Last Updated : 11 Jul, 2014 09:12 AM

 

Published : 11 Jul 2014 09:12 AM
Last Updated : 11 Jul 2014 09:12 AM

புதுமைகளின் பிதாமகன்

கே. பாலசந்தர் பிறந்ததினம் ஜூலை 9

கடந்த சில வருடங்களில் தமிழ் சினிமா எண்ணற்ற புதுமைகளைக் கண்டுவருகிறது. அவற்றுக்கெல்லாம் பிதாமகனாகக் கே.பாலசந்தரைத்தான் நான் சொல்வேன். புதுமைகளின் பிறப்பிடமும், இன்று பல இயக்குநர்களுக்குப் புதுமையாக யோசிக்க வைத்த தூண்டுகோலும் அவர்தான்.

சமீபத்தில் 84-வது பிறந்த நாள் கொண்டாடிய அவருக்குப் பணிவுடன் என்னுடைய வாழ்த்துகளைச் சொல்லி, அவர் தமிழ் சினிமாவுக்குக் கொண்டு வந்த புதுமைகளை விவரிப்பதில் பெருமை கொள்கிறேன்.

தென்னிந்தியாவில் 100 சினிமாக்களுக்கு மேல் இயக்கிய மூன்று இயக்குநர்களில் (மற்ற இருவர் தாசரி நாராயண ராவ் மற்றும் ராம. நாராயணன்), தன்னிகரில்லாத இடத்தைப் பெற்று இன்றும் ஒரு வழிகாட்டியாக இருப்பவர் பாலசந்தர்.

தன் படங்களுக்குப் பல தேசிய விருதுகளையும், மாநில விருதுகளையும், பத்ம மற்றும் சினிமாவில் உயர்ந்த விருதான தாதா சாஹெப் பால்கே விருதையும் பெற்று, இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பல சாதனைகளைச் செய்துவருபவர் அவர். அவற்றில் புதுமைகளை ஒரு சாதனையாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

பாலசந்தர் படம் என்ற முத்திரை

அவர் தமிழ் சினிமாவுக்கு வரும்வரை, இயக்குநர்களுக்கு என்று ஒரு தனிப் பாணி, தனி இடம் அவ்வளவாக இருந்ததில்லை. இயக்குநர்களில் பலர், பெரிய நடிகர்களையே சார்ந்து இருந்தனர். அவர்களில் சிலர், வேறு ஒருவரின் கதை-திரைக்கதையை எடுத்துக் கொண்டு, படங்களை இயக்கி வந்தவர்கள்.

பாலசந்தர்தான், தொடர்ந்து படங்களை எழுதி, இயக்கி, தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்ட முதல் கதை, திரைக்கதை ஆசிரியர். தன் படங்களின் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, ‘கே. பாலசந்தர் படம்’ என்ற முத்திரையைக் கொண்டு வந்து, அதற்கே பெரிய கைத்தட்டல்களை வாங்கியவர்.

இயக்குநர்களுக்குத் தமிழ் சினிமாவில் முதல் மரியாதையை ஏற்படுத்தித் தந்தவர். அவரைப் பின்தொடர்ந்த பல இயக்குநர்களுக்கு, அவர் போலத் தனி முத்திரை பெற வேண்டும் என்ற உந்துதலைத் தந்தவர். 1960 மற்றும் 1970-களில் எம்.ஜி.ஆர் சிவாஜி என்ற இரண்டு மலை போன்ற நடிகர்கள் ஆதிக்கம் செலுத்திவந்த தமிழ் சினிமாவில், அவர்களின் எந்த ஆதரவும் இல்லாமல் (எடுத்துக் கொள்ளாமல்) தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து அதை 30 வருடங்களுக்கு மேல் தக்க வைத்துக் கொண்டவர்.

அதுவரை எம்.ஜி.ஆர் படம், சிவாஜி படம் என்று மட்டுமே மக்களால் சொல்லப்பட்ட தமிழ் சினிமாவை, கே.பாலசந்தர் படம் எனவும் சொல்ல வைத்தவர்.

புதுப்புது கதைகள்/களங்கள்

பாலசந்தர் ஒரே மாதிரிக் கதைகளை (குடும்பக் கதைகள், வெகுஜனப் படங்கள், காதல் படங்கள் என்று) படம் எடுத்து வந்ததில்லை. அவரின் ஒவ்வொரு படமும் வேறு வேறு கதைகளை எடுத்துக் கொண்டு, புதுமையான களத்தில் தரப்பட்டது.

நீர்க்குமிழியில் (1965) தொடங்கிய அவரின் இயக்கப் பணி, மேஜர் சந்திரகாந்த் (1966), பாமா விஜயம் (1967), எதிர் நீச்சல் (1967), இரு கோடுகள் (1970), நூற்றுக்கு நூறு (1971), புன்னகை (1971), அரங்கேற்றம் (1973) எனத் தொடர்ந்து, சிந்து பைரவி (1985), புன்னகை மன்னன் (1986), உன்னால் முடியும் தம்பி (1988), புதுப் புது அர்த்தங்கள் (1989), ஒரு வீடு இரு வாசல் (1990), வானமே எல்லை (1993) என வேறு வேறு கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. கடைசியாக அவர் இயக்கிய பொய் (2006) வரை இதே பாணிதான் தொடர்ந்தது. மேலும் தொடரும் என எதிர்பார்ப்போம்.

புதுப்புது நடிகர்கள்/தொழில்நுட்பக் கலைஞர்கள்:

கே. பாலசந்தரின் சிறப்பே புதுப்புது நடிகர்களைத் தன் படங்களில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு ஒரு நல்ல இடத்தைத் தமிழ் சினிமாவில் உருவாக்கித் தருவதுதான். யாரைச் சொல்வது, யாரை விடுவது? இன்று தமிழ் சினிமாவில் கோலோச்சும் பலரும் அவரின் கண்டுபிடிப்புதான் (ரஜினிகாந்த், கமல் ஹாசன், பிரகாஷ் ராஜ், ரமேஷ் அரவிந்த், விவேக், நாஸர், இயக்குநர்கள் வஸந்த், சுரேஷ் கிருஷ்ணா, இயக்குநர் சரண், இயக்குநர் சமுத்திரக்கனி, அவரின் தயாரிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் எனப் பலர்). அவரின் கண்டுபிடிப்புகள் சோடை போனதே இல்லை.

பெண்களை மையப்படுத்திய படங்கள்

அவரது மிகப் பெரிய புதுமை, பெண்களை மையப்படுத்தி, அவர்களுக்குப் பெருமை சேர்த்த பல படங்களை இயக்கியதுதான். ஒரு முதன்மையான கதாநாயகனையே நம்பி இருந்த தமிழ் சினிமாவைத் திசை திருப்பி, நல்ல கதைகளில், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அவை ஓடும் என்பதைப் பலமுறை நிரூபித்தவர் பாலசந்தர்.

இரு கோடுகள், அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னி சாட்சி, சிந்து பைரவி, கோகிலம்மா, மனதில் உறுதி வேண்டும், கல்கி எனப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். அவரைப் போன்று பெண்களையும், அவர்களின் பிரச்சினைகளையும் மையப்படுத்தி அதிகப் படம் எடுத்தவர் தமிழில் எவரும் இல்லை.

சமுதாய மாற்றத்துக்காகப் படங்கள்

ஒரு இயக்குநர் திரைப்படங்களைப் பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமே எண்ணாமல், அதன் மூலம் சமுதாய மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்று தன் படங்களின் மூலம் உணர்த்தியவர். பாலசந்தரின் பல படங்கள் சமுதாய மாற்றங்களைக் குறி வைத்து எடுக்கப்பட்டு வெற்றி கண்டவை. நேர்மையின் அவசியத்தை உணர்த்திய புன்னகை (1971), குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தைப் புரிய வைத்த அரங்கேற்றம் (1973), பெண் சுதந்திரத்தை வலியுறுத்திய அவள் ஒரு தொடர்கதை (1974) மற்றும் அவர்கள் (1977), சமுதாயத்தின் கீழ்த் தட்டு மக்களின் பிரச்சினைகளை முன் வைத்த தப்புத்தாளங்கள் (1978), வேலை இல்லாத படித்தவர்களுக்கு ஒரு பாடமாக வறுமையின் நிறம் சிவப்பு (1980), மக்களின் தண்ணீர் பிரச்சினையை முன்வைத்த தண்ணீர் தண்ணீர் (1981), சமகால அரசியலில் உள்ள ஊழல் மற்றும் கட்சி மாற்றங்களின் பிரச்சினைகளைச் சாடிய அச்சமில்லை அச்சமில்லை (1984), விவசாயத்தின் அவசியத்தையும், படித்தவர்கள் தன் கிராமங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் முன் வைத்த உன்னால் முடியும் தம்பி (1988), பிரச்சினைகளுக்குத் தற்கொலை ஒரு முடிவு அல்ல என்பதை உணர்த்திய வானமே எல்லை (1993), ஜாதி மத துவேஷங்களுக்கு எதிரான ஜாதி மல்லி (1993) எனப் பல படங்களை உதாரணம் காட்டலாம்.

கதை சொல்வதில் புதுமை

அவரது பல படங்களின் திரைக்கதைகள், 10 முதல் 20 வருடங்களுக்குப் பிறகு வர வேண்டியவை. ஆனால், பார்வையாளர்களின் ரசிப்புத் தன்மையில் முன்னேற்றம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில், அவர்களை வெகுஜன சினிமாக்களில் மட்டும் இறுக்கி விடாமல், புதுச் சிந்தனை உள்ள படங்களை அறிமுகம் செய்தவர் பாலசந்தர். அதனால்தான், அவரின் பல படங்கள் ஒரு டிரெண்ட் செட்டராக மாறின.

பாடல்கள் மூலம் கதை சொல்லிப் பார்வையாளர்களுக்குப் புரிய வைக்கும் உத்தியைக் கொண்டு வந்தவர் அவர். புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் (இரு கோடுகள்), இருமனம் கொண்ட திருமண வாழ்வில்… (அவர்கள்), ஆண்டவனின் தோட்டத்திலே… (அரங்கேற்றம்), கேள்வியின் நாயகனே (அபூர்வ ராகங்கள்) எனப் பல படங்களில் பாடல்கள் மூலம் மொத்தப் படத்தின் கதையைச் சொல்லிய அவரின் உத்தியை இன்று வரை யாராலும் பின்பற்ற முடியவில்லை. அது மட்டுமில்லாமல், தன் படங்களில் நகைச்சுவை மற்றும் காதல் காட்சிகளில் அவர் கொண்டு வந்த புதுமைகளைப் பற்றித் தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம்.

பிற மொழிகளில் நேரடி படங்கள்:

தமிழில் வெற்றி அடைந்த படங்களின் மறு ஆக்கத்தை மட்டும் வேறு மொழிகளில் தமிழ் இயக்குநர்கள் உருவாக்கி வந்த நிலையை மாற்றி, அந்த மொழி மக்களுக்கான கதையை உருவாக்கி, அந்த மொழியிலே தந்தவர். சில உதாரணங்கள்: மரோசரித்திரா, கோகிலம்மா, தொலி கோட்டி கோசுந்தி, ருத்ரவீணா எனப் பல தெலுங்குப் படங்கள்.

தன் படைப்புகள் மூலம் சாதனை புரிந்துவந்த அதே நேரம், தன்னை ஒரு படைப்பாளியாக நிலை நிறுத்திய தமிழ் சினிமாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்தும் பாலசந்தர் விலகியதில்லை. அதனால்தான், தென்னிந்திய பிலிம் சேம்பரின் தலைவராகவும், அதன்பின், பிலிம் உழைப்பாளிகளின் சங்கத்தின் தலைவராகவும் பணி புரிந்தார்.

தமிழ் சினிமாவின் இந்தப் பிதாமகன் நம் போற்றுதலுக்கு உரியவர். அவர் பல வருடங்கள் வாழ்ந்து மேலும் பல புது வகைப் படங்களைத் தந்து, பல இளம் இயக்குநர்களுக்கு உந்து சக்தியாக இருந்து, தமிழ் சினிமாவைப் பெருமைப்படுத்த இந்த நேரத்தில் வாழ்த்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x