஈட்டாவிட்டாலும், சாட்டிலைட் ஓடிடி வியாபாரம் மூலமாக போட்ட முதலீட்டை ஈடுகட்டியிருக்கின்றன. இது திரையரங்கில் ரிலீஸ் செய்ததால் மட்டுமே கிடைத்த ஓடிடி வியாபாரம் என்பதை கவனிக்க வேண்டும்.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் ரூ. இரண்டு கோடித் தயாரிப்பில் உருவாகி, திரையரங்க வெளியீட்டையும் செய்ய முடியாமல், படத்தின் மொத்த உரிமைகளையும் விற்று வந்த பணம் வெறும் ரூ.5 லட்சம்கூட ஈட்ட முடியாத படங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும். இந்தப் படங்கள் அனைத்தின் மீதுமான முதலீடு கிணற்றில் போட்ட கல்தான். ஆனால், இந்தப் படங்களுக்கான உண்மையான சிக்கல் என்ன என்று ஆராய வேண்டுமே தவிர, விஷால் சொன்னார் என்பதற்காக 4 கோடிக்குள் படமெடுக்க வராமல் இருக்காதீர்கள்.
வரும்போது இதுதான் தற்போதைய சினிமா வியாபார நிலை என்பதைத் தெரிந்துகொண்டு வாருங்கள். பெரிய முதலீட்டுப் படங்களுக்கு முட்டுக்கொடுக்க நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் முகம், முந்தைய வெற்றி போன்றவை உள்ளன. சிறு முதலீட்டுப் படங்களுக்கு அவை கிடையாது. ஆகவே, நல்ல கதை, திரைக்கதை, நடிப்பு, தரமான உருவாக்கம் என எல்லாமே ஏதோ வகையில் சிறப்பாக இருக்கவேண்டிய கட்டாயம் சிறு படங்களுக்கு இருக்கிறது. தரமான சிறு படங்களின் வியாபாரம்தான் எதிர்காலத் தமிழ் சினிமாவின் நம்பிக்கை. நாளை ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமும் தோல்வியடையலாம். உதாரணம் - `ஆதி புருஷ்'.