சினிமா ரசனை 2.0 - 14: இரவில் நடமாடும் ஸோம்பி மாஸ்டர்

சினிமா ரசனை 2.0 - 14: இரவில் நடமாடும் ஸோம்பி மாஸ்டர்
Updated on
3 min read

இயக்குநர் கியர்மோ டெல் டோரோவை (Guillermo Del Toro) அறியாத சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது. பல வித்தியாசமான படங்களை எடுத்தவர். ஆஸ்கர் வாங்கியவர். சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான அவரது சீரீஸ் ‘கேபினெட் ஆஃப் க்யூரியாசிட்டீஸ்’ (Cabinet of Curiosities) பெருவெற்றி அடைந்தது. அதேபோல் அவர் இயக்கிய ‘பினோக்யோ’ ‘Pinocchio' சிறந்த அனிமேஷன் படமாக ஆஸ்கருக்குத் தேர்வு செய்யப்பட்டது.

உண்மையில் கியர்மோ டெல் டோரோ இப்போது அடைந்திருக்கும் பெரும்புகழ் அவருக்கு 2001 தொடங்கி 2008 வரை அவரது மிக முக்கியமான படங்களை அவர் எடுத்துக்கொண்டிருந்தபோதுதான் கிடைத்திருக்கவேண்டும். அவரது ‘Pan's Labyrinth’ அட்டகாசமான படம். ஆனால் பலராலும் நிராகரிக்கப்பட்டது.

அவர் இயக்கிய ஹெல்பாய் படங்கள் அற்புதமான சிஜி காட்சிகளைக் கொண்டவை. எப்போதோ ஆஸ்கர் வாங்கியிருக்கவேண்டிய இயக்குநர் அவர். இருந்தாலும் இப்போதாவது அவருக்குப் பெரும்புகழ் கிடைக்கிறதே என்று நாம் திருப்தி அடையவேண்டியதுதான்.

தடை செய்யப்பட்ட பேனர்கள்: அப்படிப்பட்ட கியர்மோ டெல் டோரோ 2014இல் எடுத்த சீரீஸ்தான் ‘தி ஸ்ட்ரைன்’ (The Strain). என்னைப் பொறுத்தவரை உலகின் திகில் சீரீஸ்களில் முதல் சில சீரீஸ்களை வரிசைப்படுத்தினால், அதில் ‘ஸ்ட்ரைன்’ சீரீஸுக்கு தவிர்க்கமுடியாத இடம் உண்டு. கியர்மோ டெல் டோரோ ஒரு திகில் மன்னர் என்பதால் இந்த சீரீஸையும் மிகுந்த விறுவிறுப்புடன் எடுத்தார்.

சீரீஸாக வெளிவரும் முன்னரே எழுத்தாளர் சக் ஹோகனுடன் சேர்ந்து மூன்று பாக நாவலாக இதை எழுதி 2009, 2010, 2011 ஆகிய வருடங்களில் கியர்மோ டெல் டோரோ வெளியிட்டார். அதற்குப் பின்னரே தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தக் கதையை விரும்பத் தொடங்கிய பின், நான்கு சீசன்கள் அடங்கிய சீரீஸாக ‘The Strain’ தயாராகி வெளியானது.

இந்த சீரீஸ் ஒளிபரப்பானபோது கியர்மோ டெல் டோரோ இதற்காக மிகப்பெரிய விளம்பர பேனர்களை உருவாக்கி அமெரிக்காவில் ஆங்காங்கே வைத்தார். அதைப் பார்த்த மக்கள் அரண்டுபோய் புகார் அளிக்க, அந்த பிரம்மாண்ட பேனர்கள் அத்தனையும் அகற்றப்பட்டன. பின்னே? பெரிய புழு ஒன்று கண்ணைத் துளைத்துக்கொண்டு அதற்குள்ளிருந்து வெளியே வருவதுபோல் மிகப் பிரம்மாண்டமாக பேனரை வைத்தால் மக்களுக்கு எப்படி இருக்கும்? அந்தப் போஸ்டர் இன்றும் மிகப் பிரபலமானது.

பறந்து வரும் ஆபத்து: ஸ்ட்ரைன் சீரீஸின் கதை எளிமையானது. பிரபல திகில் நாவலான டிராகுலாவை மையமாக வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட சீரீஸ் இது. மிகக் கொடூரமான தீயசக்தி, ஒரு பெரிய பெட்டிக்குள் அடைக்கப்பட்டு ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு விமானம் மூலமாக அனுப்பப்படுகிறது. அது அமெரிக்காவுக்கு வந்துவிட்டால் நாடே நாசமாகிவிடும். ஆனால் இது யாருக்குமே தெரியாது.

அந்த விமானம் தரையிறங்கும்போது அதில் இருந்த அனைவருமே இறந்துவிட்டிருக்கிறார்கள். இது நாடெங்கும் பரபரப்புச் செய்தியாகிறது. இந்தக் களேபரத்தில் விமானத்திலிருந்து அந்தப் பெட்டி கடத்தப்படுகிறது. அதன்பின்னர், தொண்ணூறு வயதான கிழவர் ஒருவர் இந்த வழக்கை விசாரிக்கும் மருத்துவர் எஃப்ரைமிடம் (எஃப்ரைம்தான் கதையின் ஹீரோ) வந்து, அந்தப் பெட்டியைப் பற்றிச் சொல்லி, அது உடனே அழிக்கப்படவேண்டும் என்று சொல்கிறார்.

அதேபோல் விமானத்தில் இறந்தவர்கள் அத்தனை பேரின் உடல்களையும் தீயில் இட்டு எரித்துவிட வேண்டும் என்று வற்புறுத்துகிறார். அவர் யாரென்று தெரியாமல் எஃப்ரைம் அவர் சொல்வனவற்றைக் கேட்க மறுத்துவிடுகிறார். பெட்டி வெளியே கடத்தப்பட்டதும், விமானத்தில் இறந்துபோனதாகக் கருதப்பட்ட சிலருக்குத் திடீரென்று உயிர் வருகிறது. அவர்கள் காப்பாற்றப்பட்டு மருத்துவச் சிகிச்சைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அப்போது விமானத்துக்குள் சில புழுக்கள் எஃப்ரைமுக்குக் கிடைக்கின்றன. அவற்றைப் பத்திரப்படுத்துகிறார் எஃப்ரைம்.

அந்தத் தீயசக்தியை அமெரிக்காவுக்கு அழைத்தது உலகின் பில்லியனர்களில் ஒருவரான எல்ட்ரிச் பாமர். காரணம், அவர் சாவின் விளிம்பில் இருக்கிறார். அந்தத் தீயசக்தி நினைத்தால் அவரைச் சாவிலிருந்து காத்து மரணமே இல்லாத மனிதனாக மாற்ற முடியும். இரவில் மட்டுமே நடமாடும் அந்தத் தீயசக்திக்கு மாஸ்டர் என்று பெயர். மாஸ்டர் தனக்குத் தேவைப்படும்போதெல்லாம் பிறரின் ரத்தத்தைக் குடித்து, அதன்மூலம் தன்னிடமிருந்து கொடிய புழுக்களை அதனிடம் கடிபடுபவர்களின் உடலுக்குள் செலுத்தி, அவர்களை ‘ஸோம்பி’களாக உருமாற்றிவிடுகிறது.

இப்படி ஒரு பெரும் படையே நியூயார்க் நகரின் பாதாளச் சாக்கடைக்குள் உருவாகிறது. இதனிடையே இந்த உண்மையை அந்த வயதானவரிடமிருந்து தெரிந்துகொள்ளும் ஹீரோ எஃப்ரைம், கொடூர சக்தியான மாஸ்டருடன் எப்படி மோதுகிறார்? அவரால் நியூயார்க் நகரைக் காப்பாற்ற முடிந்ததா என்பது கதை.

90 வயது சூரர்! - அந்த வயதானவரின் பெயர் ஏப்ரஹாம் செத்ராகியன். அவரது இளமையில் இதே மாஸ்டர் என்கிற தீயசக்தியிடம் சண்டையிட்டிருக்கிறார். அதனால் அவரது மனைவி ஸோம்பியாக மாற்றப்பட, அந்த மனைவியை இவரே கொன்று, அவரது இதயத்தை மட்டும் பத்திரமாக வைத்திருந்து, அந்த இதயம் உற்பத்தி செய்யும் புழுக்களைத் தனது உடலில் செலுத்திக்கொண்டு, அவற்றிடமிருந்து பெற்ற சக்தியால்தான் தொண்ணூறு வயதிலும் துடிப்பாக, மாஸ்டரைக் கொன்றே ஆகவேண்டும் என்கிற வெறியுடன் வாழ்ந்து வருபவர்.

எதிரியின் விஷத்தை எடுத்துக்கொண்டு அதனாலேயே சக்தி பெறும்படியான கதாபாத்திரம். அவரிடம் இருந்துதான் மாஸ்டர் எப்படி மனிதகுலம் உருவான காலத்தில் இருந்தே உருவானான் என்ற பின்கதை தெரியவரும். இந்த ஏப்ரஹாம் செத்ராகியன் இந்த சீரீஸின் மிக முக்கியமான கதாபாத்திரம்.

எஃப்ரைம், ஏப்ரஹாம் செத்ராகியன் ஆகியோரோடு இன்னும் சிலபேர் இணைந்து கொண்டு ஓர் அணியை உருவாக்குகின்றனர். அந்த அணி மாஸ்டரையும் அவனது கொடூரமான ஸோம்பிகளையும் எதிர்த்துப் போராடுகிறது. சிறுகச் சிறுக நியூயார்க் நகரமே முற்றிலும் அழிந்து ஸோம்பிகளின் தலைமையகமாக மாறிவிடுகிறது. பின்னர் அது மற்ற நகரங்களுக்கும் பரவுகிறது. மனிதர்கள் குறைந்துகொண்டே வருகின்றனர். நாளடைவில் பகலிலும் வெளியே நடமாடக்கூடிய திறமை ஸோம்பிகளுக்கு வந்துவிடுகிறது.

நான்கு சீசன்களில் மிகவும் விறுவிறுப்பாகச் சொல்லப்படும் கதை இது. முதலில் வந்த மூன்று புத்தகங்களையும் நான் படித்திருக்கிறேன். அதேபோல் இந்த சீரீஸ் காமிக்ஸ்களாகவும் வெளியாகின. அவற்றையும் படித்திருக்கிறேன். இந்த சீரீசில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மறக்க முடியாதது. ஒவ்வொன்றுக்கும் ஒரு பின்கதை உண்டு. ஒவ்வொன்றும் அழகாகக் கதையின் போக்கில் இணைந்துகொள்ளும். எதிர்பாராத சில சஸ்பென்ஸ்களும் சீரீஸில் உண்டு.

மிகவும் ஜாலியாகவும் ஆக் ஷன் காட்சி களுடனும் திகில் தருணங்களுடனும் எடுக்கப்பட்டிருக்கும் ‘The Strain’, எனக்கு மிகவும் பிடித்த சீரீஸ்களில் ஒன்று. என்னைப் பொறுத்தவரை உலகின் திரை ஜீனியஸ்களில் ஒருவரான கியர்மோ டெல் டோரோ, தனது அவ்வளவு திறமையையும் கொட்டி எடுத்த சீரீஸ் இது. அவரை உங்களுக்குப் பிடித்தால் இந்த சீரீஸும் பிடிக்கும்.

- rajesh.scorpi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in