

கரோனா கால கட்டத்துக்கு முன் (க.மு), கரோனா கால கட்டத்துக்குப் பின் (க.பி) எனத் தமிழ் திரையுலகம் கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில் பெரும் தாக்கங்களைப் பெற்றுள்ளது. அதன் விளைவாகக் கண்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பார்ப்போம்.
1. பான் இந்தியா: ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து , பான் இந்தியப் படங்களாக வெளியான ‘ஆர்ஆர்ஆர்’, ‘கே.ஜி.எஃப் 2’ ‘காந்தாரா’ ஆகியவற்றின் வெற்றி, மிக பெரிய வணிக மாற்றத்தைத் தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளது. இங்கேயும் பான் இந்தியப் படங்களை அதிகப் பொருள்செலவில் எடுத்து, இந்தியா முழுவதும் விளம்பரப்படுத்தி வெளியிடும் முயற்சியில் பல பெரிய படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள் இறங்கியிருக்கிறார். அடுத்து வரப்போகும் ‘லியோ’, ‘இந்தியன் 2’, ‘கங்குவா’ உள்பட பல படங்கள் இம்முயற்சியில் உள்ளன.
2. இண்டஸ்ட்ரி ஹிட்: இது வரை,பிளாக் பஸ்டர் வெற்றி, 100 கோடி கிளப் என மாஸ் படங்கள் பெற்றுவந்துள்ள வசூல் வெற்றியை அறிவோம். தற்போது ‘இண்டஸ்ட்ரி ஹிட்’ என்கிற வரலாறு காணாத வெற்றியைப் பெற கோலிவுட்டின் மாஸ் படங்கள் முயல்கின்றன.
இந்த வரிசையில் 2022இல் ‘விக்ரம்’ திரைப்படம் ‘இண்டஸ்ட்ரி ஹிட்’டாக மாறியது. அடுத்துவந்த ‘பொன்னியின் செல்வன்1’, ‘விக்ர’மின் வசூல் சாதனையை முறியடித்து, தமிழ் சினிமாவின் ‘நம்பர்.1’ வசூல் படம் என்கிற சாதனைப் படைத்தது. 2023இல் வெளிவந்த ‘ஜெயிலர்’, ரூபாய் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து, முதலிரண்டு படங்களின் சாதனையை முறியடித்துள்ளது. ‘ஜெயிலர்’ படத்தின் சாதனையை விஜயின் ‘லியோ’ படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. எகிறும் செலவு: ‘இண்டஸ்டரி ஹிட்’ என்பது காலந்தோறும் மாறுவது போல், படத்துக்குப் படம், நடிகர்களின் சம்பளம் பல மடங்கு உயர்வது, இன்று தமிழ் சினிமா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஒரு நடிகரின் படம் வெற்றி பெற்ற உடனே, அடுத்தப் படத்துக்கான அவரின் சம்பளம் 35 முதல் 100 சதவீதம் உயர்ந்தப்பட்டுவிடுவது தமிழ் சினிமாவில் மட்டுமே நடக்கும்.
இந்த சம்பள உயர்வுகள், திரைப்படத் தயாரிப்பின் செலவுகளையும் 35 முதல் 200 சதவீதம் வரை கடந்த ஐந்து வருடங்களில் உயர்த்தியுள்ளது. இது தயாரிப்பாளர்களுக்குப் பெரும் சுமையாக மாறி, லாபம் வருகிறதோ இல்லையோ, போட்ட முதலீட்டையாவது எடுத்தால் போதும் என்கிற சூதாட்ட நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது.
4. டிஜிட்டலின் (OTT) தாக்கம்: ஐந்து வருடங்களுக்கு முன்னர் தொடங்கி (2017-18), டிஜிட்டல் (OTT) உரிமை, சாட்டிலைட் உரிமையுடன் இணைத்து வாங்கப்படுவது நடைமுறையானது. விளைவாக, பல சிறு - மீடியம் பட்ஜெட் படங்களின் டிஜிட்டல் உரிமைகளுக்கு கிடைத்து வரும் விலை, அந்தப் படங்களின் தயாரிப்புச் செலவுக்கு இணையாக இருப்பதால், டிஜிட்டல் உரிமை எப்படியாவது விற்று விடும் என்கிற நம்பிக்கையில் இன்று பல படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஆனால், எதிர்பார்த்தது போல் டிஜிட்டல் தரப்பில் பல படங்களை வாங்க மறுத்துவிடுவதால், தயாரிப்பாளர்கள் நிதிப் பிரச்சினையில் வீழ்வதும் நடந்து வருகிறது. டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதரவான கண் அசைவை நம்பி இன்று பல தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
5. விரிவான சந்தை: கரோனா கால கட்டத்தில் ‘சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘மகான்’, ‘ஜகமே தந்திரம்’ எனப் பெரிய நடிகர்கள் நடித்தப் படங்களும் டிஜிட்டல் (OTT) பிரீமியர் முறையில் மக்களின் பார்வைக்கு நேரடியாக வந்தன. இதன்மூலம் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரேநேரத்தில் பெரிய திரைப்படங்கள் பார்க்கப்பட்டன. இந்தப் படங்களின் வீச்சு, தமிழ் சினிமாவுக்கு அதன் வியாபார எல்லைகள் விரிவடைய உதவியது. தற்போது தமிழ் சினிமா, பல புதிய நாடுகளில் வெளியிடப்படுவதற்கு, கடந்த சில வருடங்களில் அது அடைந்த இவ்வகை வீச்சு ஒரு முக்கியக் காரணம்.
6. சிக்ஸர் - கிளீன் போல்ட்: கரோனா காலகட்டத்துக்குப் பின் மக்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்க விரும்பினால், அதிக அளவில், கூட்டம் கூட்டமாகப் போய் பார்த்து அதைப் பெரிய அளவில் வணிக வெற்றியடைய வைப்பதும், ஏதாவது ஒரு காரணத்தால் அவ்வாறு பார்க்க விரும்பாவிட்டால் மொத்தமாக நிராகரிப்பதும் சமீபத்திய ரசனையின் ஆபத்தான போக்கு. சராசரிப் படங்களை, அவை டிஜிட்டலில் (OTT) வெளியாகும் போதுப் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலை மக்களிடையே பரவலாக உருவாகிவிட்டதே இதற்கு முக்கியக் காரணம்.
7. சறுக்கும் சாட்டிலைட்: ஒரு காலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான உரிமையை நம்பி பல தயாரிப்பாளர்கள் புதிய படங்களை எடுத்தனர். இன்று டிஜிட்டல் உரிமை காரணமாக, சாட்டிலைட் உரிமைகளின் விலையும் குறைந்துவிட்டது. முக்கியமான, வெற்றியடைந்த திரைப்படங்களை மட்டுமே, தொலைக்காட்சி நிறுவனங்கள் வாங்கும் நிலை உருவாகிவிட்டது இன்றைய தயாரிப்பாளர்களுக்கு முதலீட்டை மீட்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.
8. வருவாயில் பங்கு: சில டிஜிட்டல்/ஓடிடி நிறுவனங்கள், படங்களை விலைகொடுத்து வாங்கிக்கொள்வதற்குப் பதிலாக, ’உங்கள் படத்தை எங்கள் தளத்தில் வெளியிட இடம் தருகிறோம். ஆனால், சந்தா செலுத்தியோ, அல்லது ஒரு முறைக் காண கட்டணம் செலுத்தியோ பார்வையாளர் முன் வந்தால், அந்த வருவாயில் உங்களுக்கு உரிய பங்கைத் தருகிறோம் (Pay per view) என்று சொல்லத் தொடங்கிவிட்டன. இந்த முறை எல்லா டிஜிட்டல் நிறுவனங்களாலும் நிர்ப்பந்திக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.
9. உள்ளடக்கம் - உருவாக்கம்: டிஜிட்டல் படப்பதிவின் வளர்ச்சியால் சினிமா கலை குறித்த முழுமையான பட்டறிவோ, படைப்பாக்கத் திறனோ இல்லாமல், இன்று பணம் வைத்திருக்கும் யாரும் திரைப்படம் எடுக்கலாம் என்கிற முழு ஜனநாயக நிலை திரையுலகில் உருவாகிவிட்டது. அப்படிப்பட்டவர்களால் உருவாக்கப்படும் ஆர்வக்கோளாறு படங்களைப் பார்த்து நொந்துபோன மக்கள், உள்ளடக்கம், உருவாக்கம் இரண்டிலும் சிறந்து விளங்கும் பல ஃபீல் குட் படங்களையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.
ஒரு திரைப்படம் நன்றாக இருந்தால் மட்டுமே, திரையரங்கில் பார்ப்போம் என்கிற மக்களின் கறார் மனநிலை இதுபோன்ற தரமான சிறு படங்களை உருவாக்க முயலும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் சவாலான ’ரிலீஸ்’ சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
10. சவால் தொழில்: இன்றைய திரையரங்கத் தொழிலில் மின் கட்டணம், பராமரிப்புக் கட்டணம், ஊழியர்களுக்கான ஊதியம் ஆகியன அதிகரித்துவிட்டதில், அது சவாலான தொழிலாக மாறிவிட்டது. இந்நிலையில், மக்களுக்கு ஓரளவுக்காவது பரிச்சயமான நடிகர்கள் நடித்த படங்களை வெளியிட்டால் மட்டுமே கேண்டீன் வியாபாரம், பார்க்கிங் கட்டணம் ஆகியவற்றின் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும், கையைக் கடிக்காது என்பதில் திரையரங்குகளை நடத்துவோர் தெளிவாக இருக்கிறார்கள்.
இதனால் தரமான சிறு படங்களுக்கும் அதிக காட்சிகளை ஒதுக்குவதில்லை. இப்படிச் சமீப காலத் தமிழ் சினிமா பல பிரச்சினைகளைச் சந்தித்தாலும் விரிவடைந்து வரும் உலகச் சந்தை, டிஜிட்டல் உரிமையின் விலை, ஆடியோ உரிமையின் விலை, வெளிநாட்டு உரிமை எனப் பல விதங்களில் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதால், பல புதிய தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமா நோக்கி வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.