

இந்தப் படத்தை ஒருவர் பார்த்தால், பண விஷயத்தில் இன்னொருத்தரிடம் ஏமாற மாட்டார். ஏமாற்றுவது தொடர்பான அவ்வளவு விஷயங்கள் இந்தப் படத்தில் சொல்லியிருப்பதாகக் கூறி ஆரம்பத்திலேயே ஆச்சரியம் அளித்தார் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் வினோத். தற்போது இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுவதால் கூடுதல் சந்தோஷத்தில் இருந்தவரிடம் உரையாடியதிலிருந்து…
‘சதுரங்க வேட்டை' படத்துல யாரைத்தான் வேட்டை ஆடியிருக்கீங்க…
பணத்தைப் பற்றிய படம்தான் ‘சதுரங்க வேட்டை'. CON படங்கள்னு சொல்வாங்க. CONFIDENTங்கிறதன் சுருக்கம்தான் CON. நம்மள நம்பவைச்சு, நம்மகிட்ட இருந்து பணத்தை அடிச்சுட்டுப் போயிடுவாங்க. இப்படியான படங்களை ஹாலிவுட்டில் CON படங்கள்னு சொல்றாங்க. பிக்பாக்கெட் அடிக்கிறவங்களைக் கூட ஹாலிவுட்டில் CON ஆர்டிஸ்ட்னு சொல்றாங்க. அந்த மாதிரி ஒரு CON ஆர்டிஸ்ட்டோட படம்தான் ‘சதுரங்க வேட்டை'.
தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த மனோபாலாவை மீண்டும் தயாரிப்பாளர் ஆக்கி இருக்கிறீர்கள். அப்படி இந்தக் கதையில் என்ன சுவாரசியம் இருக்கு?
இந்தப் படத்தோட கதையை நலன் குமாரசாமிகிட்ட கொடுத்தேன். நல்லாயிருக்குன்னு சொன்னார் . அந்தச் சமயத்துல மனோபாலா ஒரு படம் இயக்கும்படி நலன்கிட்ட கேட்டிருக்கார். நலன் மனோபாலா சார்கிட்ட கதை சொல்ல என்னை அனுப்பி வைச்சாரு.
மனோபாலா சார் என்னோட கதையைப் படிச்சிப் பிடித்துப்போய் முக்கியமான விஷயங்களை எல்லாம் நீயே முடிவு பண்ணிக்கோடான்னு சொல்லிட்டார்.
CON படங்கள்னு சொல்றாரே ரொம்ப சீரியஸா இருக்கும்னு நினைப்பாங்க. ஆனா, இது முழுக்கக் காமெடி படம். படத்துல சீரியஸ்னஸ் இருந்தாலும் காமெடியும் இருக்கும். பெண்கள் போற்றும் படமா இது இருக்கும்.
சமூகத்தில் நடக்குற எல்லா விஷயங்களுக்கும் காரணம் பணம்தான்னு நினைக்கிறீர்களா?
பணம் எல்லாத்துக்கும் தேவையா இருக்கு. அந்தப் பணத்தைச் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் பண்ணலாங்கிற இடத்துக்கு நிறையப் பேர் வந்துட்டாங்க. யோசிச்சுப் பார்த்தா நம்ம எல்லாருமே CON தான். CON படங்களைப் பாத்தீங்கன்னா எல்லாருமே ஃபான்டஸியாதான் பண்ணுவாங்க. நான் அதுல இருந்து வேறுபட்டு, ரொம்ப யதார்த்தமா பண்ணியிருக்கேன். ஒழுக்கத்தை மீறுவதால் வர்ற பிரச்சினைகளைப் பற்றி எல்லாம் பேசியிருக்கேன். பணம் மட்டும்தான் வாழ்க்கையா என்ற கேள்வி படம் முடிஞ்சு போற எல்லாருக்குமே எழும்.
இந்த மாதிரியான படங்களுக்கு வசனங்கள்தான் பெரிய பலம். வசனங்களுக்கு ரொம்ப மெனக்கிட்டு இருக்கீங்க போல?
இப்ப எல்லாம் ஒரு கோடி, ஒன்றரைக் கோடி பட்ஜெட்ல கதை சொல்லுன்னு சொல்றாங்க, அந்த பட்ஜெட்ல பெரிய மேஜிக் எல்லாம் பண்ணிட முடியாது. அப்படி இருக்குறப்போ வசனங்கள் மூலமாதான் ரீச் பண்ண முடியும்னுபட்டது. நான் தொட்ட விஷயம் ரொம்ப கனமான விஷயங்கிறதுனால எனக்கு வசனங்கள் ரொம்ப முக்கியமானதா பட்டது. ஏமாத்துறதுங்கிறது ஒரு கலைதான். பேச்சுதான் இதற்குத் தேவை. சினிமாவில் வசனங்கள் தான் தேவை. அதனால ரொம்ப மெனக்கெட்டுப் பண்ணிருக்கேன்.
ஒளிப்பதிவாளர் நட்ராஜை எப்படி இந்தப்படத்துக்குப் பிடிச்சீங்க?
‘இரண்டாவது படம்' படத்தோட தயாரிப்பாளர் தரணி இந்தப் படத்துல ஒரு கேரக்டர் பண்ணியிருக்கார். அவர்கிட்ட பேசிட்டு இருக்கும்போது, நட்ராஜ் இந்தப் படத்துல நடிச்சா நல்லாயிருக்கும்னு சொன்னேன். எனக்குத் தெரியும். நான் சொல்றேன்னு சொன்னார். என் நேரம் அந்த நேரத்துல நட்ராஜ் சென்னையில் இருந்தார். கதை சொன்னவுடனே, “எங்க இருந்தீங்க.. இவ்வளவு நாள். போன வருடம் வந்திருந்தீங்கன்னா நானே தயாரிச்சுருப்பேன்”னு சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. எப்போ ஷூட்டிங் அப்படின்னு மட்டும் சொல்லுங்க. கண்டிப்பாக நான் பண்றேன்னு சொன்னார்.
தயாரிப்பாளர், எந்த ஒரு ஹீரோ வேண்டுமானாலும் கேளு. நான் தேதிகள் வாங்கித் தரேன்னு சொல்லியிருக்கார். அப்புறம் ஏன் நீங்க நட்டியைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
எனக்கு ஏதாவது ஒரு புதுமுக நடிகரை வைச்சு பண்ணினா சரியா வரும்னு நினைச்சேன். சொன்ன நேரத்துக்கு வர்றது, சொல்ற மாதிரிச் செய்றது இப்படி நிறைய விஷயங்கள் என்னால் ஒரு புதுமுக நடிகரிடம் இருந்து கொண்டுவர முடியும். இன்னொரு விஷயம், படத்தோட வசனங்கள். அதே மாதிரி ஒரு CON ஆர்டிஸ்ட் வேடத்தில் நடித்து, அந்த வசனம் பேசுறப்போ சரியா இருக்கணும். அதுக்கு நட்ராஜ் தான் பொருத்தமா இருந்தார்.
எல்லாருமே நட்டி ஏன் நடிக்கிறார், அதான் ஒளிப்பதிவில் கோடி கோடியாய்ச் சம்பாதிக்கிறாரேன்னு கேட்குறாங்க. இந்தப் படம் வந்தவுடனே, ஏன் ஒளிப்பதிவு பண்றீங்க… நடிக்க வேண்டியதானே அப்படின்னு சொல்லக் கூட வாய்ப்பிருக்கு.
முதல் படத்தை கமர்ஷியல் படமாகப் பண்ணும் இந்தக் கால கட்டத்தில் இந்தக் கதையை நீங்கள் முதல் படமா தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
எனக்கு ரெகுலர் கமர்ஷியல் படங்கள் பண்ணுவதில் எந்த வித ஆசையும் இல்லை. ஆனால் என்னோட படங்கள் எப்போதுமே தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தக் கூடாது, படம் பார்ப்பவர்களை ஒரு சின்ன விஷயமாவது ஒரு படி மேலே கொண்டு போகணும். இந்த இரண்டும் தான் என்னோட ஆசை.
முதல் பட இயக்குநருக்குச் சின்னப் படங்கள் வாய்ப்பு என்பது மிகவும் எளிதான விஷயம். ஆனாலும் ரெகுலரான சின்ன பட்ஜெட் படங்கள் தயாரிக்க இப்போ யாரும் தயாரா இல்ல. கொஞ்சம் கதையில் புதுமை இருக்கணும்னு எதிர்பார்க்குறாங்க.
அப்படிப் புதுசா பண்ணனும்னு முடிவு பண்ணி, தினமும் பேப்பர் படிப்பேன். அப்போ, படிச்ச சில செய்திகள் எனக்குப் பெரிய ஆச்சரியமூட்டியது. ஏன் இப்படி நடக்குது அப்படின்னு நிறைய விஷயங்கள் தேட ஆரம்பிச்சபோது கிடைச்ச கதைதான் ‘சதுரங்க வேட்டை'.